ஊடகப்படுகொலைகள்:ரணிலிற்கு சுடலை ஞானம்?


கோத்தபாயவின் மீள்வருகையினையடுத்து தெற்கில் மீண்டும் ஊடகப்படுகொலைகளிற்கு நீதிகோரும் குரல்கள் ஒலிக்கத்தொடங்கியுள்ளன. ஊடகவியலாளர்களது கொலை, கடத்தலுக்குப் பொறுப்பானவர் பாதுகாப்பான நாட்டை உருவாக்குவாரா என தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனாலும் கடந்த நான்கு வருடங்களாக உறக்கநிலையில் இருந்த ரணிலிற்கு மீண்டும் ஊடகப்படுகொலைகள் பற்றி பேசி அரசியல் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாவென ஊடக செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நாட்டில் பிறந்த ஒவ்வொரு பிரஜைக்கும் அச்சம், பயம் இல்லாத பாதுகாப்பான நாட்டை கட்டியெழுப்பப்போவதாக உறுதியளித்துள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக், கடந்த ராஜபக்சஷ ஆட்சியின்போது இடம்பெற்ற அனைத்து பாவச் செயல்களுக்கும் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரிவிட்டுத்தான் வந்திருக்கிறாரா எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று கேள்வி எழுப்பியிருந்தார்.

சுயாதீனமான நீதிமன்ற செயற்பாடுகள், தகவல் அறியும் உரிமையை உறுப்படுத்தி, சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்து, காணாமற்போனோருக்கான அலுவலகம் திறந்து வைத்தமைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்துதல் உள்ளிட்ட ஜனநாயக சுதந்திரத்தை நாட்டில் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த பிரதமர், தற்போது அறிமுகமானவர் நாம் பெற்றுக்கொடுத்திருக்கும் சுதந்திரத்தை அழிக்க வந்தவர் என்றும் குறிப்பிட்டார். சுதந்திரத்தைப் பாதுகாப்பதாகச் சிலர் வார்த்தைகளால் கூறினாலும் உண்மையில் சுதந்திரத்தை ஏற்படுத்தியது யார் என்பதை நாட்டு மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

ரவிராஜ், சிவராம், லசந்த விக்கிரமதுங்க மற்றும் தாஜூதீன் படுகொலை, எக்னலிகொடவை கடத்தி காணாமலாக்கியமை, ஊடகவியலாளர் கீத் நொயர் மற்றும் பத்திரிகை ஆசிரியர் உப்பாலி தென்னகோனை தாக்கியமை, சிரச மற்றும் உதயன் ஆகிய ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தியமை, குடிப்பதற்குத் தூய நீர் கோரிய ரத்துபஸ்வெல மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியமை, வெலிக்கடை சிறைக்கைதிகளை கொலை செய்தமை, வெள்ளை வேன் கொண்டு கடத்தியமை, முன்னாள் பிரதம நீதியரசரை பதவி விலக்கியமை என்பன ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட மிகக் கொடூரமானதும் பாரதூரமானதுமான குற்றச் செயல்களாகும். இதற்காக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

தேர்தல் அண்மித்துள்ள நிலையில் ரணிலின் கருத்துக்கள் மீண்டும் மனித உரிமைகள் பற்றியதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments