உலகின் முதல் "தேசியப் பூங்கா நகரமாகும்" (National park city) லண்டன்: சுந்தர்ராஜன்

இறையாண்மை உள்ள அரசுகள் தேசிய பூங்காக்கள் அமைத்து அல்லது அறிவித்து இருப்பதை கேள்விப்பட்டிருப்போம், ஆனால்  நகர நிர்வாகம் "தேசிய பூங்கா" குறித்து அறிவித்திருப்பது இதுவே முதல் முறை.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் புவியில் பேராசிரியர் டேனியல் ராவின் எலிசன் என்ற லண்டன் நகரத்து வாசியின் எண்ணத்தில் திடீரென்று உதித்ததுதான் இந்த யோசனை. அவருடைய வலைத்தளத்தில் இந்த யோசனை குறித்த கட்டுரையை வெளியிட்டு இருந்தார். அந்த கட்டுரை பல்வேறு தரப்பு மக்களையும் ஈர்த்தது,  அனைத்துத்தரப்பு மக்களும் அந்த கருத்தை ஏற்றுக்கொண்டனர், இந்த பிரச்சாரங்களின் மூலமாக சுமார் 32,000 பவுண்டுகள் கூட்டு நிதியாக (crowd funding) வசூலானது. மக்களிடம் இந்த யோசனை பெற்ற வரவேற்பை ஒட்டி சில வாரங்களுக்கு முன்னர் லண்டன் நகர தந்தை இந்த யோசனையை ஏற்றுக்கொண்டு லண்டன் நகரை "தேசிய பூங்கா நகரமாக" அறிவித்தார்.

இந்த யோசனையை முதன்முதலில் விதைத்த புவியலாளர் தெரிவிக்கையில், லண்டன் நகரம் அதன் 90லட்சம் மக்களுக்கு மட்டும் சொந்தமானது இல்லை. பல்லாயிரக்கணக்கான மரங்கள், 15,000க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் என அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானதுதான் என்கிறார். நகரத்தில் வாழ்வதாலேயே கிராமப்புறங்களில் கிடைக்கும் இயற்கையுடனான வாழ்க்கை கிடைக்கக்கூடாது என்றில்லை, இந்த எண்ணமே தன்னுடைய கட்டுரைக்கு அடிப்படையாக அமைந்தது என்கிறார் அவர்.

தேசிய பூங்கா நகரமாக அறிவித்திருப்பாலேயே அனைத்து வானுயர்ந்த கட்டிடங்களும் இடிக்கப்பட்டுவிடும் என்றெல்லாம் இல்லை என்கிறார் நகர தந்தை. தனிவீடுகளில் உள்ள பசுமை, கோல்ப் மைதானங்கள் இயற்கை வாழ்விடங்கள் என ஏற்கனவே லண்டன் நகரின் பரப்பளவில் சுமார் 47% பசுமைபோர்வை உள்ளது, இதில் 18% பொதுப்பூங்காக்களும் அடக்கம்.

தேசிய பூங்கா நகரமாக அறிவித்திருப்பதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று, புல் மற்றும் தாவரங்களால்  மூடப்பட்ட அதிகமான பசுமை கூரைகள் மற்றும் சுவர்கள், வெள்ளத்தைத் தடுக்க "மழை தோட்டங்கள்" மற்றும் வனவிலங்குகளின் வாழ்விடங்கள் என இவை அனைத்தையும் இணைத்து லண்டனின் மொத்த பரப்பளவில் பாதிக்கும் மேற்பட்ட நிலப்பரப்பை பசுமையாக்குவது.

இது சாத்தியப்படுமா அல்லது ஏன் தேவை?

லண்டன் நகரம் சுற்றுச்சூழல் மாசால் மூச்சு திணறி நிற்கிறது, சுற்றுச்சூழல் மாசுபாட்டால் வருடத்திற்கு 30,000 கோடிக்கும் அதிகமாக செலவாகிறது இதுதவிர ஒவ்வொரு வருடமும் சுமார் 9,000 மக்கள் மாசால் உயிரிழக்கிறார்கள். பலமுறை நகரத்திலுள்ள காற்றிலுள்ள "நைட்ரஜன் டை ஆக்சைடு" அளவு ஐரோப்பிய ஒன்றியம் வகுத்துள்ள அளவுகளை தாண்டி சென்றுவிடுகிறது. பசுமை போர்வை அதிகரிக்க அதிகரிக்க "சுகாதார துறையில்" தேவைப்படும் முதலீடுகள் குறையும், மக்களின் ஆயுள்காலம் அதிகரிக்கும். தேசிய பூங்கா நகரமாக அறிவித்திருப்பது லண்டன் நகரத்துவாசிகளை இயற்கையை நேசிக்க உந்துதலாக இருக்கும், இயற்கையை பேணிக் காப்பாற்ற அவர்களுக்கு இது ஒரு அவசியமான அறிவிப்பும் கூட.

தேசிய பூங்கா நகர அறக்கட்டளை லாப நோக்கு இல்லாத அறக்கட்டளையாக பதிவுசெய்யப்பட்டுள்ளது, இம்மாதிரியான அறிவிப்பை வலியுறுத்த மற்ற நகரங்களுக்கும் இதை விரிவாக்க போவதாக அறிவித்திருக்கிறார்கள் அதன் அமைப்பாளர்கள், சான் பிரான்சிஸ்கோ, கிளாஸ்கோ என்று பல்வேறு நகரங்களையும் இதன் கட்டமைப்புக்குள் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எந்தவொரு நகரமும் ஒரு தேசிய பூங்கா நகரமாக இருக்கக்கூடும், அது ஒரு வலுவான குடிமை சமுதாயத்தையும் பிராந்திய அரசாங்கத்தையும் கொண்டிருந்தால், நகரத்தை பசுமையான, ஆரோக்கியமான வனப்பகுதியாக மாற்ற தன்னால் முடிந்த அனைத்தையும் தீவிரமாக செய்து வருமேயானால் எந்த நகரத்தையும் தேசிய பூங்கா நகரமாக மாற்றமுடியும் என்கிறார் புவியலாளர் எல்லிஸின்.

இந்தியாவில், மாநகர எல்லைகளுக்குள் "அறிவிக்கப்பட்ட தேசிய பூங்கா" இருக்கும் நகரங்களில் சென்னையும் ஒன்று, நம் நகரமும் இதைப்போன்ற நகர்வுகளை மேற்கொண்டால் வரக்கூடிய வெள்ளத்திலிருந்தும், தண்ணீர் பஞ்சத்திலிருந்தும் சிக்கிக்கொள்ளாமல் இந்த உலகத்திற்கு எடுத்துக்காட்டான நகரமாகமுடியும்.

இதைநோக்கி நகருமா சென்னை நகர நிர்வாகம் ?

No comments