சுயநலத்திற்காக எந்த முடிவும் எடுத்தது இல்லை! வைகோ உருக்கம்...

சுயநலத்திற்காக எந்த முடிவும் எடுத்தது இல்லை என ஊடகவியலாளர்களை சந்தித்த வைகோ மனமுருகியுள்ளார்”
மேலும் அங்கு தெரிவித்த கருத்துக்கள்;

என் உயிரினும்மேலான இரத்த அணுக்களான, இலட்சோபலட்சம் கழகக் கண்மணிகள், மாநிலங்கள் அவைத் தேர்தலுக்கு என்னுடைய வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற செய்தியால் மகிழ்ச்சி அடைந்து இருக்கின்றார்கள். கழகத்தின் அவைத்தலைவர் ஆருயிர் அண்ணன் திருப்பூர் துரைசாமி முதல், கன்னியாகுமரியின் கடைகோடியில் இருக்கின்ற கழகக் கண்மணி வரை, தாங்களே நாடாளுமன்ற உறுப்பினர் ஆனதைப் போன்ற உணர்வைப் பெற்று மகிழ்கின்றார்கள். இதுதான், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வலிமை ஆகும்.

நான் வெற்றி தோல்விகளை சமமாகக் கருதுபவன். உயர்வு, தாழ்வுகளைக் கடந்து செல்வதுதான் வாழ்க்கை என்பதை உணர்ந்து கொண்டவன். இன்று வந்த செய்தி மகிழ்ச்சி என்றாலும்கூட, இதுவே வேறு விதமாக வந்திருந்தால், அதையும் ஏற்றுக்கொள்கின்ற மனப்பக்குவத்தை, 55 ஆண்டுக்காலப் பொது வாழ்க்கையில் பெற்று இருக்கின்றேன். ஏடுகள், ஊடகங்களின் செய்தியாளர்கள் எல்லோரும், நான் நாடாளுமன்ற மாநிலங்கள் அவைக்குச் செல்ல வேண்டும் என எவ்வளவு  விரும்பினார்கள் என்பதை நன்றாக அறிவேன்.

அரசியல் கட்சிகளைக் கடந்து, சாதி மத எல்லைகளைக் கடந்து, தமிழ் அன்பர்கள், தாய்த் தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஏக்கத்தோடு இருப்பவர்கள், இந்த பூமிப்பந்தில் தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லையே? தமிழனுக்கு என்று ஒரு நாடு அமைய வேண்டும்; அது தமிழ் ஈழத் திருநாடாக இருக்க முடியும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டு இருப்பவர்கள் அனைவருமே, நான் நாடாளுமன்ற மாநிலங்கள் அவைக்குச் செல்ல வேண்டும் என விரும்பியதையும் நான் நன்கு அறிவேன்.

தமிழகம் மிகுந்த ஆபத்துக்கு உள்ளாகி இருக்கின்றது. மேகேதாட்டுவில் கர்நாடகம் புதிய அணை கட்டினால், அதன்பிறகு நமக்கு சொட்டுத் தண்ணீர் வரப்போவது இல்லை. ஹைட்ரோ கார்பன் திட்டம், காவிரி தீரத்தைப் பாலைவனமாக ஆக்கி விடும். பத்தாயிரம் அடிகள் ஆழத்திற்குத் துளை கிணறுகள் தோண்டி, அதில் 634 வேதியியல் நச்சுப் பொருட்களைக் கலந்து, ஒரு நாளைக்கு 2 கோடி லிட்டர் தண்ணீர் ஒரு கிணற்றுக்குள் செலுத்தப்படும். அது ஒட்டுமொத்தமாக தஞ்சை மண்டலத்தையே நச்சுநிலமாக ஆக்கி விடும். அதன்பிறகு விவசாயிகள், விளைச்சலும் இல்லை, தண்ணீரும் இல்லை என்ற நிலையில் நிலங்களை விற்று விடுவார்கள். பெருமுதலாளிகள், வேதாந்தா உள்ளிட்ட கார்பரேட் நிறுவனங்கள், அந்த நிலங்களை விலைக்கு வாங்கி விடுவார்கள். இந்திய அரசுக்கு 50, 100 ஆண்டுகளுக்கு இலட்சக்கணக்கான கோடி வருமானம் கிடைக்கும். கார்பரேட் கம்பெனிகளுக்குப் பல ஆயிரம் கோடிகள் கிடைக்கும்.

இந்த ஆபத்தில் இருந்து தமிழகத்தை மீட்பது எப்படி? கூடங்குளத்தில் அணு உலை அமையப்போகிறது என்ற அறிவிப்பு வந்தபோது, அதை எதிர்த்து, 1988 நவம்பர் 21 ஆம் தேதி, இந்திய நாடாளுமன்றத்தில் ஒலித்த ஒரே குரல், என்னுடைய குரல்தான். வேறு யாரும் எதிர்க்கவில்லை. அப்போது அன்றைய தலைமை அமைச்சர் ராஜிவ்காந்தி அவர்களும் இருந்தார்கள். இனி கூடங்குளத்தில் அணுக் கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டப் போகின்றார்கள் என்பது, ஒரு அணுகுண்டைக் கொண்டு வந்து போடுவதற்குச் சமம்.

இதைப்போலவே, முல்லைப்பெரியாறு அணையில் நாம் பெற்று இருந்த உரிமைகளை இழக்கின்ற விதத்தில், அதை இடித்துவிட்டு புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த, நடுவண் அரசு ஒப்புதல் அளித்து இருப்பது, திட்டமிட்ட சதி. பென்னி குயிக் கட்டிய அணை  பலமாக இருக்கின்றது; இனி எந்த ஆபத்தும் இல்லை; புதிய அணை தேவை இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறியபிறகும்கூட, கேரள அரசு, புதிய அணை கட்ட விண்ணப்பித்து, அதற்கு ஆய்வு செய்ய நடுவண் அரசு ஒப்புதல் அளித்து இருக்கின்றது. முல்லைப்பெரியாறு அணையை உடைப்போம் என்று கேரள அரசு அறிவித்து விட்டது.

இவை அனைத்தையும் விட, இந்திய மக்கள் ஆட்சிக்கோட்பாட்டின் அடித்தளமாக இருக்கின்ற மதச்சார்பு அற்ற தன்மைக்குப் பேராபத்து ஏற்பட்டு இருக்கின்றது. இந்தி, இந்து, இந்து ராஷ்டிரா என்பதை நிலைநாட்டி விட வேண்டும் என்ற இந்துத்துவ சக்திகளின் பிரதிநிதியாக, நரேந்திர மோடி அவர்களின் அரசு தீவிரமான முயற்சிகளின் ஈடுபட்டு வருகின்றது. சமூக நீதியைக் குழி தோண்டிப் புதைப்பதற்காக, முற்பட்ட வகுப்பினருள் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு அளிப்பதற்காக புதிய சட்டத்தை இயற்றி இருக்கின்றார்கள். இதுவரை இல்லாத ஆபத்து.

மதச்சார்பு அற்ற தன்மையை அழித்து, பல மொழிகள், பல தேசிய இனங்கள், பல்வேறு பண்பாடுகள் நிறைந்த நாட்டில், ஒற்றை மொழி, ஒற்றை மதம், ஒரே பண்பாடு என்ற விதத்தில் கொண்டு வர முனைகின்றவர்கள்தான், இந்திய நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எதிரிகள்.

தேசத்துரோக வழக்கில்,
இந்தியாவில் முதன்முதலாகத் தண்டிக்கப்பட்டது பெருமைதான்

நான் தேசத்துரோகி என்று குற்றம் சாட்டப்பட்டு, ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருக்கின்றேன். மேல்முறையீடு செய்ய இருக்கின்றோம். 124 ஏ என்ற இந்தச் சட்டப்பிரிவு, பிரித்தானியர்கள் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்டது. இதன்கீழ், காந்தியார் தண்டிக்கப்ப்டடார்; பால கங்காதர திலகர், பர்மாவில் மாண்டலே சிறையில் ஆறு ஆண்டுகள் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்தியா விடுதலை பெற்ற பொழுது, இந்தச் சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்று பண்டித நேரு அவர்கள் கூறினார்கள். சட்ட வல்லுநர்கள் பலரும் கூறி இருக்கின்றார்கள். இந்தியா விடுதலை பெற்ற பிறகு, இந்தச் சட்டப்பிரிவின் கீழ், இந்தியாவில் இதுவரை ஒருவர் கூடத் தண்டிக்கப்படவில்லை. மாவோயிஸ்டுகள் மீது வழக்குப் பதிவு செய்தார்கள். நக்சலைட்டுகள் மீது தொடுத்தார்கள். ஆனால், அவர்கள் எல்லாம் நீதிமன்றங்களில் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள்.
இந்தியாவில் பொடா சட்டத்தின் கீழ் கைதான ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் அடியேன் என்பது போல, மக்கள் ஆட்சியின் கழுத்தை அறுக்கின்ற கொடுவாளான 124 ஏ என்ற சட்டப்பிரிவுக்கு முதல் பலியாக, முதலில் தண்டனை பெற்று இருக்கின்றேன்.

எந்த முடிவும் எனக்காக அல்ல

இந்த வேளையில், ஒன்றிரண்டு ஏடுகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை மிகக் கடுமையாக விமர்சித்து இருக்கின்றன. அது அவர்கள் உரிமை. ஆனால், நான் எடுத்த முடிவுகளால் கட்சி பலவீனம் அடைந்தது என்று, தவறான தகவல்களை அந்த ஏடுகள் தருகின்றன. எங்கள் கட்சியின் முடிவு, நான் அமைச்சர் ஆக வேண்டும் என்பது. ஆனால், என்னுடைய முடிவால்தான், கண்ணப்பன், செஞ்சி இராமச்சந்திரன் ஆகியோர், மத்திய அமைச்சர்களாக ஆக்கப்பட்டார்கள்.

இரண்டு முடிவுகள்தான் நானாக எடுத்தவை. ஒன்று, அமைச்சர் ஆவது இல்லை. பொடா சிறைவாசத்திற்குப் பிறகு வெளியே வந்த நிலையில், 2004 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு இருந்தால், 5 இலட்சம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெறலாம் என்ற நிலையில், அந்தத் தேர்தலில் நான் போட்டி இடுவது இல்லை என்று தீர்மானித்தேன். இந்த  இரண்டும்தான், நான் எடுத்த முடிவுகள். மற்ற அனைத்து முடிவுகளும், காலை தொடங்கி இரவு வரை, மறுநாள் விடியற்காலை வரையிலும்கூட, இதே அரங்கில் கருத்துகளைப் பரிமாறி, ஒட்டுமொத்தமாக, ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவுகள்தான். எங்கள் கட்சியில் கருத்து உரிமை இருக்கின்றது.

பொதுவாழ்வில் என்னை விரும்புகின்றவர்கள் பெரும்பான்மையாக இருக்கின்றார்கள். வெறுப்பவர்களும் இருக்கின்றார்கள். ஏனோ என் மீது கசப்பு உணர்வு கொண்டு இருக்கின்றார்கள். அது அவர்களுடையை உரிமை. ஆனால், இந்த இயக்கம், என் உயிரை விடமேலானது. 26 ஆண்டுகளாக, இலட்சக்கணக்கான தொண்டர்களின் தியாகத்தால், கட்டிக் காக்கப்படுகின்ற இயக்கம். இந்த இயக்கத்தைப் பாதுகாப்பவர்கள் தொண்டர்கள். அவர்களுடைய உணர்வுகளைத்தான், தலைமை எதிரொலிக்கின்றது. அவர்களுடைய ஒப்புதலைப் பெற்றுத்தான், நடந்து முடிந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்தோம்.

மாநிலங்கள் அவைத் தேர்தல் குறித்து நேற்று ஏற்பட்ட சூழல் குறித்து, உடனடியாக விளக்கம் அளிக்காவிட்டால் விரும்பத்தகாத விமர்சனங்கள் எழும் என்பதால்தான், நான் நேற்று நான் உடனடியாக திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தேன்.

நான் எனக்குப் பதவி கேட்பவனா? அப்படியானால், 2004 ஆம் ஆண்டு தேர்தலில் நான் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தால், அதன்பிறகும் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக ஆகி இருந்திருக்கலாமே? அதற்கான வாய்ப்புகள் இருந்தனவே? 1998 இல் என்னை அமைச்சர் ஆகச் சொன்னார் வாஜ்பாய்; 99 இலும் சொன்னார். இரண்டு முறையும் நான் மறுத்து விட்டேன். அதற்கு முன்பு, 1989 லேயே வி.பி. சிங் அவர்கள், உயர்ந்த பதவி தருவதாகச் சொன்னார். அதையும் மறுத்து விட்டேன். இந்த வழக்கில் எனக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை அளித்து இருந்தாலும், அதையும் நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்பவன் என்பதை, என்னுடைய தோழர்கள் நன்கு அறிவார்கள். ஆகவே, என் சுயநலத்திற்காக எந்த முடிவும் எடுத்தது இல்லை. இந்த முறை, உங்களைத் தவிர வேறு யாரைப் பற்றியும் யோசிக்ககூடாது என்று கட்சி முடிவு எடுத்தது. நீங்கள் செல்வதாக இருந்தால், மாநிலங்கள் அவைக்கு ஒரு இடம் தருகின்றோம் என்று சொன்னார்கள். இல்லை என்றால், மக்கள் அவையில் எத்தனை இடங்கள் என்பதைப் பேசி முடிவு செய்து இருப்போம். எனவே, கட்சியின் ஒட்டுமொத்தக் கருத்தின்படிதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த இயக்கத்தில் மற்றவர்கள் பதவிக்கு வர வேண்டும் என்பதை விரும்புகின்றவன் நான். அமைச்சர்களாக ஆக்கி மகிழ்ந்தவன் நான். எம்.பி.க்கள் ஆக்கி மகிழ்ந்தவன் நான். தடா சட்டத்தின்கீழ், சிறையில் ஓராண்டு காலம் கைவிலங்கு பூட்டப்பட்டுக் கிடந்த என் தம்பி இரவிச்சந்திரனுக்குக் கட்சியில் நான் எந்தப் பதவியும் கொடுக்கவில்லையே? எல்லா வகையிலும் எனக்குப் பக்கபலமாக இருக்கின்றார் என் மகன். அவரை நான் அரசியலுக்குக் கொண்டு வரவில்லையே? பதவி அரசியலை அவரும் விரும்பவில்லை; நானும் விரும்பவில்லை. எல்லோரையும் போல அவரும் வாட்ஸ் அப்பில் தன் நண்பர்களோடு ஒரு குழுவில் இருக்கின்றார். அதை வைத்துக்கொண்டு, அதற்குப் பெயர் எல்லாம் சூட்டி, அடுத்த கட்ட வாரிசு என்றெல்லாம் எழுவது வேதனை அளிக்கின்றது. அந்த எண்ணம் எங்கள் குடும்பத்தில் எவருக்கும் இல்லை. எல்லாத் துன்பங்களும், துயரங்களும் என்னோடு போகட்டும். இந்த இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்வதற்கு எத்தனையோ இளைஞர்கள், ஆற்றல் உள்ளவர்கள் இயக்கத்திற்காகப் பாடுபட்டவர்கள் இருக்கின்றார்கள். எவ்வளவோ பேர் இருக்கின்றார்கள். இதை எல்லாம் இன்றைக்கு மனம் திறந்து சொல்வதற்கான வாய்ப்பு கிடைத்து இருக்கின்றது.

எத்தனையோ ஈட்டிகள் பாய்ந்து என் இதயம் மரத்துப் போய்விட்டது. இனிமேலும் காயப்படுவதற்கு என்ன இருக்கின்றது? வருந்துவதற்கு ஒன்றும் இல்லை.

நாடாளுமன்ற மாநிலங்கள் அவைத் தேர்தலுக்காக என்னுடைய வேட்பு மனு ஏற்கப்பட்டது என்றவுடன், தி.மு.க. தலைவர் என்னுடைய ஆருயிர்ச் சகோதரர் மாண்புமிகு தளபதி ஸ்டாலின் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தார்கள். அதற்கு முன்பு, என் மனு ஒருவேளை நிராகரிக்கப்படலாம் என்று நான் அவரிடம் கூறினேன். இல்லை. உங்கள் மனு கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று சொன்னார்கள். ஒருவேளை நிராகரிக்கப்பட்டால், மாற்று ஏற்பாடு என்ன? என்று நான்தான் அவரிடம் கேட்டேன். அதன்படி அவர்கள் நேற்று ஒரு ஏற்பாடு செய்தார்கள்.

எந்தப் பதவியையும் எதிர்பார்த்து நான் இல்லை. ஒரு கோவிலாக, மசூதியாக, தேவாலயமாக, அதை எல்லாவற்றையும் விட உயர்ந்ததாக இந்தக் கட்சியை, இந்தத் தாயகத்தைக் கருதுகின்றேன். இன்றைக்குச் சொல்லுகிறேன்: நான் வாங்குகின்ற மாத ஊதியத்தை  முழுமையும் கட்சிக்கணக்கில்தான் வரவு வைக்கப் போகின்றேன். என்னுடைய உடல் நலம் எந்த அளவுக்கு ஒத்துழைக்கின்றதோ, அந்த அளவுக்கு இந்தக் கட்சிக்காக உழைப்பேன்.

நாடாளுமன்ற வாழ்க்கை குறித்து...

எத்தனையோ பிரதமர்கள், பெரிய தலைவர்களோடு பழகி இருக்கின்றீர்கள். அதைப் பற்றி இப்போது என்ன நினைக்கின்றீர்கள்? என்று கேட்டீர்கள்.

1978 ஆம் ஆண்டு நான் முதன்முறையாக மாநிலங்கள் அவைக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டபோது, அங்கே என்னை வார்ப்பித்து வழிநடத்தியவர் அண்ணன் முரசொலி மாறன் அவர்கள். அந்த நன்றியை நான் மறக்கவில்லை. அவர் மூலமாகத்தான் பல பெரிய தலைவர்களின் அறிமுகம் கிடைத்தது. ஜோதிர்மயிபாசு, உயிர் நண்பர் ஆனார். எச்.வி. காமத்திடம் ஆசி பெற்றேன். புபேஷ் குப்தா என்னுடைய முதல் பேச்சையே பாராட்டினார். அதன்பிறகு ஒவ்வொரு முறை பேசும்போதும் தட்டிக்கொடுத்துப் பாராட்டினார். பேராசிரியர் என்.ஜி.ரங்கா பாராட்டினார். வைகோவை என் சுவீகார புத்திரனாகக் கருதுகிறேன் என்று வாஜ்பாய் அவர்கள், பிகாரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார். அத்வானி அவர்கள் அன்பைக் கொட்டினார்கள். அதைப்போலவே, இந்திரா காந்தி அம்மையாரின் அன்பையும் பெற்றேன். ராஜீவ் காந்தி அவர்கள் என்னை அன்பாக நடத்தினார்கள். நரசிம்மராவ் அவர்கள், ‘என்னைப் பார்க்க வரமாட்டாயா?’ என்று கூடக் கோபித்துக் கொண்டார்.

நாடாளுமன்றத்தில் கடுமையான கருத்து விமர்சனங்களை முன்வைப்பேன். அங்கிருந்து வெளியே வந்து, மைய மண்டபத்திற்கு வந்துவிட்டால், அனைத்துக் கட்சியினரும் நண்பர்கள்தான். இன்றைக்கு என்ன பிரச்சினையைக் கிளப்பப் போகிறாய்? என்று கேலி பேசுவார்கள். எல்லோருடனும் பழகுகின்ற வாய்ப்புக் கிடைத்தது. முன்பு அங்கே இருந்தபோது, பழகுகின்ற தன்மையால் பலருடைய அன்பையும், நட்பையும் பெற்றேன். ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள் என்னை உயிர் நண்பராகக் கருதினார். இப்போது டாக்டர் பரூக் அப்துல்லா அவர்கள் அப்படித்தான். முலாயம் சிங் யாதவ், லல்லு பிரசாத் யாதவ், பிகார் முதல்வர் நிதீஷ்குமார், பஞ்சாப் முன்னாள் முதல்வர் பர்காஷ்சிங் பாதல் எல்லோரும் என் மீது அன்பையும் பாசத்தையும் காட்டி வந்திருக்கின்றார்கள்.

நான் மாநிலங்கள் அவைக்குச் சென்று 23 ஆண்டுகள், மக்கள் அவைக்குச் சென்று, 17 ஆண்டுகள் ஆகின்றன. காரணம், அப்போது பதவிக்காலத்தில் இரண்டு ஆண்டுகள் பொடா சிறைவாசத்தில் இருந்தேன். இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் எனக்கு அறிமுகம் இல்லை. பழக்கம் கிடையாது. இப்போது அங்கே நான் ஒரு புது ஆள். அதுவும் ஒரு கட்சியின் ஒரேயொரு உறுப்பினர். எனவே, எல்லா விவாதங்களிலும் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்காது. கிடைத்தாலும், கடைசியாக இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள்தான் கிடைக்கும். ஆகவே, தோழர்கள் எதிர்பார்ப்பது, நல்லன்பர்கள், சாதி,மதம், கட்சி எல்லைகளைக் கடந்து எல்லோருடைய எதிர்பார்ப்பையும் எப்படி நிறைவேற்றுவது என்ற திகைப்பில், கவலையில் நான் இருக்கின்றேன். என் மீது அன்பு காட்டி, நான் நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்று வாழ்த்துகின்றார்களே, கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள், அவர்களுடைய மனங்களில் எனக்கு ஒரு சிறிய இடம் கிடைத்து இருப்பதைப் பெரும்பேறாகக் கருதுகின்றேன்.

இந்தியாவில் மதச்சார்பு இன்மைக்குப் பேராபத்து சூழ்ந்து இருக்கின்றது. நீதிமன்ற வாயிலில் செய்தியாளர்களிடம் ஒரு செய்தியைச் சொன்னேன். இஸ்லாமியர்கள் ஐந்து கடமைகளுள் ஒன்று ஹஜ் புனிதப் பயணம். அதை முடித்துத் திரும்புகின்ற முஸ்லிம்கள், அங்கிருந்து ஜம்ஜம் புனித நீரை எடுத்துக்கொண்டு வருகின்றார்கள். இனி, ஏர் இந்தியா வானூர்திகளில்
மூன்று வழித்தடங்களில் அந்த நீரைக் கொண்டு வரக்கூடாது என்று, தடை விதித்து இருக்கின்றார்கள். இந்தச் செய்தி வளைகுடாவில் கலீஜ் டைம்ஸ் ஏட்டில் வெளிவந்து இருக்கின்றது. தமிழகத்திலும் ஒரு ஆங்கில ஏட்டில் வெளியாகி இருக்கின்றது.

மக்க மாநகர் செல்கின்ற முஸ்லிம்கள், க~பாவில் தொழுகின்றார்கள். ஜம்ஜம் புனித நீரைக் கொண்டு வந்து, உற்றார் உறவினர்களுக்குக் கொடுக்கின்றார்கள். அந்தத் தண்ணீரை வீட்டில் பாதுகாப்பாக வைத்து வழிபடுகின்றார்கள். அதைப்போலத்தான், ஜெரூசலம் செல்லுகின்ற கிறித்துவர்கள் அங்கிருந்து புனித நீர் கொண்டு வருகின்றார்கள். இதை எல்லாம் தடுக்க முனைகின்றார்கள். எல்லாத் துறைகளிலும் இந்தி, சமற்கிருதத்தைத் திணித்து, மதத்தை முன்னிறுத்தி, சமூக நீதிக்குக் கேடு விளைவிக்க முனைகின்றார்கள். முன்னேறிய வகுப்பினருள் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைக்க முனையும் செயல். மக்கள் அவையில் பெரும்பான்மை இருக்கின்றது; மாநிலங்கள் அவையில் அடுத்த ஆண்டு பெரும்பான்மை கிடைத்து விடும்; அதை வைத்துக்கொண்டு, இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைக்க முனைகின்றார்கள். இந்த நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் யார் எதிரி என்றால், இன்றைய ஆட்சியாளர்கள்தான் முதல் எதிரி என்று நான் சொல்கிறேன்.

கடந்த 25 ஆண்டுகளாக, எங்கள் இயக்கத்தவர் மீது தொடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வழக்குகள் அனைத்தையும் கவனமாகக் கையாண்டு, இந்தக் கட்சியைப் பாதுகாத்து வருகின்றவர் எங்களுடைய சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் தேவதாஸ். இன்று காலையில் என்னுடைய வேட்புமனு பரிசீலனைக்கும் என் சார்பில் அவர்தான் சென்று இருந்தார். வேட்பு மனு நிராகரிக்க முடியாது என்று உறுதியாகச் சொன்னார். சிறப்பு நீதிமன்ற வழக்கில் அவர்தான் ஆஜரானார். இந்தியாவில் முதன்முறையாக நான் தண்டிக்கப்பட்டு இருக்கின்றேன். அதை எதிர்த்து உயர்நீதிமன்றம் செல்ல இருக்கின்றோம். வழக்கறிஞர் தேவதாஸ் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக இருக்கின்ற அனைத்து வழக்கறிஞர்களுக்கும், என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். செய்தியாளர்களாகிய உங்களுக்கும் நன்றி.

செய்தியாளர் கேள்வி: ஏழு பேர் விடுதலை தாமதம் ஆவது குறித்து, உங்கள் கருத்து என்ன?

வைகோ: தமிழக அரசுதான் இதற்குப் பொறுப்பு. காரணம், இந்தப் பிரச்சினையில் இனி தமிழக அரசுதான் முடிவு எடுத்துக்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி  கூறி விட்டார். அரசியல் சட்டத்தின் 161 ஆவது பிரிவின்படி அமைச்சரவை கூடி எடுத்த முடிவை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்கள். ஆளுநர் கையெழுத்து போடவில்லை. அதை அவர் மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்பலாம். அரசு மீண்டும் அதே முடிவை வலியுறுத்தினால், அதன்பிறகு ஆளுநருக்கு வேறு வழி இல்லை. அவர் கையெழுத்துப் போட்டுத்தான் ஆக வேண்டும். நிராகரிப்பதற்கு ஆளுநருக்கு உரிமை இல்லை.

ஆனால், அதுகுறித்து கருத்துக் கேட்பதற்காக, உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி இருக்கின்றார்களாம். யார் அனுப்பியது? தமிழக அரசா? அப்படியானால், அது ஏமாற்று வேலை.  பச்சைத் துரோகம்.
இல்லை, ஆளுநர் அனுப்பினார் என்றால், அவர் வரம்பு மீறிச் செயல்பட்டு இருக்கின்றார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடக்கத்தில் இருந்து, அரசியல் சட்டத்தை அத்துமீறிச் செயல்பட்டு வருகின்றார். எனவே, அவரைக் கண்டித்தும், ஏழு பேர் விடுதலையை வலியுறுத்தியும், ஆளுநர் மாளிகை முன்பு நாங்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் ஆதரவு அளித்துப் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டோம்.

செய்தியாளர் கேள்வி: முன்னேறிய வகுப்பினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு பற்றி?

வைகோ: அவர்கள் ராட்சச பலம் பெற்று இருக்கின்றார்கள். ஒரு புல்டோசர் போல செயல்படுகின்றார்கள். இப்போது அவர்கள் கண்ணை உறுத்திக்கொண்டு இருப்பது தமிழ்நாடு மட்டும்தான். இங்கே அவர்கள் கால் ஊன்ற முடியவில்லை. அடுத்து நடைபெற இருக்கின்ற வேலூர் தேர்தலிலும் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்தான் வெற்றிபெறுவார். மேற்கு வங்கத்தில் கூட ஓரளவிற்கு உள்ளே நுழைந்துவிட்டார்கள். அடுத்து, தமிழ்நாட்டை எப்படிக் கபளீகரம் செய்வது? திராவிட இயக்கத்தின் உயிர்க்கொள்கைகளை எப்படி அழித்து ஒழிப்பது? என்ற விதத்தில் இனி அவர்கள் செயல்படுவார்கள். சமூக நீதி, இட ஒதுக்கீடு என்ற விதையை ஊன்றியது தமிழகம்தான். மற்ற மாநிலங்களிலும் அந்த உணர்வை நாம்தான் ஊட்டினோம். வழிகாட்டினோம். ஆனால் இன்றைக்கு, முற்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு குறித்து மற்ற மாநிலங்களில் போதிய விழிப்பு உணர்வு இல்லை. அதை எந்த அளவிற்கு நாம் தடுத்து நிறுத்த முடியும் என்பதை ஊகித்துச் சொல்ல முடியவில்லை.

எதிர்பார்ப்பை எப்படி நிறைவேற்றப் போகிறேன் என்பது தெரியவில்லை;

செய்தியாளர் கேள்வி: அடுத்து நீங்கள் எந்த வகையில் செயல்படுவீர்கள்?

வைகோ: தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க வேண்டும். மதச்சார்பு இன்மையைக் காக்க வேண்டும். கருத்து உரிமை, பேச்சு உரிமையைக் காக்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு அரணாகத் திகழ வேண்டும். தமிழ் ஈழம் அமைவதற்குக் குரல் கொடுக்க வேண்டும். ஐ.நா. மன்றத்திலும், மனித உரிமைகள் மன்றத்திலும், இந்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றது. அந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதற்கும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும், அணுக்கழிவுகளை கூடங்குளம் அணு மின் நிலைய வளாகத்திற்குள் புதைக்கக்கூடாது; நியூட்ரினோ திட்டம் கூடாது; மேகேதாட்டு அணை கட்ட அனுமதிக்கக்கூடாது; அதை நிறுத்த வேண்டும் என்கின்ற வகையில் குரல் கொடுப்பேன். இயன்ற வரையில் தமிழக வளங்களைக் காப்பதற்கு, வாய்ப்புக் கிடைக்கின்ற வேளைகளில் அதைப் பயன்படுத்துவேன். ஆனால், எந்த அளவுக்கு வாய்ப்புக் கிடைக்கும் எனச் சொல்ல முடியாது.

செய்தியாளர் கேள்வி: 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு, உங்கள் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளார்களே?

வைகோ: அவர்கள் தமிழ் ஈழத்தை ஆதரிக்கின்றார்களா? ஒவ்வொரு பிரச்சினையிலும் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கருத்து இருக்கும். இட ஒதுக்கீட்டில் அவர்களுடைய நிலைப்பாடு குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. இட ஒதுக்கீட்டுக்கு அடித்தளம் அமைத்தது நீதிக்கட்சி. அதன்பின்னர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா அதற்காகப் போராடினார்கள். அதை காமராசரும் ஆதரித்தார். பண்டித நேரு அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். இந்திய அரசியல் சட்டத்தின் முதலாவது திருத்தமே சமூக நீதியைப் பாதுகாப்பதற்குத்தான். அந்த அடித்தளத்தைத் தகர்த்துவிட இந்துத்துவ சக்திகள், பாஜக வினர் முனைகின்றார்கள்.

செய்தியாளர் கேள்வி: தேசத்துரோக வழக்கு தண்டனை குறித்து என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

வைகோ: இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்தச் சட்டத்தின் கீழ், தேசத்துரோக வழக்கில் தண்டிக்கப்பட்ட முதலாவது ஆள் நான்தான் என்பதால், இந்தியச் சட்ட வரலாற்றில் எனக்கு ஒரு இடம் கிடைத்து விட்டது. மேல் முறையீட்டில் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.

No comments