எல்லாப் பழியும் எனக்கா

“முல்லைத்தீவு – நீராவியடி விகாரை தொடர்பான உண்மையை வெளிக்கொண்டு வந்துவிட்டேன். அதனையும் அகற்றுவதற்கான நடவடிக்கையும் நானா எடுக்கவேண்டும். அங்குள்ளவர்கள் அதனைச் செய்யலாம்தானே. எல்லாப் பழியையும் நானா ஏற்றுக் கொள்வது?”
– இவ்வாறு கேள்வி எழுப்பினார் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில், முல்லைத்தீவு நீராவியடியில் அமைக்கப்பட்ட விகாரை, எந்தவொரு தொல்பொருள் வரலாறையும் உடையது அல்ல என்று தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் கூறியிருந்தார்.
தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் கூறியதற்கு அமைவாக, அந்த இடத்திலிருந்து விகாரையை அகற்றுவதற்கு ஜனாதிபதியிடம் ஏன் கேட்கவில்லை என்று அமைச்சர் மனோ கணேசனிடம் கேட்டபோது,
“தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளரிடமிருந்து உண்மையை வெளிக்கொண்டு வந்துவிட்டேன். தொல்பொருள் சின்னங்கள் இருப்பது வீதியின் மறுகரையில் என்று கூறினார். விகாரையை அகற்றுவதற்கான நடவடிக்கையை மாத்திரம் ஏன் என்னிடம் கேட்கின்றீர்கள். அங்குள்ளவர்கள் கதைக்கலாம்தானே. எல்லாப் பழியையும் நானே ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்? விகாரை கட்டி முடிக்கும் வரையில் அங்குள்ள பிரதிநிதிகள் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை. கட்ட முதலே தடுத்திருந்தால் நிறுத்தியிருக்கலாம்தானே?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

No comments