தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வாக யாழில் அமைகிறது நீர் தேக்கம்... யாருக்கு?- நேரு குணரட்ணம்

தண்ணீர் பற்றாக்குறையால் அதிகம் அவதிப்படுபவர்கள் இலங்கைத்தீவில் தமிழர்கள் என்றால் அது மிகையில்லை. அது அன்றாட தேவைகளைக் கடந்து விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு எனப் பல துறைகள் சார்ந்தும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது, என்பதுவும் நாம் அனைவரும் அறிந்ததே.. அந்த வகையில் தான் யாழில் நீரைச் சேகரித்து அல்லது உறிஞ்சி வைத்து பாவனைக்கு உயயோகிக்கும் வகையில், ஒரு நீர்த் தேக்கத்திற்கான கட்டுமானங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் சத்தம் சந்தடியின்றி நடைபெற்றிருக்கிறது.

மகாவலியை எவ்வாறு யாழ் வரை கொண்டுவருவது, இரணைமடுவில் இருந்து தண்ணீரை எவ்வாறு கொண்டு வருவது, என எவ்வித முடிவும் இன்றி வழியும் இன்றி, ஆண்டுகளாக தொடர்ந்த இழுபறிக்கு, இது ஒரு வகையில் முற்றுப்புள்ளி வைக்கும் என நம்பலாமா? இக் கட்டுமானத்திற்கான அடிக்கல்லையே, யாழ் ஆக்கிரமிப்புப் படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்சனா கெட்டியாராச்சி, சமீபத்தில் நாட்டிவைத்துள்ளார். அது சரி இது எங்கு என்று தானே கேட்கிறீர்கள்? பலாலி ஆக்கிரமிப்பு படைத்தளத்தினுள்ளேயே இது அமையவுள்ளது. இது தண்ணீரைச் சேகரித்து வைக்கும் அரண்கள் மற்றும் தண்ணீர் வெளியேற்றத்திற்கான கதவுகளைக் கொண்டதாக அமையவுள்ளது. இதற்கான கட்டுமானத்தை 5ஆவது மற்றும் 10ஆவது பொறியிலாளர் படையணிகள் மேற்கொள்ளவுள்ளனவாம்.

அது சரி இங்கு உறிஞ்சி எடுத்துத் தேக்கப்படும் தண்ணீர் யார் பாவனைக்கு என்பது தானே உங்கள் அடுத்த கேள்வி? அதற்கும் திட்டமில்லாமலா கட்டுமானம்... இராணுவத்தினரின் மற்றும் அவர்களோடு இணைந்தவர்களின் பாவனைக்கு மட்டுமல்ல, இராணுவத்தால் மேற்கொள்ளப்படும் விவசாயப் பண்ணைகள் மற்றும் தென்னை பண்ணைகள் பராமரிப்பிற்கும் பேருதவியாக இது இருக்குமாம்.. அப்பிடியானால் முழுமையான காணிகள் விடுவிப்பு??? என வாயைப் பிளக்கிறீர்களா? அந்த நினைப்பு கொஞ்சப் பேருக்கு இன்னமும் இருக்கு.. உங்களுக்குமா? அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு புனர்நிர்மாணத்திற்கு பணமில்லை என அடிக்கடி சொல்கிறார்களே பின்னர் இதற்கு? என வேறு உங்கள் யாருக்கும் கேட்கத் தோன்றுகிறதா?.  அது சரி வந்தாரை வரவேற்று வாழவைத்து ..................... தமிழர்கள் அல்லவா நாம்... வந்த அவர்களாவது வாழட்டுமே! இது குறித்து நம் வாக்குக்கதிரை தலைவர்களிடம் யாராவது கேட்டுவிடாதீர்கள் பாவம் விழிபிதிங்கிவிடுவார்கள்??

No comments