கன்னியா விகாரை:மைத்திரி,கரு ஆதரவு?


கன்னியா வென்னீருற்று பகுதியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தை உடைத்து அந்த இடத்தில் விகாரை கட்டுவதை இலங்கை ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் ஆகியோர் ஊக்குவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.

திருகோணமலை மாவட்டச் செயலாளர் புஸ்பகுமார, இலங்கைத் தொல்பொருள் ஆராட்சித் திணைக்களப் பணிப்பாளர் பேராசிரியர் மண்டாவெல ஆகியோரின் அனுமதிக் கடிதத்துடன் நேற்று வியாழக்கிழமை பிள்ளையார் ஆலயத்தின் அத்திவாரத்தை உடைத்து விகாரை கட்டுவதற்கான ஏற்பாடுகளை தொல்லியல் திணைக்களத்தினர் மேற்கொண்டிருந்தனர்.

சம்பவத்தை அறிந்து அங்கு சென்ற தென்கைலை ஆதின குருமுதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார், மற்றும் பிரமுகர்கள், பிள்ளையார் ஆலய அத்திவாரத்தை இடித்துக் கொண்டிருந்தவர்களைத் தடுக்க முற்பட்டனர்.

ஆனால்; விகாரை கட்டுவதற்கு கொழும்பு உயர்மட்டங்களில் இருந்து அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அங்கு நின்றவர்கள் கடிதத்தை காண்பித்தனர். 
திருகோணமலை வில்கம் விகாராதிபதி அம்பிட்டிய சீலவன்ச திஸ்ஸ ஸ்தீர, அமைச்சர் மனோ கணேசனுக்குக் கடந்த யூன் மாதம் ஒன்பதாம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். யூன் ஏழாம் திகதி மாவட்டச் செயலகக் கூட்டத்தில் விகாரை கட்டுவதை தற்காலிகமாக நிறுத்துவதென முடிவெடுக்கப்பட்ட பின்னரே தேரர் மனோ கணேசனுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்.

இருப்பினும் விகாரையைக் கட்டுவதற்கான அனுமதிக் கடிதத்தை இலங்கைத் தொல்பொருள் ஆராட்சித் திணைக்களம் கடந்த யூன் மாதம் பத்தாம் திகதி வழங்கியுள்ளதாக மாவட்ட செயலாளர் புஸ்மகுமாரவுக்கு வழங்கியுள்ளது.

மீண்டும் 12 ஆம் திகதி மற்றுமொரு கடிதத்தை தொல்பொருள் ஆராட்சித் திணைக்களம் மாவட்டச் செயலாளருக்கு அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில் கன்னியாப் பிரதேசத்தில் செய்ய வேண்டிய திருத்த வேலைகளுத் தேவையான நிதியை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அத்துடன் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டாமென்ற தொனியில் திருகோணமலை வில்கம் விகாராதிபதி அம்பிட்டிய சீலவன்ச திஸ்ஸ ஸ்தீர, அமைச்சர் மனோ கணேசனுக்குக் கடந்த யூன் மாதம் ஒன்பதாம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இதேவேளை, கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் சைத்தியம் எனப்படும் புத்த தாதுக் கோபுரத்தை உடனடியாகக் கட்டி முடிக்குமாறு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மேலதிகச் செயலாளர் ரோஹன அபயரட்ன இலங்கைத் தொல்பொருள் ஆராய்ச்;சித் திணைக்களப் பணிப்பாளர் பேராசிரியர் மண்டாவெலவுக்கு கடிதம் ஒன்றை கடந்த யூன் மாதம் 24 ஆம் திகதி அனுப்பியுள்ளார்.

அதேவேளை, கன்னியா வெந்நீருற்றுப் பிரதேசத்தில் புத்த தாது கோபுரத்தை உடனடியாகக் கட்டி முடிக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசாவுக்கு கடந்த யூன் மாதம் நான்காம் திகதி கடிதம் ஒன்றை அவசரமாக அனுப்பியுள்ளார்.
இந்த நிலையிலேயே நேற்று வியாழக்கிழமை, கன்னியா வெந்நீருற்றுப் பிரதேசத்தில் பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் புத்தாதுக் கோபுரத்தை கட்டுவதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்றதாக பிள்ளையார் ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

No comments