இனி இவர்கள் பிள்ளைகளை யார் தேடப்போகிறார்கள்? - சுரேன் கார்த்திகேசு

“தன்ர பிள்ளை அந்தக்காம்பில இருக்கிறாராம். இங்க இருக்கிறாராம்” என்று ஒவ்வொருவரும் சொல்லும் வார்த்தைகளை கேட்டு தேடி அலையாத இடங்கள் இல்லை. எங்கையாவது தங்கட பிள்ளைகள் இருக்கமாட்டினமா? திரும்ப விடமாட்டாங்களா? என்ற ஏக்கத்துடன் வயதாகி முடியாத நிலையிலும் இன்று வரை போராடிக்கொண்டிருக்கும் காணாமல் போனவர்களின் தாய் தந்தையரை நாம் ஒவ்வொன்றாக இழந்துகொண்டிருக்கின்றோம். இனி இவர்கள் பிள்ளைகளை யார் தேடப்போகிறார்கள்?

01)
இன்று முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை பகுதியைச் சேர்ந்த செபமாலை திரேசம்மாள் என்ற தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனது மகனான செபமாலை செல்வன் என்பவரை கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து தேடி போராட்டம் நடாத்திவந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.கடந்த 2008,07.01 அன்று மன்னார் பகுதியில் வைத்து கடற்படையினரிடம் சரணடைந்த நிலையில் இன்றுவரை அவர் குறித்த நிலைமைகள் எதனையும் அறியாத நிலையில் இவர் பல்வேறு போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்தியிருந்த நிலையில் இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டார்.

02)
மன்னார் மாவட்டத்தினை சேர்ந்த ஜெசிந்த பிரீஸ் (வயது-55). கடந்த ஆண்டு ஒக்டோர் 15 இல் உயிழந்துள்ளார். வெள்ளைவானில் வந்த இனம்தெரியாத நபர்களால் கடத்திச்செல்லப்பட்ட தனது கணவரையும் மகனையும் 9 ஆண்டுகளாக தேடியுள்ளார்.

03)
முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியினை ச்சேர்ந்த 68 வயதுடைய சண்முகராசா விஜயலட்சுமி சுகயீனம் காரணமாக மரணம் அடைந்திருக்கிறார்.  2009 வலைஞர்மடம் பகுதி ஊடக படையினரிடம் சரணடைந்த தனது மகனான  அர்ஜின் என்பரை தேடி அலைந்த நிலையில் ஜனவரி 9 இல் இவர் உயிரிழந்துள்ளார்.

04)
மாங்குளம் செல்வராணி குடியிருப்பைச்சேர்ந்த வேலு சரஸ்வதி அம்மா மாரடைப்பால் மரணமாகியுள்ளார். வீரவேங்கை நகைமுகன், லெப்.கேணல் கணபதி ,வீரவேங்கை கதிர்காமர் ஆகிய மூன்று மாவீரர்களின் தாயாரும் போராளியாக ஒருவர் தடுப்பு முகாமிலிருந்து வந்த  இவரது மகள் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்.  தனது மகளைத்தேடியலைந்த அன்னை மனதாலும் உடலாலும் சோர்வடைந்த நிலையில் மாரடைப்பால் மரணமாகியுள்ளார் சரஸ்வதியம்மாவும் தனது மகளை காணாமலே வலிகளோடு பெப்ரவரி 12 இல் இவ்வுலகை விட்டு பிரிந்திருக்கிறார்.

05)
காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை 30 வருடமாக   தேடியலைந்த தாயார் ஒருவர், மகனைக் காணாமலேயே மரணமடைந்துள்ளார்.
1989ஆம் ஆண்டு எருக்கலம்பிட்டி பகுதியில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட வேலுப்பிள்ளை தியாகராஜா (ரஞ்சன்) என்ற இளைஞரின் தாயாரான வேலுப்பிள்ளை வியாழம்மா என்பவரே உயிரிழந்தார். முதுமை காரணமாக கடந்த யூலை 13 இல் இவர் உயிரிழந்தார்.

இதுவரைக்கும் பலர் தங்கள் பிள்ளைகளை காணாமலே உயிரிழந்திருக்கிறார்கள். இப்பதிவினை பார்க்கும் நண்பர்களே! உங்களுக்கு யாருக்கும் இவ்வாறான மேலதிக தகவல் தெரிந்தால் தெரியப்படுத்தவும்.

-Suren karththikesu-

No comments