கூட்டமைப்பு நினைத்தால் ஒரே இரவில் மாற்றலாம்


அரசாங்கத்தின் அத்திவாரமாக இருக்கின்ற கூட்டமைப்பு நினைத்தால் ஒரு இரவில் வர்த்தமானி அறித்தல் மூலமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் ஆணையை வெளியிட முடியும் என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன்

மக்களோடு சேர்ந்து தாம் முன்னெடுக்கின்ற போராட்டங்களை சிலர் விமர்சிப்பதாகவும் அவர்களைச் சோதனையிடவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கல்முனையில் வெள்ளிக்கிழமை(28) கிழக்கு தமிழர்களின் இருப்பை வலியுறுத்தி  யாத்திரிகள் வழியனுப்பும்  நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்

விமர்சிப்பவர்களுக்கும்  விமர்சிக்க இருக்கின்றவர்களுக்கும் நான் ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறேன். நாங்கள் முன்னெடுக்கின்ற போராட்டங்கள் யாவும் உங்களுக்காகவும் உங்களின் அடுத்த தலைமுறைக்காகவும் மாறுபட்ட கருத்து கிடையாது.

விமர்சிக்கின்ற உங்களுக்காகவும் சேர்த்துத்தான் உண்ணாவிரதம் இசத்தியாக்கிரகம் போன்ற போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றோம். எங்களின் மக்களிடம் ஒரு மாத கால அவகாசம் கேட்டிருந்தார்கள் நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.

இங்கு சிலர் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்பது கல்முனைக்கு மட்டுமானது என வேறு பிரிக்க முற்படுகின்றனர். இப்படி பேசுபவர்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயத்தப்பட கூடாது என வலியுறுத்தும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் அடிவருடிகள்.
அவர்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலிலே செயற்படுபவர்கள் என தெரியும்.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயத்தக்கோரி மட்டக்களப்பு திருகோணமலை போன்ற மாவட்டங்களில் போராட்டம் செய்பவர்களை விமர்சிப்பவர்கள் இருக்கின்றனர். எல்லாவற்றிலும் தமிழர்களிலிருந்து மாறியவர்கள் அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டியவர்கள்.

உண்ணாவிரத போராட்டத்தின் போது சில முஸ்லிம் அரசியல்வாதிகளின் உண்மை முகம் வெளிப்பட்டது அது தான் எமது பெரிய வெற்றி.
கல்முனை ஐக்கிய சதுக்கத்தில் முஸ்லிம்களின் அரசியல் தலைமைகள் கிழக்கு மாகாணம் முஸ்லிம்களின் மாகாணம் கல்முனை அதன் தலைநகரம் அங்கு ஒரு அங்குல காணியை விட்டுக்கொடுக்க முடியாது என தெரிவித்தனர்.

கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக இருப்பது தமிழ் மக்கள் இரண்டாவது முஸ்லிம்கள் மூன்றாவது சிங்களவர்கள் இருக்கின்றனர். இதிலே இரண்டரை இலட்சம் தமிழர்கள் இந்தியா உட்பட ஏனைய நாடுகளில் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். அவர்களை கழித்து மூன்று மாவட்டங்களையும் உற்றுநோக்கினால் பெரும்பான்மை தமிழர்களே இருக்கின்றனர்.

முஸ்லிம் தலைமைகளின் இக் கடும்போக்கு கருத்துகளை பார்த்துக்கொண்டு சில தமிழ்த்தேசியவாதிகள் இருக்கின்றனர். அவர்கள் இன்னும் வாய்திறக்கவில்லை.

யார் யாரெல்லாம் போராடுகிறார்கள்  நீதி நியாயத்திற்கு குரல்கொடுக்கின்றார்கள். நீதி நியாயத்தை தட்டிக்கேட்கின்றார்களோ அவர்களெல்லாம் இனவாதிகள்  துரோகிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள் என்றெல்லாம் கவலையில்லை.

நாங்கள் ஒரு சமூகத்தின் உரிமைகளை தட்டிப்பறிக்கவில்லை கிழக்கு மாகாணம் மூவின மக்களும் வாழுகின்ற மாகாணம் அதற்கு ஒரு சமூகம் மாத்திரம் உரிமை கோருவதை ஒருக்காலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

நாங்கள் முன்னெடுக்கின்ற போராட்டம் அடுத்த தலைமுறைக்கான இருப்புக்குரிய போராட்டம். இந்த போராட்டங்களுக்கு வலுச்சேருங்கள் இல்லையாயின் விலகிக்கொள்ளுங்கள். 

No comments