வளர்த்த கடா மார்பில் பாய்வதும் கலங்கிய குளத்தில் மீள் பிடிப்பதும் - பனங்காட்டான்

தமிழினத்தை அழித்தொழிக்க சிங்கள தேசம் தெரிந்தெடுத்து வளர்த்த கடா, இப்போது அவர்கள் மார்பில் குத்தி பதம் பார்க்கிறது. சொல்லவும் முடியாமல் தடுக்கவும் முடியாமல் வளர்த்த தேசம்
திண்டாடுகிறது. கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பதுபோல அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகள் தத்தம் முறையில் இலங்கையைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முனைகின்றன. 

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவங்களின் எதிரொலி தூவானம் போலன்றி கொட்டும் மழை போன்று தொடர்ந்து கொண்டிருக்கிறது.

நாளும் இடமும் திகதியும் நேரமும் குறிப்பிட்டு குண்டுகள் வெடிக்குமென்ற பயமுறுத்தல் அறிவிப்புகள் தினமும் வந்து கொண்டிருக்கின்றன.

தினசரி தேடுதல்களும், ஆயுதங்கள் மீட்கப்படுவதும், மக்கள் பார்வைக்கு காட்டப்படுவதும் அதிரடிச் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. 

குண்டுத் தாக்குதல் தொடர்பான முக்கிய தகவல், பிந்திய தகவல், ஆகப்பிந்திய தகவல் என்றவாறு பொலிசாரும் முப்படையினரும் தத்தம் பாட்டுக்கு அறிக்கைகள் விட்டு அப்பாவிப் பொதுமக்களை பயமுறுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்த வருடம் நவம்பரில் நடைபெற போவதாகக் கூறப்படும் ஜனாதிபதித் தேர்தல்வரை இந்த நெருக்கடி நிலைமையை அரசாங்கம் தொடர்ந்து வைத்திருக்கும் அறிகுறி தென்படுகிறது.

தற்போதைய தீவிரவாத அச்சுறுத்தல் நிலைமையிலிருந்து நாடு இயல்பு நிலைக்குத் திரும்ப நீண்ட காலம் எடுக்குமென கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி பிரிகேடியர் அசாத் இஸ்ஸதீன் தெரிவித்திருப்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

குண்டுத் தாக்குதல்களுடன் சம்பந்தப்படாத வடமாகாணத்தில், அவசரகால சட்ட விதிகளைப் பயன்படுத்தி இராணுவம் சுற்றிவளைப்புச் சோதனைகளையும் கைதுகளையும் ஆரம்பித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவரும் செயலாளரும் கைதாகி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மாணவர் அமைப்பின் அறையில் தேசியத் தலைவர் வே. பிரபாகரனின் படம் இருந்ததுதான் இவர்கள் மீதான குற்றச்சாட்டு.


எத்தனையோ வருடங்களாக அங்கிருந்த இந்தப் படத்துக்கும் கொழும்புக் குண்டுத் தாக்குதல்களுக்கும் என்ன சம்பந்தம்?

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் தமிழ் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைதான மாணவர்களை விடுவிப்பதில் அக்கறை செலுத்தி வருவதாக பல்கலைக்கழக சமூகம் கவலை தெரிவித்துள்ளது.

அரசியலில் இது ஒருவகை பம்மாத்து என்றால், இன்றைய காலத்தின் கோலம் இதுவே.

இலங்கையில் தாக்குதல் நடத்த ஐம்பது தற்கொலைக் குண்டுதாரிகள் தயார் நிலையில் காத்திருப்பதாக சிங்கள பௌத்தவாதத்தின் மறுவடிவமான பொதுபலசேன எச்சரிக்கை விடுத்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவிக்கும் தங்கள் தலைவர் ஞானசார தேரரை வெசாக் பண்டிகைக்கு முன்னர் விடுதலை செய்யாவிடின் மக்கள் போராட்டம் வெடிக்கும் (மாவையரின் பாணியில்) என்று பொதுபலசேன மற்றொரு எச்சரிக்கையும் விடுத்துள்ளதுதான் வேடிக்கை.

இதற்கிடையில் தமிழர்கள் செறிந்து வாழும் வெள்ளவத்தைப் பகுதியில் 13ஆம் திகதி குண்டு வெடிக்குமென்று இன்னொரு எச்சரிக்கை வந்துள்ளது. இதனாற்தான் போலும், கிறிஸ்தவ - கத்தோலிக்க பாடசாலைகள் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மீள ஆரம்பிக்குமென கத்தோலிக்க பேராயர் மல்கம் ரஞ்சித் ஆயர் அறிவித்துள்ளார்.

கடந்த திங்களன்று ஆரம்பமான அரசாங்கப் பாடசாலைகளில் மாணவர்கள் வரவு மிக மிகக் குறைவு. அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரபல அரசியல்வாதிகளின் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லவில்லையென்ற தகவல் பல பெற்றோரை சிந்திக்க வைத்துள்ளது.

இவ்வருடம் மே தின ஊர்வலங்களும் கூட்டங்களும் அச்சத்தால் இடம்பெறவில்லை. வெசாக், பொசன் மத வழிபாடுகளையும் அதனையொட்டிய கொண்டாட்டங்களையும் வழக்கம்போல பெருமளவில் மேற்கொள்ள வேண்டாமென்று பாதுகாப்புத்துறையினர் அறிவித்துள்ளனர்.

நாட்டு நிலைமை இவ்வாறிருக்கையில், அடுத்த மூன்று நாட்களுக்குள் எல்லாவற்றையும் தாம் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதனன்று நாட்டு மக்களுக்கு அறிவித்தார். இப்படியான ஷவெடிகளை| அவிட்டு விடுவதில் இவர் வல்லவர்.

பாரிய தாக்குதல்கள் நடைபெறப்போவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதினைந்து தடவை முற்கூட்டிச் சொன்ன வேளைகளில் ஜனாதிபதி முகட்டைப் பார்த்துக் கொண்டிருந்ததாக முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் குறிப்பிட்டது உண்மையானால், சகல நிறைவேற்று அதிகாரங்களும் கொண்ட ஜனாதிபதி பதவிக்கு சிறிசேன தகுதியானவரா என்ற கேள்வி எழுகிறது.

இப்போதைய அசாதாரண சூழலை இப்போதைக்கு முடிவுக்கு வராதென்று பிரதமர் ரணில் கூறியிருப்பதை இலகுவாக தட்டிக்கழிக்க முடியாது.

அடுத்த ஜனாதிபதி கனவிலிருக்கும் கோதபாய ராஜபக்ச பத்தாண்டுகள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவிருந்தபொழுது, அந்த அமைச்சின் சம்பளப் பட்டியலில் இருந்தவர்களே குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரிகள் என்று அமைச்சர் ராஜித சேனரத்ன பகிரங்கப்படுத்தியும் எந்தப் பலனுமில்லை.

அதே அரசாங்கத்தில் அமைச்சராகவிருந்த சிறிசேன, எவ்வாறு கோதபாய மீது நடவடிக்கை எடுக்க முடியும்?

விடுதலைப் புலிகளை அழிப்பதற்கென உருவாக்கப்பட்ட ஊர்காவல் படையினர் துணையிராணுவப் படையாக இயங்கியபோது அதில் உள்வாங்கப்பட்ட அனைவரும் இஸ்லாமியர் என்பதும், தமிழர்களை இனவழிப்புக் செய்த வேளையில் இந்த ஊர்காவல் படையினரின் பங்கு எவ்வாறு இருந்ததென்பதும் பழங்கதையல்ல.

கோதபாய உருவாக்கிய புலனாய்வுப் பிரிவை முடக்கி, அங்கிருந்தவர்களை சிறைக்கு அனுப்பியதாலேயே இஸ்லாமிய பயங்கரவாதம் தலைதூக்கியதென்பது மகிந்த ராஜபக்சவின் குற்றச்சாட்டு.

பத்தாயிரம் வரையானவர்களைக் கொண்ட புலனாய்வுத்துறையில் 20பேர் மட்டுமே விசாரிக்கப்பட்டதாhகவும், இவர்களுள் 7 பேர் மட்டுமே தடுப்புக் காவலில் உள்ளதாகவும் அமைச்சர் சாகல ரத்னாயக்க, மகிந்தவுக்குப் பதிலளித்துள்ளார்.

இந்தப் பத்தாயிரம் புலனாய்வாளர்களில் எத்தனை இஸ்லாமியர்கள் உள்ளனரென்பது ஒருபோதும் தெரியவராது. நான்கு பிரபல இஸ்லாமிய அரசியல்வாதிகளுக்கு குண்டுதாரிகளுடன் தொடர்பு இருப்பதாக சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாகத் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால் தேடுதல் வேட்டையில் அகப்படும் கத்திகள், கோடரிகள், வாள்கள் போன்றவற்றை ஊடகங்களில் வெளியிட வேண்டாமென்று ஜனாதிபதி ஊடகங்களிடம் கேட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளுடன் போரிடுகையில் வேறு இடங்களிலிருந்து கொண்டு வந்த ஆயுதங்களை விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் என்று ஊடகங்கடாக பொய்யுரைத்த சிங்கள ஆட்சிபீடம்,  இஸ்லாமிய பயங்கரவாதத்தை மூடி மறைக்க ஊடகங்களின் ஆதரவைக் கேட்கிறது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சங்க அiறியில் வே. பிரபாகரனின் படமொன்று சுவரில் தொங்கியிருந்ததாக பொலிசார் சொல்கின்றனர். ஆனால், கொழும்பின் ஊடகங்களுக்கு பிரபாகரனின் படம் பொறித்த படங்களுடன் மாணவர்கள் கைதானதாக அரசாங்க தகவல் பிரிவு தெரிவிக்கிறது.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் விக்னேஸ்வரன் காரணம் கூறாது ஜனாதிபதியால் பதவி பறிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார். இவருக்கும் இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கும் என்ன சம்பந்தம்?

அமெரிக்கா உட்பட நான்கு நாடுகள் தற்போது இலங்கை அரசுக்கு புலனாய்வு ஒத்துழைப்பு (கலப்பு விசாரணை) வழங்குவதாக ஜனாதிபதி சிறிசேன பெருமையுடன் கூறுகிறார். ஆனால், ஜெனிவா தீர்மனப்படி வெளிநாட்டு நீதித்துறையை பொறுப்புக்கூறல் விசாரணைக்கு (கலப்பு விசாரணை) மறுத்து வருகிறார். இவ்விடத்தில் இலங்கையின் இறையாண்மைக்கு என்னாச்சு?

சீனா 17.8 மில்லியன் ரூபாவை குண்டுத் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்கென வழங்கியுள்ளது. இலங்கையின் பொலிஸ் படைக்கு பத்து வாகனங்களையும் வழங்கியுள்ளது.

இலங்கையில் இப்போது என்ன நடைபெறுகிறது?

தமிழினத்தை அழித்தொழிக்க சிங்கள தேசம் தெரிந்தெடுத்து வளர்த்த கடா, இப்போது அவர்கள் மார்பில் குத்தி பதம் பார்க்கிறது. சொல்லவும் முடியாமல் தடுக்கவும் முடியாமல் வளர்த்த தேசம் திண்டாடுகிறது.

கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பதுபோல அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகள் தத்தம் முறையில் இலங்கையைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முனைகின்றன.

இலங்கை இன்று கைம்பெண் நிலையில் உள்ளது. அப்பாவி மக்கள் அநாதரவாக்கப்பட்டுள்ளனர்!

No comments