முஸ்லீம் வர்த்தகரின் முகநூல் பதிவு - மீண்டும் முடங்கின சமூக வலைத்தளங்கள்



இலங்கை அரசாங்கத்தினால் இன்று அதிகாலை முதல் மீண்டும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

நேற்று முற்பகல் சிலாபத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை அடுத்தே சமூக வலைத்தளங்களை மீண்டும்  அரசாங்கம் முடக்கியுள்ளது.

சிலாபத்தைச் சேர்ந்த முஸ்லீம் வர்த்தகர் ஒருவர் முகநூலில் நேற்று பதிவேற்றிய தகவல் ஒன்றினையடுத்தே அங்கு வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த வர்த்தகரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், குறித்த முஸ்லீம் வர்த்தகர் இட்ட பதிவை சிங்கள இளைஞர் குழு ஒன்று தவறாக விளங்கிக்கொண்டதாலேயே குழப்பங்கள் ஏற்பட்டதாகக் குறப்பட்டுள்ளது.

நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் குறித்தான தனது விசனத்தை வெளியிட்ட ஹஸ்மார் ஹமீட் என்ற வர்த்தகர், “அளவுக்கதிகமாகச் சிரித்தால் ஒரு நாள் அழ வேண்டியும் வரும்” என்பதை “Dont laugh more 1 day u will cry” என்று தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் .

ஆனால், அதனை மொழிபெயர்த்த சிங்கள இளைஞர்கள் சிலர், ”இன்று மட்டும்தான் நீங்கள் சிரிப்பீர்கள்; நீங்கள் அழ இன்னும் ஒரு நாள் இருக்கின்றது” என்று பதிவிடப்பட்டதாக உணர்ந்து அதன் உண்மைத் தன்மையைக் கேட்க சிலாபம் நகரத்தில் அமைந்துள்ள மேற்படி வர்த்தகரின் கடைக்கும், பொலிஸ் நிலையத்துக்கும் சென்று தர்க்கத்தில் ஈடுபட்டனர். இதன்போது பிரச்சினை பூதாகரமானது. அங்கு ஏற்பட்ட பதற்ற நிலைமையையடுத்து கடைகள் அனைத்தும் நகரத்தில் மூடப்பட்டன.

தர்க்கத்தில் ஈடுபட்ட சிங்கள இளைஞர்களை வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுக் கலைத்த இராணுவம் அங்கு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தது.

இதனையடுத்து சிலாபம் பொலிஸ் பிரிவில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் உடன் அமுலுக்கு வந்தது.

எனினும் இன்று அதிகாலை வரை சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டிருக்காத போதும் இன்று அதிகாலை சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

No comments