ஐ.எஸ். அச்சுறுத்தல் தொடர்பாக பலமுறை கலந்துரையாடப்பட்டது


ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே, தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டம் நடத்தப்படவில்லை என்று தேசிய புலனாய்வுப் பணியகத்தின் தலைவர் சிசிர மென்டிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் சிறிலங்காவில் நடந்த குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக நேற்று சாட்சியம் அளித்த போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

”ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான புலனாய்வுத் தகவல், 2019 ஏப்ரல் 8ஆம் நாள் அரச புலனாய்வு சேவை தலைவர் நிலந்த ஜெயவர்த்தனவினால் எனக்கு வழங்கப்பட்டது.

காலை 11 மணிக்கு அந்தக் கடிதத்தை திறந்து பார்த்தேன். அந்த தகவலை அரச புலனாய்வு சேவை எங்கிருந்து பெற்றது என்று எனக்குத் தெரியாது. நிலந்த ஜெயவர்த்தனவின் கடிதத்தில் அதுபற்றிக் கூறப்பட்டிருக்கவில்லை.

அதனைப் பார்த்த பின்னர், பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவுடன் கலந்துரையாட முனைந்தேன். ஆனால் இந்திய பாதுகாப்பு செயலாளர் கொழும்பு வந்திருந்ததால் அவர் வேலைகளில் மூழ்கியிருந்தார். அவர்களுக்கிடையில் முன்னரே கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது,

பிற்பகல் 3 மணியளவில், பாதுகாப்புச் செயலரைச் சந்தித்துப் பேச எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அன்று நான் பெற்றுக் கொண்ட அந்த தகவலை வாய்மொழியாக அவரிடம் கூறினேன். நான் அந்த தகவலை வழங்கும் வரை அவர் அதுபற்றி அறிந்திருக்கவில்லை என்று எனக்குத் தோன்றியது,

இந்த விடயம் தொடர்பாக, ஏப்ரல் 9ஆம் நாள் வாராந்த புலனாய்வு ஒருங்கிணைப்பு கூட்டத்தில், கலந்துரையாட முடியும் என்று பாதுகாப்புச் செயலர் கூறினார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எனினும், அந்தக் கூட்டத்தில், தீவிரவாத தாக்குதல் குறித்த தகவலுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை.

அரச புலனாய்வுச் சேவையின் தலைவரால் அனுப்பப்பட்ட கடிதம் எனது மேசையில் இருந்தது, நான், காவல்துறை மா அதிபருக்கும், அரச புலனாய்வுச் சேவை தலைவருக்கும் இடையில் அமர்ந்திருந்தேன். அந்தக் கூட்டம் முடியும் கட்டத்தில், தீவிரவாத தாக்குதல் பற்றிய தகவல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அவர்களிடம் நான் கூறினேன்.

அன்று (ஏப்ரல் 9ஆம் நாள்) தீவிரவாத தாக்குதல் திட்டம் பற்றிய புலனாய்வு தகவல் குறித்து காவல்துறை மா அதிபருக்கு கடிதம் அனுப்பினேன். அதில், இந்த தகவலுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதையும் கடிதத்தின் மேல் பகுதியில் குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால் காவல்துறை மா அதிபர் அதற்கு பதில் அளிக்கவில்லை. ஏப்ரல் 21ஆம் நாள் வரை, பாதுகாப்புத் துறையை சேர்ந்த எவருமே என்னுடன், அந்த தகவலுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசவில்லை.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் நடப்பதற்கு முன்னதாக,  2019 பெப்ரவரி 19ஆம் நாள் தான், தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டம் கடைசியாக இடம்பெற்றிருந்தது.

2019 பெப்ரவரி 19ஆம் நாளுக்கும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற மறுநாளான, ஏப்ரல் 22ஆம் நாளுக்கும் இடையில் தேசிய பாதுகாப்புச்சபையின் கூட்டங்கள் நடக்கவில்லை.

பெப்ரவரி 19ஆம் நாளுக்கு முன்னதாக. 2019 ஜனவரி 14ஆம் நாள் தேசிய பாதுகாப்புச் சபை கூட்டம் இடம்பெற்றிருந்தது.

2018ஆம் ஆண்டில், தேசிய பாதுகாப்புச் சபை ஜனவரி, 5, பெப்ரவரி 19, மார்ச் 05, மே 02, ஜூலை 10, ஒக்ரோபர் 23, நொவம்பர் 13, டிசெம்பர் 3 ஆகிய நாட்களில் தான் கூடியது.

இந்தக் கூட்டங்களின் போது, சிலமுறை அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் நிலந்த ஜெயவர்த்தன, சஹ்ரான் காசிம் மற்றும் அவரது கூட்டாளிகளின் வெறுப்புப் பேச்சுகள் மற்றும் அடிப்படைவாதம் தொடர்பாக பேசியிருக்கிறார்.

ஐஎஸ் அமைப்பின் அச்சுறுத்தல்கள் தொடர்பாக, தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் பலமுறை கலந்துரையாடப்பட்டது.

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின்  தலைவர் சஹ்ரான் காசிம் தொடர்பாகவும், விவாதிக்கப்பட்டது. 2015 ஒக்ரோபர் 6ஆம் நாள் முதல்முறையாக சஹ்ரான் தொடர்பாக,  பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டிருந்தது.

2018 நொவம்பருக்குப் பின்னர் தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டங்களில் காவல்துறை மா அதிபர் பங்கேற்கவில்லை.

வழக்கமாக தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு, கூட்டம் தொடர்பான நாள்  மற்றும் நேரம் பற்றிய தகவல் பாதுகாப்புச் செயலர் மூலமே அனுப்பப்படும்.

நொவம்பர் 2018இற்குப் பின்னர்,  தேசிய பாதுகாப்புச் சபைக்கான கூட்டம் என்று  தகவல் அளிக்கப்படுவதில்லை. இருந்தாலும், சிறப்புக் கூட்டம் என்றே தகவல் அனுப்பப்பட்டது.

2019 ஜனவரியில் பெருமளவு வெடிபொருட்கள் வனாத்தவில்லுவில் கைப்பற்றப்பட்ட போது, தேசிய பாதுகாப்புச் சபை கூட்டத்தில் அதுபற்றி விவாதிக்கப்பட்டது.

அப்போது அதுபற்றி குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரித்துக் கொண்டிருந்தது. அந்த விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.” என்றும் அவர் கூறினார்.

No comments