ஆஸ்திரேலிய தேர்தல்: ஆளுங்கட்சி வென்றதால் தற்கொலைக்கு முயன்ற அகதிகள்

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் லிபரல் தேசிய கூட்டணியே வெற்றி பெற்றதால், தடுப்பு முகாம்களில் உள்ள பல அகதிகள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். 

தேர்தலுக்கு முன்பும் பின்பும் வெளியான கருத்துக்கணிப்புகளில் எதிர்க்கட்சியான லேபர் கட்சி இம்முறை ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், அதற்கு நேர்மாறாக ஆளும் லிபரல் தேசிய கூட்டணி வெற்றி பெற்று பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார்.

இந்த நிலையில், லேபர் கட்சி ஆட்சியைப் பிடித்தால் தங்களின் எதிர்காலம் மாறக்கூடும், தாங்கள் விரைவில் மீள்குடியமர்த்தப்படுவோம் என நம்பிக்கைக் கொண்டிருந்த அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் இந்த வெற்றியால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் சுமார் 10 அகதிகள் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயன்ற அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 5 ஆண்டுகளுக்கு மேலாக மனுஸ் மற்றும் நவுருத்தீவில் உள்ள ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 2013ம் ஆண்டு முதல், கடுமையான எல்லைப்பாதுகாப்பு கொள்கையினை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய லிபரல் அரசாங்கம், படகு வழியாக வந்தவர்களை ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்த அனுமதிக்க மாட்டோம் என்கின்றது. 

ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் நீண்டகாலமாக அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் அவர்களிடையே கடுமையான மன அழுத்தம், உடல் நிலை பிரச்னைகள் ஏற்பாடுவது தொடர் நிகழ்வாக இருந்து வருகின்றது. இதில் பல அகதிகள் உயிரிழந்தும் இருக்கின்றனர். 

இந்த நிலையிலேயே, ஆஸ்திரேலியாவின் தேர்தல் முடிவுகளை அகதிகள் பெரிதும் நம்பியிருந்ததாக சொல்லப்படுகின்றது. 

தேர்தல் வெற்றி அறிவிப்புக்குப் பின், ஒன்பது அகதிகள் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக கூறியிருக்கிறார் குர்து எழுத்தாளரும் தஞ்சக்கோரிக்கையாளருமான பெஹ்ரூஸ் பூச்சானி. “தற்போதைய நிலைமை கட்டுப்பாட்டை கடந்து இருக்கின்றது. இது போன்று நான் மனுஸ் தீவை கண்டதே இல்லை,” என அவர் கூறியிருக்கிறார். 

சுமார் 10 பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளதை அறிந்திருப்பதாக கூறியிருக்கிறார் மனுஸ் மாகாண காவல் தளபதி டேவி யப்பூ. 

போர் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக வெளியேறிய ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, சூடான் அகதிகள் ஆஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்பு முகாம்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருந்து வருகின்றனர். 

No comments