கடைசியில் அதிகாரிகள் கழுத்தில் வீழ்ந்த மாலை?


கிளிநொச்சியில் கடந்த டிசெம்பரில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு மாகாண நீர்ப்பாசன அதிகாரிகளின் கவனயீனக் குறையே காரணம் என ஆளுநரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் விசாரணைக் குழுவின் அறிக்கை தொடர்பில் மேற்கொண்டு உள்ளக விசாரணையை முன்னெடுக்க வடக்கு மாகாண பிரதம செயலாளரால் மற்றொரு குழு நியமிக்கப்படவுள்ளது.


கிளிநொச்சியில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்துக்கான காரணம் தொடர்பாக தீவிரமான பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே வடக்கு மாகாண ஆளுநரால் விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது.


இரணைமடுக் குளத்தில் தேக்கக் கூடிய அதிகபட்ச நீரின் அளவை விட, 3.5 அடி அதிகமாக, 39.5 அடி உயரத்துக்கு நீரைத் தேக்க அனுமதிக்கப்பட்டது குறித்தும்,  இதனால், கட்டுமானங்களுக்கு மேலாக நீர் வழிந்தோடியது குறித்து குற்றச்சாட்டும் அதில் ஒன்றாகும்.

குளத்தின் அனைத்து வான்கதவுகளும் ஒரே நேரத்தில் திறந்து விடப்பட்டதால், வெள்ளச் சேதம் ஏற்பட்டதாகவும் ஒரு குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இதனையடுத்து வடக்கு மாகாண ஆளுநரால் விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவால் தயாரிக்கப்பட்ட இறுதி அறிக்கை குழுவின் தலைவர் பொறியியலாளர் ரகுநாதனால் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிடம் இன்று (08) நண்பகல் ஆளுநர் செயலகத்தில் கையளிக்கப்பட்டது.

மாகாண நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் வெள்ள முகாமைத்துவத்தில் கவனயீனமாக நடந்துகொண்டதால் இந்த வெள்ள இடர் ஏற்பட்டது என விசாரணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதுதொடர்பில் உரிய நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொறுப்பை மாகாண ஆளுநர், பிரதம செயலாளரிடம் ஒப்படைத்துள்ளார்.

அதனடிப்படையில் பிரதம செயலாளரால் உள்ளக விசாரணைக்குழு அமைக்கப்பட்டு மேற்கொண்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

No comments