கேபிள் ரி.வி - இரவு நேர ஒளிபரப்புகளுக்குத் தடை

மாணவர்களின் கல்வி நடவடிக்கையை கருத்தில் கொண்டு இரவு வேளைகளில் கேபிள் தொலைகாட்சிகளின் ஒளிபரப்பை தடை செய்வது என தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

யாழ் கரவெட்டி பிரதேச சபையில் கேபிள் இணைப்புக்களை வழங்கும் நிறுவனங்களுக்கு கம்பங்களை நாட்டுவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட சபை அமர்வில் விவாதிக்கப்பட்ட போதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது.

யாழில் மாணவர்களின் கற்றல் வீழ்ச்சி அடைந்து வருகின்றது. அதற்கு பிரதான காரணிகளில் ஒன்றாக தொலைகாட்சி தொடர் நாடகங்களும் காரணமாக உள்ளன. குறிப்பாக இரவு 7 மணி தொடக்கம் 9 மணி வரையில் தொடர் நாடகங்கள் ஒளிபரப்ப படுகின்றன. இந்த நேரமே மாணவர்கள் கற்கும் நேரம். ஆனால் பெருமளவான மாணவர்கள் இந்த நேரங்களில் கற்காமல் தொலை காட்சிகளில் தொடர் நாடகங்களை பார்த்து விட்டு கற்காது தூங்குகின்றாகள்.

எனவே அந்த நேரங்களில் கேபிள் இணைப்புக்கள் வழங்கும் நிறுவனம் தமது ஒளிபரப்பு சேவையினை நிறுத்த வேண்டும் என சபையில் உறுப்பினர்கள் கோரியதை அடுத்து சபையால் கேபிள் இணைப்புக்கள் வழங்கும் நிறுவனங்கள் இரவு 7 மணி முதல் 9 மணி வரை தமது சேவையினை நிறுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதேவேளை , கேபிள் இணைப்பை வழங்கும் நிறுவனங்கள் கம்பங்களை நடும் போது , சபையின் அனுமதியினை பெற வேண்டும். நினைத்த இடங்களில் கம்பங்களை நட்டு இடையூறு விளைவிக்க கூடாது. சபையின் முறையான அனுமதியினை பெற்று தொழிநுட்ப ஆலோசனைகளையும் பெற வேண்டும் என சபையில் வலியுறுத்தப்பட்டது.

No comments