யாழ்ப்பாண கல்லூரி விவகாரம் சூடாகின்றது?


கூட்டமைப்பின் சுமந்திரனின் பினாமியாக செயற்பட்டுவருகின்ற தென்னிந்திய திருச்சபை வசமுள்ள யாழ்ப்பாண கல்லூரி விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபையினால் மேற்கொள்ளப்பட்ட யாப்புத் திருத்தங்கள் உள்ளிட்ட முரண்பாடான – முறைகேடான விடயங்களுக்கு எதிராக மல்லாகம் மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பழைய மாணவர்கள் சங்கத்தின் கொழும்புக் கிளையின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளடங்கலாக சபையின் 10 நிருவாகக் குழு உறுப்பினர்கள் பிரபல மூத்த சட்டவாளர் ஊடாக இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.
மூன்று வெவ்வேறு பட்ட யாப்புக்களை வழங்கி ஆளுநர் சபையில் பழைய மாணவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸினையும், பழைய மாணவர்களையும், அமெரிக்காவில் இருக்கும் தர்மகர்த்தா சபையினரையும், பாடசாலைச் சமூகத்தினையும் தென்னிந்தியத் திருச்சபையின் யாழ் அத்தியட்சத்தாதீனத்தின் பேராயரும், கல்லூரியின் ஆளுநர் சபையின் தலைவருமான பேராயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி டானியல் தியாகராஜாவும் அவருக்கு நெருக்கமான ஆளுநர் சபையினைச் சேர்ந்த ஏனைய உறுப்பினர்களும் ஏமாற்ற முற்பட்டதாகக் கல்லூரியின் பழைய மாணவர்கள் பலத்த கண்டனத்தினை அண்மையில் வெளியிட்டனர்.

ஆளுநர் சபையின் தலைவரும் யாப்புத் திருத்தம் தொடர்பாக‌ முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையிலே ஆளுநர் சபையினால் வெளியிடப்பட்ட 10-10-2014, 31-01-2015 மற்றும் 26-02-2015 திகதியிடப்பட்ட‌ மூன்று யாப்புக்களையும் செல்லுபடியற்றதாக்க வேண்டும், இந்த யாப்புக்களின் கீழ் இடம்பெற்ற கூட்டங்கள், அவற்றிலே மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் யாவும் செல்லுபடியற்றதாக்கப்படல் வேண்டும், இந்த யாப்புக்களின் அடிப்படையிலே கூட்டங்கள் இடம்பெறுவதனைத் தடுக்கும் வகையில் இடைக்காலத் தடை விதிக்கப்படல் வேண்டும், பதவி வழி வந்த உறுப்பினர் என்ற வகையில், கட்டாயமாகக் கூட்டங்களிலே கலந்துகொள்ளுவதற்கு எந்தக் கட்டுப்பாட்டுக்கும் உள்படாத‌ தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர் ஆளுநர் சபையில் தலைமைப் பதவி உள்ளடங்கலாக எந்தப் பதவியினையும் வகிக்கக் கூடாது போன்ற நிவாரணங்களைக் கோரி இந்த வழக்கினைக் கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தினைச் சேர்ந்த பத்து உறுப்பினர்கள் தாக்கல் செய்திருக்கிறார்கள்.

இந்த வழக்குக் கல்லூரியில் நீதி நிலைநாட்டப்படல் வேண்டும், வெளிப்படைத் தன்மையும், ஜனநாயகத் தன்மையும் பேணப்படல் வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து அண்மையில் பழைய மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின் பின்னணியில் முக்கியத்துவம் மிக்கதாக விளங்குகிறது.

யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபையின் தலைவர் பேராயர் டானியல் தியாகராஜா, அதன் உப தலைவர் சட்டத்தரணி செல்வி விஜுலா அருளானந்தம் ஆகியோர் நிருவாக முறைகேடுகள் பலவற்றில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையிலும், ஆளுநர் சபையினர் தர்மகர்த்தா சபையினரால் பரிந்துரைக்கப்பட்ட சீர்திருத்தங்களை நிறைவேற்றத் தவறியமையினையும் அடுத்து, பொஸ்டன், அமெரிக்காவில் இருக்கும் தர்மகர்த்தா சபையினர் பேராயர் தியாகராஜாவும், சட்டத்தரணி விஜுலா அருளானந்தமும் பதவி விலக வேண்டும் எனவும், அவ்வாறு விலகாவிடின் யாழ்ப்பாணக் கல்லூரிக்கு அனுப்பப்படும் பணம் 2019 ஜனவரியில் இருந்து முற்றாக நிறுத்தப்படும் எனவும் கடந்த ஜூலை மாதத்திலே கடிதம் ஒன்றினை அனுப்பினர்.

இந்தத் தீர்மானத்தினை எதிர்த்து ஆளுநர் சபையினரால்  சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் இருக்கும் நோர்ஃபோக் நீதிமன்றிலே வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகும் வரை கல்லூரிக்கான நிதியினை 80%ஆக வழங்குவதற்கு தர்மகர்த்தா சபையினர் சம்மதித்துள்ளனர்.

இதேவேளை, இந்த வழக்கின் நிமித்தம் ஆளுநர் சபையினரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களிலே கல்லூரியில் இருந்து பெருந்தொகைப் பணம் 2015, 2016ஆம் ஆண்டுகளிலே தென்னிந்தியத் திருச்சபையின் யாழ் அத்தியட்சாதீனத்துக்கு வழங்கப்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அத்துடன் பெற்றோர் சங்கம் அமைப்பது உள்ளடங்கலாகப் பல சீர்திருத்தங்களைத் தாம் மேற்கொள்வதாக ஆளுநர் சபையினர் தர்மகர்த்தா சபையினருக்கு வெளியிட்ட பொய்களும் இந்த ஆவணங்களினால் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன.
பெற்றோர் சங்கம் ஒன்றினை அமைப்பதற்கு யாழ்ப்பாணக் கல்லூரியின் நிருவாகம் தொடர்ந்தும் ஒத்துழைக்காமையினை அடுத்துக் கல்லூரியிலே பயிலும் பெற்றோர், பாதுகாவலரின் ஒரு குழுவினர் வட்டுக்கோட்டையில் இருக்கும் ஐக்கிய நாணயச் சங்கக் கட்டடத்திலே பெற்றோர் சங்கம் ஒன்றினை அமைத்துக் கூட்டங்களை நடாத்தி வருகின்றனர். இந்தச் சங்கத்துக்கு யாழ்ப்பாணக் கல்லூரியின் முன்னாள் அதிபரும், தென்னிந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயரும், ஆளுநர் சபையின் முன்னாள் தலைவருமான அதி வண கலாநிதி சுப்பிரமணியம் ஜெபநேசன், ஆலோசகராகச் செயற்படுகிறார்.

2018ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து இன்று வரை 5 நிரந்தர ஆசிரியர்கள் இடைவிலகி இருக்கிறார்கள். இவர்களின் இடைவிலகினால் ஏற்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்குப் புதிய நியமனங்களை மேற்கொள்ளாது, யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபையின் நியாயத்திக்கத்தின் கீழ் வரும் நிறுவனங்களான ஈவ்லின் ரட்ணம் நிறுவனம், யாழ்ப்பாணக் கல்லூரியின் தொழிநுட்ப நிறுவனம் ஆகியவற்றிலே பணி புரிந்தோர் முழு நேரமாகவோ, பகுதி நேரமாகவோ நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களிலே சிலர் தாம் கல்வி கற்பிக்கும் பாடங்களிலே உரிய தகைமைகள் அற்றவர்களாகவும் உள்ளனர்.
தம்மிடம் இருந்து ஏற்கனவே சம்பளம் பெறுவோரினை யாழ்ப்பாணக் கல்லூரியிலே ஆசிரியர்களாக நியமிப்பதன் மூலம் புதிய ஆசிரியர் நியமனத்தின் ஏற்படும் ஊழியச் செலவுகளினை மேற்கொள்ளுவதில் இருந்து ஆளுநர் சபை தப்பிக்க முற்படுவதாக பழைய மாணவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். அத்துடன் இடைவிலகிய ஆசிரியர்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட சம்பளத்துக்கு இப்போது என்ன நடக்கிறது எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

யாழ்ப்பாணக் கல்லூரியின் தொழிநுட்பக் கல்லூரியின் பல கட்டடங்களை இந்தியாவில் இருக்கும் தனியார் முதலீட்டாளர் ஒருவருக்குக் குத்தகைக்கு கொடுத்து அவர் அங்கு ஒரு சர்வதேசப் பாடசாலையினை அமைப்பதற்கான வழி வகைகளையும், கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஆளுநர் சபைக்கான பிரதிநிதியின் பலத்த் எதிர்ப்புக்கு மத்தியில் ஆளுநர் சபை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

தொழிநுட்ப நிறுவனத்தின் ஆசிரியர்களும், ஊழியர்களும் யாழ்ப்பாணக் கல்லூரிக்கு மாற்றம் செய்யப்படுகின்றமையும், இந்தக் குத்தகை விவகாரமும், தொழிநுட்பக் கல்லூரியினை முற்றாக‌ மூடுவதற்கான முயற்சிகளிலே ஆளுநர் சபையினர் ஈடுபடுகிறார்களோ என்ற ஐயத்தினை வட்டுக்கோட்டைச் சமூகத்தினர் மத்தியிலே தோற்றுவித்துள்ளது.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பினை வெளியிட்டு யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் லண்டன் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் கிளையினர் கடிதங்களை ஆளுநர் சபைக்கு அனுப்பி வைத்துள்ளனர். யாழ்ப்பாணக் கல்லூரிக்குப் போட்டியான வகையில் இலாபம் உழைக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்படும் இந்த சர்வதேச பாடசாலைக்கு எதிராக, அதனைச் செயற்படாது தடுக்கும் வகையில் இடைவிடாத போராட்டங்களைத் தாம் மேற்கொள்ளவிருப்பதாகப் பழைய மாணவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். 

No comments