புலிவேசம் போடவேண்டாம்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஆட்டத்துக்கு எல்லாம் எம்மால் ஆடவே முடியாது. அவர்கள் புலி வேசம் போட்டு ஆடுகின்றார்கள்” என்று தெரிவித்த மஹிந்த அணியினர், “ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு குப்பையில் தூக்கிவீச வேண்டும். அதன் பரிந்துரைகள் அனைத்தையும் அடியோடு நிராகரித்து உலக நாடுகளுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பவேண்டும்” என்றும் கூறியுள்ளனர்.
இது தொடர்பில் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தமிழ் ஊடகம் ஒன்றிடம் மேலும் தெரிவித்ததாவது:-
“ஐ.நாவின் புதிய தீர்மானத்துக்கு இலங்கை அரச குழு இணை அனுசரணை வழங்கியமை மகா தவறு.
நாட்டின் ஜனாதிபதி சுமந்திரன் அல்லர். மைத்திரிபால சிறிசேனவே ஜனாதிபதி. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தான்தான் நாட்டின் ஜனாதிபதி என்ற ரீதியில் ஜெனிவாவில் செயற்பட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஆட்டத்துக்கு எல்லாம் எம்மால் ஆடவே முடியாது. அவர்கள் புலி வேசம் போட்டு ஆடுகின்றார்கள்.
ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டது இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானமே ஆகும். இதனை வெறும் தீர்மானமாக நாம் நினைக்கக்கூடாது.
இந்தத் தீர்மானத்தை குப்பையில் தூக்கிவீச வேண்டும். குருதி சிந்தி நாட்டை மீட்டெடுத்த எமது இராணுவத்தை எவரும் தண்டிக்கவே முடியாது” – என்றார்.

No comments