வரவு செலவுத்திட்டத்தில் பட்டதாரிகளுக்கு இடமில்லை

பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு உள்ள 2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு தீர்வு கொடுக்கின்ற எந்தவொரு வேலை திட்டமும் இல்லாதது மிகவும் மன வேதனையை தருகின்றது. அதே நேரத்தில் சிறுபான்மை மக்களின் கட்சிகள் பாரிய அழுத்த குழுக்களாக மாறி பட்டதாரிகள் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் ஏ. எச். ஜெசீர் தெரிவித்தார்.

கல்முனையில் நேற்று (09) ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார். இச்சந்திப்பில் சங்கத்தின் செயலாளர் ஏ. ஆர். றினோஸ், பொருளாளர் எஸ். உனைஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அவர் இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் கட்டாக்காலி நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு 100மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கி உள்ளனர். ஆனால் பட்டதாரிகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கு எந்தவொரு நிதி ஒதுக்கீடும் இதில் கிடையாது. பட்டதாரிகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஏதுவான பட்ஜெட்டை கொண்டு வருவார் என்று வேலையில்லா பட்டதாரிகளின் பிரதிநிதிகளுக்கு நிதியமைச்சர் வாக்குறுதி வழங்கி இருந்தபோதிலும் எதுவுமே நடக்கவில்லை. எனவே வரவு - செலவு திட்டத்தை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர்கள், முதலமைச்சர்கள் என்று ஏகப்பட்டவர்களை நாம் கடந்த இரு வருடங்களுக்கு இடையில் பல தடவைகள் சந்தித்து பேசியபோதிலும் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வை அவர்கள் பெற்று தருவதாக இல்லை. தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளை அள்ளி வீசி விட்டு பின்னர் வாய் மூடி மௌனமாக இருக்கின்றனர். நாம் அவ்வப்போது போராட்டங்களை முடுக்கி விடுகின்றபோது மாத்திரம் சில கண் துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்கள்.

நாடாளாவிய ரீதியில் வேலையற்று 58,000பட்டதாரிகள் உள்ளனர். இவ்வாறே கிழக்கு மாகாணத்தில் 7,000பட்டதாரிகள் உள்ளனர். பட்டதாரிகளின் பிரச்சினையை அரசாங்கம் முன்னிலைப்படுத்தி முதலில் முழுமையாக தீர்க்க வேண்டும்.

வருகின்ற பொது தேர்தலுக்கு முன்னதாக அரசாங்கம் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும். இல்லையேல் அத்தேர்தலில் 58,000பட்டதாரிகளும் ஒருமித்து நின்று அரசாங்கத்துக்கு சரியான பாடத்தை புகட்டுவார்கள் என்பதை முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கின்றோம். 58,000பட்டதாரிகளுடைய குடும்பங்கள், உறவுகள், நட்பு வட்டங்கள் ஆகியவற்றின் வாக்குகள் கணிசமான தாக்கத்தை அரசாங்கத்துக்கு ஏற்படுத்தும் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதே நேரத்தில் சிறுபான்மை மக்களின் கட்சிகள் பாரிய அழுத்த குழுக்களாக மாறி பட்டதாரிகள் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

No comments