ஜெனிவா தீர்மான இணை அனுசரணையில் இருந்து விலகுகிறது சிறிலங்கா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு வழங்கிய இணை அனுசரணையில் இருந்து விலகிக் கொள்வது குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

”வெளிநாட்டுபங்களிப்புடன் கூடிய போர்க்குற்ற தீர்ப்பாயம் ஒன்றை அமைக்க இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது.

இந்த தீர்மானத்துக்கு வழங்கிய இணை அனுசரணையில் இருந்து விலக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த விடயம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டு வருகிறது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடருக்கு நாங்கள் தயாராகி வருகிறோம்.  நாங்கள் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதை காட்டுவோம்.

எமது ஆயுதப்படைகள் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை. விடுதலைப் புலிகளாலேயே மிக மோசமான குற்றங்கள் இழைக்கப்பட்டன.

ஜெனிவா அமர்வுகளில் எமது நிலைப்பாடு தொடர்பாக தெளிவாக எடுத்துக் கூறப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, 2015ஆம் ஆண்டு செப்ரெம்பர் 20ஆம் நாளுக்குப் பின்னர் சிறிலங்காவின் நிலைப்பாட்டில் இந்த திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த விடயம் குறித்து தற்போது சிறிலங்கா அதிபருடன் கலந்துரையாடப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது.

No comments