ரணிலை பதவி நீக்கக் கோரும் வழக்கு - ஆவணங்கள் சமர்ப்பிக்க உத்தரவு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற ஆசனத்தை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிரியந்த பெர்னாண்டோ மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனு மீதான விசாரணைக்கு அனுமதி வழங்காமலே அதனை நிராகரிக்குமாறு பிரதிவாதியான ரணில் விக்ரமசிங்க சார்பில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி கே.கணகீஸ்வரன் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

இரு தரப்பினரும் முன்வைத்த விடயங்களை கருத்திற்கொண்ட நீதிபதிகள் குழாம், அடிப்படை எதிர்ப்பு தொடர்பான தீர்ப்பை மே மாதம் 21 ஆம் திகதி அறிவிப்பதற்கு தீர்மானித்தது.

ஏப்ரல் முதலாம் திகதி அல்லது அதற்கு முன்னர் எழுத்துமூல ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் இருதரப்பினருக்கும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

தனது குடும்ப நிறுவனங்களின் ஒன்றான லேக் ஹவுஸ் பிரின்ட்ர்ஸ் மற்றும் பப்ளிஷர்ஸ் தனியார் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்படுவதாகவும், அந்நிறுவனத்திற்கு தனிப்பட்ட இலாபத்தை ஈட்டித்தரும் நோக்கில் சில அரச நிறுவனங்களுடன் உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டுள்ளதாகவும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஷர்மிலா கோனவல தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இது அரசியலமைப்பை மீறிய செயல் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதை தடை செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறும் மனுவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

No comments