கோவணத்தையும் கேட்கிறாரா? வடக்கு ஆளுநர்!


கோவணத்துடன் ஓடிய மக்களிடம் வடமாகாண ஆளுநர் ஆவணங்களை கேட்பது வேடிக்கையானது. ஆனாலும் கேப்பாபிலவு மக்கள் எவரும் ஆவணங்கள் இல்லாமல், தங்களுடைய காணிகளுக்கான போராட்டம் நடாத்தவில்லையென கூறியிருக்கும் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன், கேப்பாபிலவு மக்களின் உரிமைக்கான குரலை மலினப்படுத்தகூடாது எனவும் கூறியுள்ளார். 

சமகால அரசியல் நிலமைகள் குறித்து மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் யாழ்.ஊடக அமையத்தில் இன்று காலை நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதனை தெரிவித்தார்.

வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன்  அண்மையில் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியே செவ்வியில் கேப்பாபிலவு மக்கள் தொடர்பாக கூறியிருந்த கருத்து குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், 2012ம் ஆண்டு 09ம் மாதம் 25ம் திகதிய ஜெனீவா தீர்மானத்திற்கமைய கேப்பாபிலவு மக்கள் அவர்களது சொந்த விருப்பத்திற்கு மாறாக கேப்பாபிலவுக்கு அருகில் உள்ள சீனியாமோட்டை கிராமத்தில் வலிந்து குடியேற்றப்பட்டார்கள். அது தற்காலிகமான குடியேற்றம் என அப்போது கூறப்பட்டது.

அப்போதே கேப்பாபிலவு மற்றும், பிலக்குடியிருப்பு மக்கள் தம்மை தமது சொந்த காணிகளில் மீள்குடியேற்றுமாறு கோரி தொடர்ச்சியாக பல தடவைகள் போராட்டங்களை நடத்தியிருந்தார்கள். மேலும் 1887ம் ஆண்டு தொடக்கம் கேப்பாபிலவு மற்றும் பிலக்குடியிருப்பு கிராமங்களில் மக்கள் பூh்வீகமாக வாழ்ந்தார்கள். அந்த கிராமங்கள் பழமையான தமிழ் கிராமங்கள் என்பதற்கும் இன்றும் சான்றுகள் உள்ளது. 


2009ம் ஆண்டு மக்கள் தமது சொந்த இடங்களிலிருந்து வெளியேறினார்கள்.2012ம் ஆண்டு மீள்குடியேற்றத்திற்கு கொண்டுவரப்பட்டது தொடக்கம் இன்றளவும் மக்கள் தமது சொந்த காணிகளுக்கான தொடர்ந்தும் போராட்டம் நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள். போருக்கு முன்னர் அந்த மக்கள் எவரிடமும் கையேந்தாமல் தமது சொந்த காலில் வாழ்ந்த மக்கள். 

அந்த மக்கள் ஆளுநர் கூறுவதைபோல் இன்று மாற்று காணிகளை கேட்கவில்லை. மாற்று காணிகள் தேவை என்றால் அதனை அந்த மக்கள் எப்போதோ பெற்றிருப்பார்கள். அதேபோல் மாற்று காணிகளை வழங்க இந்த ஆளுநர் வரவேண்டும் என்ற அவசியமும் இல்லை. அதனை வழங்க பலர் தயாராக இருந்தார்கள். அப்போதே மாற்று காணிகளை மக்கள் பெற்றிருப்பார்கள்.

மேலும் ஆவணங்கள் இல்லை என ஆளுநர் கூறுவது விந்தையாக இருக்கின்றது. 2009ம் ஆண்டு இறுதிப் போரில் கட்டிய கோவணமும் இல்லாமல் சென்ற மக்களிடம் ஆவணங்களை கேட்க முடியுமா? ஆனாலும் சில மக்கள் ஆவணங்களை வைத்திருக்கின்றார்கள். மேலும் பிரதேச செயலக தகவல்களின் படி 59.5 ஏக்கர் காணி மக்களுக்கு உரித்தானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

முதலில் அந்த காணிகளை பெற்றுக் கொடுக்கவேண்டுமே தவிர, பிந்தி வந்து மக்களின் காணிகளில் குந்தியிருப்பவர்களுக்காக ஆளுநர் பேச நினைப்பது அப்பட்டமான தவறு, மேலும் கேப்பாபிலவு மக்கள் கடந்த 2 வருடங்களாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அங்கே அவர்கள் சொகுசு பங்களாக்களில் உட்கார்ந்திருந்து போராட்டம் நடத்தவில்லை. 

வீதியில் மழை, வெய்யில், பனி, என எல்லாவற்றுக்குள்ளும் கிடந்து நுளம்பு கடி, விஷ ஜந்துக்களால் உண்டாகும் தாக்கங்கள் என பல்வேறு துன்பங்களை சந்தித்து போராட்டம் நடத்தும் நிலையில் அரச சார்பற்ற நிறுவனங்களின் தூண்டுதலில் மக்கள் போராடுகிறார்கள் என ஆளுநர் கூறியதன் பின் தமிழ் ஆளுநர் வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு தமிழ் ஆளுநரை கொடுத்துள்ளார்களா? என நினைக்க தோன்றுகிறது. அந்த மக்கள் சுயமாக தங்களுடைய வாழும் உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு பின்னால் எவரும் இல்லை. அதனை ஆளுநர் கேப்பாபிலவு மக்களுடன் தங்கி வேண்டுமானால் உறுதிப்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்தார்.

No comments