சிறிலங்காவில் வெள்ளைவானை அமெரிக்காவே அறிமுகப்படுத்தியதாம்

சிறிலங்காவில் வெள்ளை வான் கடத்தல்களை தான் அறிமுகப்படுத்தவில்லை என்றும், அமெரிக்காவே அதனை இலங்கையில் அறிமுகப்படுத்தியது என்றும் குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“ செப்ரெம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர், உலகெங்கும் உள்ள தீவிரவாதிகளை அமெரிக்கா தேடிப்பிடித்து, குவான்டனாமோ தளத்துக்கு கொண்டு சென்றது.

அப்போது மலேசியர் ஒருவர் சிறிலங்காவில் இருந்தார். அமெரிக்காவின் எவ்பிஐ (FBI) அவரை தேடிப்பிடித்தது.  அவரை இங்கிருந்து கொண்டு செல்வதற்கு, அவர்கள் நிறைய விடயங்களைச் செய்தார்கள்.

அவரிடம் ஒரு கடவுச்சீட்டைக் கொடுத்து இங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை அவர்கள் அனுமதிக்கச் செய்தனர். பின்னர் அவரை சிறிலங்காவில் இருந்து வெளியேற்றினர்.

அதற்கு அவர்கள் வழக்கமான நடைமுறைகளை பின்பற்றவில்லை. இது, நாங்கள் அரசாங்கத்தைப் பொறுப்பேற்பதற்கு முன்னர் நடந்தது.

சிறிலங்காவில் அல்லது வேறெங்கும் உள்ள புலனாய்வு அமைப்புகள், தீவிரவாத முறியடிப்பு நடவடிக்கைகளுக்கு குறிப்பிட்ட சில வழிமுறைகளைப் பின்பற்றுகின்றன.

சிறிலங்காவிலும் கூட,  அவர்கள் இந்த வழிமுறைகளில் சிலவற்றை நீண்டகாலமாகப் பின்பற்றுகிறார்கள். போரின் போது மாத்திரமன்றி, ஜேவிபி கிளர்ச்சியின் போது கூட அவர்கள் இவற்றைப் பின்பற்றினர்.

சந்தேகப்படும் நபர் ஒருவர் அத்தகையதொரு வழிமுறையினால் விசாரணைக்கு கொண்டு செல்லப்படுவார். இது என்னால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்று அல்ல. இந்த வழிமுறை உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.

எமது புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்திய ஹைஏஸ் வான்கள், வெள்ளை நிறைமுடையவை என்பதால், வெள்ளை வான் என அழைக்கப்பட்டிருக்கலாம்.

அதனை நான் அறிமுகப்படுத்தவில்லை. அதற்கு முன்பிருந்த அரசாங்கங்களின் கீழும் அது நடந்தது.

ஜேவிபி வன்முறைக்காலத்தில், இளைஞர்கள் எப்படி அடையாளம் தெரியாதவர்களால் எப்படி துடைத்தழிக்கப்பட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

சாக்குப் பை கதைகள் எல்லோருக்கும் தெரியும். ஆனாலும், நான் ஏன் குறிவைக்கப்படுகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை.

1988 / 89 காலப்பகுதியைப் போன்று, எமது ஆட்சிக்காலத்தில் அரசியல் எதிராளிகள் எவரும், கடத்தப்படவில்லை.  அந்த நேரத்தில் என்ன நடந்தது என்று 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

ஆபத்தான தீவிரவாதிகளுக்கு எதிரான செயற்பாடுகள் தான் எமது காலத்தில் இடம்பெற்றன.

2005இல் விடுதலைப் புலிகள் தெற்கில் பாரிய வலையமைப்பு ஒன்றைக் கொண்டிருந்தனர்.  அவர்கள் பெரியளவில்  தென்பகுதியில் ஊடுருவியிருந்தார்கள். அதனால், அரசியல்வாதிகள் மற்றும் இராணுவத்தினரை கொல்ல முடிந்தது.

நாடு முழுவதும் அவர்கள் போரிட்டார்கள். அவர்கள் கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் பல இடங்களில் புலனாய்வு வலையமைப்பையும், ஆயுத களஞ்சியங்களையும் கொண்டிருந்தார்கள்.

நாங்கள் தற்கொலை போராளிகளையும், உளவாளிகளையும் கண்டறிய வேண்டியிருந்தது. தீவிரவாதத்துக்கு எதிராக போரிடும் போது, வழக்கமான நடைமுறைகளை பின்பற்றிக் கொண்டிருக்க முடியாது.

அவர்கள் இரகசியமான கரந்தடி முறையைப் பின்பற்றி வித்தியாசமான முறையில் போரிட்டுக் கொண்டிருந்தனர்.  நாங்களும் அதுபோன்ற வழியிலேயே முறியடிக்க வேண்டியிருந்தது.

புலனாய்வு அமைப்புகள் செயற்படுவதற்கு அதுவே வழியாக இருந்தது. எனினும், ஐதேகவின் பரப்புரைகள் அனைத்தும் என் மீது தான் உள்ளன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments