இரண்டு மாதங்களில் மரணதண்டனை அமுலில்

எத்தகைய தடைகள் வந்தாலும் இரண்டு மாதங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதி என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திட்டவட்டமாக  அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (06) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

”  மரணதண்டனையை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தாலும், அதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. மனித உரிமை என்ற போர்வையில் இலங்கைக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன.

சிறந்த நாட்டை உருவாக்க வேண்டுமாக இருந்தால், சட்டங்களைக் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கான ஆவணங்களை கடந்த ஒன்றரை

வருடங்களாகத்கோரி வருகின்ற போதிலும், அதனை வழங்குவதில் தாமதம் நிலவுகின்றது.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் சரியான ஆவணங்கள் கடந்த ஜனவரி மாதத்திற்கானது மாத்திரமே கிடைத்துள்ளது.

மரண தண்டனையை நிறைவேற்றுவதாக அறிவித்ததன் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்ட பலரும் மேன்முறையீடு செய்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டு பிரஜை ஒருவருக்கு மாத்திரமே தற்போது காணப்படும் ஆவணங்களின் படி மரண தண்டனையை நிறைவேற்ற முடியும்.

வௌிநாட்டவர் ஒருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற நான் விரும்பவில்லை.

அடுத்த இரண்டு மாதங்களில் மரணதண்டனையை அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.

மனித உரிமை ஆணைக்குழு உள்ளிட்ட மனிதாபிமான அமைப்புகளின் ஊடாக எந்தளவு எதிர்ப்புகள் எழுந்தாலும் அதனை நிறைவேற்றியே தீருவேன்.” என்றார்.

No comments