தீர்வு தரப்படும் வரை திருப்பி அனுப்ப வேண்டாம்!


விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் தொடர்ச்சியாக இலங்கை பாதுகாப்பு படைகளது அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ள நிலையில் அது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள சர்வதேச நாடுகள் ஆர்வம் கொண்டுள்ளன.   

அவ்வகையில் முன்னாள் போராளிகளிற்கும் சுவிட்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான  முன்மைச்செயலாளர் கிசெல் ஸ்செலப்புக்கும் இடையே  சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது போருக்கு பின்னரான முன்னாள் போராளிகளின் பாதுகாப்பு, சமூக, பொருளாதாரச் செயற்பாடு கள், சமூக நிலை, அரசியல் களத்தில் அவர்களது வகிபாகம் தொடர்பாகவும்  கலந்துரையாடப்பட்டுள்ளது. 

அதோடு  அரசு தமிழர் பகுதிகளில் புதிய முறையிலான நில ஆக்கிரமிப்பு, வலிந்து காணாமல் செய்யப்பட்டோருக்கான பொறுப்புக் கூறலில் காணப்படுகின்ற அசமந்தப்போக்கு, அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய உறுதிமொழிகளின் வழி செயற்படாமை தொடர்பாகவும்  கவனம் செலுத்தப்பட்டதாக போராளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பெண்களை தலைமையாகக் கொண்டுள்ள குடும்பங்களை இலக்கு வைத்து மேற் கொள்ளப்படுகின்ற நுண் கடன்கள் மூலம், தற்கொலை, மன உளைச்சல் மற்றும் பன்னாட்டு உதவிகள் வழங்கப்படவேண்டியமைக்கான தேவைகள் தொடர்பாகவும்  தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று எதிர்வரும் காலங்களில் இலங்கையில் நிலையான தீர்வுகள் எட்டப்படும் வரை தமிழர்கள் திருப்பி அனுப்பப்படுவது நிறுத்தப்படவேண்டும் எனவும் அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

No comments