முஸ்லீம் தலைமைகளின் இராஜதந்திரம் தமிழ்த் தலைகளிடம் இல்லை

கிழக்கு மாகாண ஆளுநர் நியமன விடயத்தில் தமிழ்த் தலைமைகள் தொடர்ச்சியாக எடுத்த முடிவுகளே காரணம் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக, ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவரால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“கிழக்கில் இன்று எத்தனையோ அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் அவை தமிழர்களுக்குக் கிடைப்பது என்பது ஓர் எட்டாக்கனியாகவே இருந்துள்ளது.
இதை எவ்வாறு எமது மக்களுக்கும் பெற்றுக்கொடுக்க முடியும் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
இதன்படி, ஜனாதிபதிக்கு இருக்கும்அதிகாரத்தைப் பயன்படுத்தி நாம் எமது மக்களுக்குப் பெற முடிந்த சிலவற்றையேனும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதே எனது தீர்மானம்.

எனவே, இனிவரும் காலங்களிலாவது கிழக்கு தமிழர்களின் இருப்பு குறித்து கூட்டமைப்பு உட்பட தமிழ்த் தலைமைகள் நினைவில் வைத்துச் செயற்படுவார்கள் என நான் நினைக்கின்றேன்.
எது எப்படியோ ஆளுநர் நியமன விடயத்தில் ஜனாதிபதிக்கு நான் முழுமையான அழுத்தத்தைக் கொடுத்து எமது கிழக்கு மக்களின் இருப்பைக் காப்பதற்கான போராட்டத்தை முன்னெடுப்பேன் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

நான் கிழக்கு அபிவிருத்தி அமைச்சை எடுத்தமைக்கு துள்ளிக் குதித்துத் துரோகிப் பட்டம் சூட்டும் அளவுக்குச் சென்றார்கள். இன்று ஊருக்கு ஓர் அமைச்சர் என்ற நிலை முஸ்லிம் மக்கள் மத்தியில் உருவாகி வருகின்றது. அது அவர்கள் அரசியல் சாணக்கியம். அவர்கள் இந்த நாட்டை யார் ஆண்டாலும் தங்கள் இனத்தை வாழ வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் இராஜதந்திரமாகச் செய்கிறனர்.

அவர்கள் அபிவிருத்திக்காகப் போராடி எந்த உரிமையையும் இழக்கவில்லை. ஆனால், கிழக்கில் எம் மக்களின் நிலை? இரண்டும் அற்ற நிலைக்கே தள்ளப்பட்டுள்ளார்கள்” – என்றுள்ளது.

No comments