மூவாயிரமா?நான்காயிரமா? சுகிர்தனின் சந்தேகம்!


வலிகாமம் வடக்கில் படையினரின் கட்டுப்பாட்டில் இன்னமும் உள்ள நிலப்பரப்பு தொடர்பில் வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் அடக்கி வாசிக்க முற்பட்டுள்ளதாக இடம்பெயர்ந்த மக்கள் குற்றச்சாட்டுக்களினை முன்வைத்துள்ளனர்.படையினரது ஆக்கிரமிப்பில் நான்கு ஆயிரம் ஏக்கர் காணிகள் உள்ள நிலையில் தற்போது மூவாயிரம் ஏக்கர் வரையிலேயே உள்ளதாக வலி.வடக்கு பிரதேசசபைத் தலைவர் சோமசுந்தரம் சுகிர்தன்; குறிப்பிட்டுள்ளார். 

வலிகாமம் வடக்கில் பல ஆயிரக் கணக்கான ஏக்கர் காணிகள் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து தற்போது விடுவிக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய தையிட்டி தெற்கு தையிட்டி வடக்கு பிரதேசங்களிலிருந்து ஒரு தொகுதி காணிகள் 29 வருடங்களின் பின்னர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு காணிகள் விடுவிக்கப்பட்டிருப்பது பொது மக்களுக்கு மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக வலிகாமம் வடக்கில் இன்னமும் 3 ஆயிரம் ஏக்கர் காணிகள் படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. அவ்வாறு படையினர் வசமுள்ள பொதுமக்களின் அனைத்துக் காணிகளும் விடுவிக்கப்பட்டாலே மீள்குடியேற்றம் முழுமைப்படுத்த முடியும். ஆகவே படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்திருந்தார்.

அவ்வாறாயின் மீதி ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பினையும் அவர் படைகளிற்கு தாரை வார்த்துவிட்டாராவெனவும் இடம்பெயர்ந்த மக்கள் குற்றச்சாட்டுக்களினை எழுப்பியுள்ளனர்.

தமிழரசுக்கட்சி பிரமுகரான அவர் அரச படைகளது ஆக்கிரமிப்பினை மறைத்துவருவதாக பல தரப்புக்களும் குற்றச்சாட்டுக்களினை முன்வைத்துவருவது தெரிந்;ததே. 

No comments