சலுகை அரசியல்:ஈபிடிபியினை முந்தும் கூட்டமைப்பு!
அரசியல் தீர்வு திட்டம் மற்றும் தமிழ் மக்களது முக்கிய பிரச்சினைகளான காணாமல் போனோர்,சிங்கள குடியேற்றம்,பௌத்த மயமாக்கல்.காணாமல் போனோர் விவகாரமென அனைத்தினையும் கைவிட்டுள்ள தமிழரசுக்கட்சி தற்போது சலுகை அரசியலில் முழுமையாக குதித்துள்ளது.

இதன் பிரகாரம் வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கென எதிர் வரும் வரவு செலவுத் திட்டத்தில் 5 பில்லியன் ரூபா தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு அத்தொகையானது பிரதமர் தலமையிலான வடக்கு கிழக்கு அபிவிருத்திச் செயலணியின் திட்டச் சிபார்சில் முன்னெடுக்கப்படுமென தமிழரசு பிரச்சார முகவர்கள் முழங்கத்தொடங்கியுளளனர். 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தலமையில் கூட்டமைப்பினை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கிற்கான அபிவிருத்திச் செயலணிக் கலந்துரையாடல் நேற்று பிரதமர் தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்றது. 

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலைய பணியை முன்கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பதோடு இணக்கம் காணப்பட்ட காங்கேசன்துறை விமான நிலையத்தின் பணியினையும் முன்னெடுப்பதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பைக் கோருவது. வடக்கு கிழக்கு மாகாணத்திற்கான 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தினை இந்த ஆண்டில் முன்னெடுப்பது,வீதிகள் அமைப்பது என நிவாராண அரசியல் முழு அளவில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேநேரம் கிளிநொச்சி மாவட்டத்தின் குறிஞ்சாத்தீவு உப்பளம் , பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை ஆகியவற்றுடன் வெள்ளப்பாதிப்பால் அழிவடைந்த வீதிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. 

குறித்த கலந்துரையாடலில் வடக்கு கிழக்கிற்கான அபிவிருத்திச் செயலணியின் செயலாளர் சிவஞானசோதி மற்றும் வடக்கு , கிழக்கு மாகாணக்களிற்கான இணைப்புச் செயலாளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

No comments