மகிந்தவுக்கு சுமந்திரன் அழைப்பு

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது மஹிந்த தலைமையிலான அணியினருக்குப் பகிரங்கமாக ஒரு அழைப்பு விட விரும்புகின்றேன். அதாவது புதிய அரசமைப்பு உருவாகுவதை தயவு செய்து நீங்கள் தடுக்கவேண்டாம். அவர் எங்களோடு சேர்ந்து வரவேண்டும்.”

– இவ்வாறு பகிரங்கமாகக் கோரினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி.

நேற்றுப் பருத்தித்துறையில் தனக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் ஏற்புரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

“பொங்கல் தின வாழ்த்துச் செய்தியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வொன்று கிடைக்க வேண்டுமெனத் தான் பிரார்த்திப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

அதனை நாங்கள் வரவேற்கிறோம். தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு தேவை என்பதை அவர் வெளிப்படையாகச் சொன்னதை நாங்கள் வரவேற்கிறோம்.

அப்பிடியொன்று இப்போது பிறந்திருக்கும் தை மாதத்திலே வர வேண்டுமென அவர் பிரார்த்திப்பதாகச் சொல்லியமைக்கு நாங்கள் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆகவே, அதனைச் செய்யும் வழியில் எங்களோடு சேர்ந்து வரவேண்டுமென்றும் அவரிடம் நாங்கள் ஒரு கோரிக்கையையும் விடுக்கிறோம்.

இந்த வரைவைப் பாருங்கள். இந்த வரைவிலே நாட்டைப் பிரிப்பதற்கான எந்தவித யோசனையும் கிடையாது. முற்று முழுதாகப் பிளவுபடமுடியாத நாடு என்பதற்கு அப்பாலும் சென்று பிரிக்கப்பட முடியாத நாடு என்ற சொல் சேர்க்கப்பட்டிருக்கின்றது.

ஆனால் அதிகாரங்கள் முழுமையாகப் பிரிக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. அதைத் தான் நாங்கள் கேட்கின்றோம்.

ஆளும் அதிகாரங்கள் எங்கள் கைக்கு வரவேண்டும். ஒரே நாடாக இருப்பதில் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் கிடையாது. ஆனால் அதிகாரங்கள் பிரிக்கப்படவேண்டும்.

அப்படியான ஒரு நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கின்றபோது எங்களோடு சேர்ந்து வரவேண்டுமென்ற அன்பான அழைப்பையும் அவருக்கு விடுக்கிறோம்” – என்றார்.

No comments