மகிந்தவைப் போல சம்பந்தனுக்கும் பதவி வெறி

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனின் கதையை நம்பி நாடாளுமன்றத்தின் சம்பிரதாயத்தையும், சபாநாயகரையும் அவமதித்துப் பேசும் சம்பந்தன், நாளைக்கு நீதி கோரி உயர்நீதிமன்றம் செல்லவும் கூடும். ரணில் விக்கிரமசிங்க மாதிரி பதவி ஆசை பிடித்த பட்டியலில் சம்பந்தனும் இணைந்துள்ளார். ரணிலின் பாணியில் சம்பந்தனும் எனது பதவிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தால் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றேன்.”

– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

‘எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்து பறிக்கப்பட்டு அரசின் ஓர் அங்கமான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் மகிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டமை அநீதியான செயற்பாடு. எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருப்பதற்கு மகிந்த தகுதியற்றவர். இந்த விடயத்தில் சபாநாயகர் தவறிழைத்துள்ளார்’ என்று நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் அறிக்கையொன்றைச் சமர்ப்பித்து உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் குற்றம்சாட்டியிருந்தார்.

சம்பந்தனின் உரை தொடர்பிலேயே மகிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எதிர்க்கட்சித் தலைவர் பதவியை நான் கேட்டு வாங்கவில்லை. சம்பந்தன் மாதிரி பதவி ஆசை எனக்கில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பரிந்துரையின் பிரகாரம் நாடாளுமன்றத்தின் சம்பிரதாயங்களுக்கு அமைய எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சபாநாயகர் எனக்கு வழங்கினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவரான மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும், அமைச்சரவையின் தலைவராகவும் இருக்கின்ற போதிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஏனைய உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில்தான் அமர்ந்திருக்கின்றார்கள்.

கடந்த வருடம் இறுதியில் கூட்டு அரசிலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி விலகிவிட்டது. நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு அமைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தற்போது பிரதான எதிர்க்கட்சியாகும். இதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை.

முன்னாள் ஜனாதிபதிகளான டி.பி.விஜேதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க ஆகியோரின் ஆட்சிக் காலங்களிலும் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்துள்ளனர் என்று சம்பந்தனின் உரைக்கு சபாநாயகர் நல்ல விளக்கம் கொடுத்துள்ளார்” – என்றார்.

No comments