உலகம் சுற்றும் மைத்திரி - கடுப்பில் ஐ.தே.க

சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்து தாய்லாந்துக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


பிலிப்பைன்சுக்கு ஐந்து நாட்கள் பயணத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதையடுத்து, தற்போது சிங்கப்பூருக்குச் சென்றுள்ளார்.

அங்கிருந்து திரும்பிய பின்னர், அவர் தாய்லாந்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி இந்த மாதத்தில் மேற்கொள்ளவிருக்கும் மூன்றாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

அதேவேளை, சிங்கப்பூர் பயணத்தின் போது,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரபூர்வ குழுவில், அரசாங்கத் தரப்பைச் சேர்ந்த அமைச்சர்கள் எவரையும் உள்ளடக்கவில்லை.

சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாசிறி ஜெயசேகர, எஸ்.பி.திசநாயக்க ஆகியோரை அழைத்துச் சென்றுள்ளார். இவர்கள் ஜனாதிபதியுடன் அதிகாரபூர்வ பேச்சுக்களில் கலந்து கொண்டுள்ளனர்.

ஏற்கனவே பிலிப்பைன்ஸ் பயணத்தின் போது,  சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பேரை அழைத்துச் சென்றிருந்தார்.

இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் சிங்கப்பூருக்கும் தமது கட்சி உறுப்பினர்களை அழைத்துச் சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments