பிரியங்க பெர்னான்டோ வுக்கு பிடியாணை:தெரியாதென்கிறது இலங்கை



பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளமை தொடர்பாக, சிறிலங்கா அதிகாரிகளுக்குத் தகவல்கள் ஏதும் தெரியாது என சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித்  அத்தபத்து தெரிவித்துள்ளார்.
பொதுக்கட்டளைச் சட்டத்தின் 5 மற்றும் 4 ஏ பிரிவுகளின்படி, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ குற்றமிழைத்துள்ளார் என்றும், அவரது செயற்பாடுகள், அச்சுறுத்தல் விடுக்கும் வகையில், துன்புறுத்தும் வகையில் அமைந்திருப்பதாகவும் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் கூறியிருந்தது.
இதற்கமைய, அவரைக் கைது செய்யுமாறும் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரிகேடியர் சுமித் அத்தபத்து,
“பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  உரிய நடைமுறைகளுக்கு அமைய, முறைப்படி எமக்கு அறிவிக்க வேண்டும்.
பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் ஊடகச் செய்திகள் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை.
எமக்கு அதிகாரபூர்வ அறிவித்தல் அளிக்கப்பட்டால், சட்டப்படி நாங்கள் செயற்படுவோம்.” என்றும் அவர் தெரிவித்தார்.

No comments