வீரத்தின் விழுது கேணல் சாள்ஸ், வீரவணக்க நாள் இன்று.


05.01.2008 அன்று தமிழீழத்தையே துயரத்தில் ஆழ்த்தி எல்லோரது  இதயங்களையும் சில கணங்கள் கலங்க வைத்த……………. அந்தச்  செய்தி……………..
“கேணல் சாள்ஸ் அவர்கள்..வீரச்சாவாம்”        .  எப்படி……?  என்ன நடந்தத……? இனம் புரியாத ஏக்கம் இதயத்தை வாட்ட துயரம்தொண்டையை அடைக்க நம்பமுடியாத அந்த செய்தியுடன்………………..

2005ம் ஆண்டு சித்திரை மாதம் படையப்புலனாய்வுப்பிரிவைப் பொறுப்பேற்ற சாள்ஸ் அவர்கள் அப்பிரிவைத் தாக்குதல் ரீதியாகவும், புலனாய்வு ரீதியாகவும், நிர்வாகரீதியாகவும் மிகவும் நேர்த்தியாக  கட்டிவளர்த்தார்.  தனது நீண்டகால புலனாய்வு அனுபவங்களை ஒவ்வொரு போராளிகளுக்கும் தெளிவாகப் புரியவைத்து சிறந்த போராளிகளாக வளர்த்தெடுத்தார். ஒரு புலனாய்வுப் பிரிவுக்குள்  என்னென்ன கட்டமைப்பு இருக்குமோ அத்தனை கட்டமைப்புக்களையும் உருவாக்கி அனைத்துப்  பணிகளையும்  தானே நேரில் வழிநடத்தி நெறிப்படுத்தினார்.  தன்னுடைய  அனைத்து அனுபவங்களையும்  சம்பவங்கள் ஆக்கி அனைவருக்கும் எளிதாகப் புரியவைத்து கடமைகளை இலகுவாக்கினார்.
 மிகக் குறுகிய காலப்பகுதியில் எம்  தலைவரின் நெறிப்படுத்தலின் கீழ் சரியான வழியில் படையப்புலனாய்வுபிரிவை கட்டிஅமைத்த சாள்ஸ் அவர்கள் 01.01.2008 அன்று தன் வழிநடத்தலின்  கீழ் பணிபுரியும் அனைத்துப் போராளிகளையும் ஒன்று கூட்டி ” இந்த ஆண்டை எமது பிரிவின் நடவடிக்கை ஆண்டாக நான் பிரகடணப்படுத்துகிறேன். இந்த இடைப்பட்ட  காலப்பகுதியில் உங்களுக்கு எல்லா வழிகளிலும் சரியான முறையில் பயிற்சி அளித்துள்ளேன்.  இந்த வருடத்தில்  இருந்து  நாம்  நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் எம் தலைவர் எம்மிடம்  நிறைய எதிர்பார்க்கின்றார்.அண்ணை எங்களிடத்தில்  எதிர்பார்ப்பதை நாங்கள் அனைவரும்  ஒன்றிணைந்து செய்ய வேண்டும்.” ……….எனக் கூறி அனைவரும் செய்ய வேண்டிய பணிகளை  தெளிவு படுத்தினார்.  அனைத்து அணித்தலைவர்களுக்கும் வேலைத் திட்டங்களை பகிர்ந்தளித்தார்.
திட்டமிட்ட செயற்பாட்டடைத் தீவிரப்படுத்த சாள்ஸ் அவர்கள் 04.1.2008 அன்று மன்னாருக்குச் சென்றார்.  அங்கிருந்து கொண்டு  செய்ய வேண்டிய சில இரகசியப் பணிகளை நெறிப்படுத்தி விட்டு,  மன்னார் முன்னணிக்காவலரணில் லெப். கேணல் மங்களேஸ் உடன்  நின்ற படையப்புலனாய்வு போராளிகள்  அனைவருடனும்  உரையாடிவிட்டு, அன்று இரவு அவர்களிடத்திலையே  தங்கி,அவர்கள் செய்ய வேண்டிய  பணிகளை நேரில் பார்த்து ஒழுங்கமைத்து விட்டு  05.1.2008 அன்று அதிகாலைவேளை வேறு ஒரு  பணிக்காக மூன்று போராளிகளுடன் முகாம் நோக்கி புறப்பட்டுக் கொண்டிருந்த வேளை மன்னார்  மாவட்டம் பள்ளமடுப்பகுதியில் சிறீலங்காப்படைகளின் ஆழஊடுருவும் படைப்பிரிவு நடாத்திய  கிளைமோர்த் தாக்குதலில் கேணல். சாள்ஸ் உட்பட  லெப்.வீரமாறன், லெப்.காவலன்  லெப்.சுகந்தன் ஆகியோர்  வீரச்சாவடைந்தனர்.
புலனாய்வுத்துறையின்  முதுகெலும்பாக திகழ்ந்து  பல வெற்றிகளின் வேராகவும் செயற்பட்ட சாள்ஸ்  அவர்களைப் பற்றி தெரியாதவர்கள் பலர் இருந்தாலும், அந்த சாதனை வீரனைப்பற்றி அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது.
சிங்கள இனவெறியர்களை கிலிகொள்ளச் செய்து, உலகத்தையே வியக்க வைத்து, உச்சகட்ட சாதனைகள் புரிந்து  எம் தலைவன் மனதில் தனி இடத்தை பிடித்த ஓர் அற்புத தளபதி தான் சாள்ஸ். சாள்ஸ் அவர்களின் சாதனைகளையும், வீரத்தையும், தியாகத்தையும் அறிந்தவர்களால்  நிச்சயமாக அவரை ஒரு  சாதாரண வீரனாகப் பார்க்க முடியாது.  அவரின் செயல்கள் ஒவ்வொன்றும் வியப்பையே அளிக்கும். கடமை நேரத்தில் மிக மிக கண்டிப்புடன் காணப்படும் சாள்ஸ் அவர்கள் மற்றைய நேரங்களில் புதிதாக இணைந்த போராளிகளுடன் கூட. தோளுடன் கைபோட்டு சக தோழன் போல் பழகுவார். ஒவ்வொருவர் உணர்வுகளையும் புரிந்து கொண்டு அவர்களை ஊக்கிவித்து உற்சாகமாக வைத்திருப்பார். பயிற்சி நேரத்தில் போராளிகளோடு தானும் ஒருவனாக பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டு பயிற்சி அளிப்பதில் அவருக்கு நிகர் அவரே
ஒரு தடவை அணித்தலைவர்களுடன் கடமை தொடர்பாக சாள்ஸ் அவர்கள் கதைத்துக் கொண்டிருந்த போது, ஒரு பெண் போராளி அவர்கருத்தை எதிர்த்து வாதிட்டுக் கொண்டிருந்தாள்.  அப்போது,  தான் சாள்ஸ் அண்ணாவுடன் வாதிட்டுக் கொண்டிருக்கின்ற எண்ணம் மனதில்  தோன்றவே மனம் திறந்து மன்னிப்புக் கோரினாள். அவளை இடைமறித்த சாள்ஸ் அவர்கள் ” மனசுக்கு சரி என்று பட்டதை முகத்துக்கு நேரில  சொல்வது தப்பில்லை. உங்கள் துணிச்சலை  பாராட்டுறன். பிரச்சினைகளை உங்களுக்குள்ளே கதைக்காமல் எங்களுடன் நேராக கதைக்கும் போராளிகளைத் தான் எனக்கு மிகவும் பிடிக்கும்”  என்றார்.  இந்த  சம்பவமே அவருடைய  பெருந்தன்மையை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது.

சிறு வயதில் போராட்டத்தில் இணைந்த சாள்ஸ் அவர்கள் புலனாய்வுப்பிரிவிலேயே நீண்ட காலங்கள் பணிபுரிந்தார்
பிரதான புலனாய்வு, கரும்புலித்தாக்குதல்களை வழிநடத்திய பெரும் சாதனையாளனாகவே வாழ்ந்தார்.  வெளியில் சொல்ல முடியாத, இதுவரை சொல்லப்படாத பல தாக்தல்களை முன்நின்று வழிநடத்தினார்.சிறிலங்கா அரசையே திணற வைத்த,உலகத்தையே உற்று நோக்க வைத்த “கட்டு நாயக்கா” வெற்றி தாக்குதலையும் சாள்ஸ் அவர்களே வழிநடத்தி இநெறிப்படுத்தினார். இன்னும் எத்தனைஇஎத்தனையோ சாதனைகளை புரிந்து நீண்டகால தாக்குதல் புலனாய்வாளனாக செயற்பட்ட இவரது செயப்பாடுகள் ஒவ்வொன்றும் மிகவும் இரகசியமானதாகவே இருந்தது. ( ஒரு புலனாய்வாளனுக்கு இருக்க வேண்டிய முக்கிய தகுதி அவன்  யார்  என்று இறுதி வரை யாருக்குமே தெரியக் கூடாது) அந்தத் தகுதியை தனதாக்கிய பெருந் தளபதி சாள்ஸ் மட்டுமே. ஏனெனில் சாள்ஸ் அவர்கள்  வீரச்சாவைத் தழுவிய இரண்டு மணிநேரத்துக்குள் சிங்கள ஊடகங்களில் செய்தி  வருகிறது. சாள்ஸ் அவர்கள் செய்த தாக்குதல் நடவடிக்கைகள் அனைத்தையும் வரிசைப்படுத்தி வேறு  ஒருவரின் புகைப்படத்தைப் போட்டு. இச்சம்பவம் ஒன்றே சாள்ஸ் சிறந்த தாக்குதல் புலனாய்வாளன்  என்று எடுத்துக் காட்டுகின்றது.
அது மட்டுமன்றி எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் எந்தக்கடமை என்றாலும் செய்யக் கூடிய  மனவலிமை அவரிடம் இருந்தது. ஒரு கரும்புலிதாக்குதலுக்கு திட்டமிட்டு தயார்ப்படுத்தி அனுப்பிய  ஒரு போராளி இலக்கை அண்மித்த இறுதிநேரத்தில் அப்பணியைச் செய்யத் தயங்கிய போது சாள்ஸ்  அவர்கள் தானே அந்தத் தாக்குதலை செய்ய வெடிமருந்து நிரப்பப் பட்ட வாகனத்தில் ஏறி  வாகனத்தை இயக்கிக் கொண்டிருந்த வேளை அவருடன் கூட நின்ற இன்னொரு போராளி ” நீங்கள்  இந்த இலக்குக்கு போக கூடாது,  ‘’நீங்கள் நிறைய தாக்குதலை வழிநடத்த வேண்டும்” என்று கூறி  வாகனத்தில்  இருந்த சாள்ஸ் அவர்களைத் கீழே தள்ளிவிட்டு தானே அந்த இலக்கை தகர்த்தான்.
தென் இலங்கையில் மக்களோடு மக்களாக சாள்ஸ் அவர்கள் வாழ்ந்த காலங்களே அதிகம். புலனாய்வு,  கரும்புலி வீரர்களை உருவாக்கி எம் நாட்டுக்கு வந்த பல இன்னல்களைப் போக்கிய தலைசிறந்த வீரன் சாள்ஸ். கரும்புலி வீரர்களை உயிருக்குயிராக நேசித்த சாள்ஸ் அவர்கள்  வீரச்சாவடைந்த கரும்புலி  வீரர்களின் பெயர்களையே தன் மூன்று குழந்தைகளுக்கு சூட்டி அவர்களின் நினைவுகளுடனே தன்  குழந்தைகளையும் வளர்த்தார்.
தமிழ் மண்ணையும், மக்களையும், தலைவரையும், போராளிகளையும் நேசித்தது போலவே தனது குடும்ப உறவுகள் மீதும் அதிக..பாசம் கொண்டவர். தனது அன்னை மீது அளவு கடந்த பிரியம் கொண்டவர். தன்னைப் போலவே தனது குடும்பமும் போராட்டத்திற்கு பங்களிக்க வேண்டும் என விரும்பினார்.  வெளிநாட்டில் வசித்து வந்த தனது சகோதரனை தமிழீழம் வரவழைத்து விடுதலைப் போராட்டத்தில் இணைத்தார். மேலும் வெளிநாட்டில் வசித்து வந்த தனது சகோதரியைக் கொண்டு  அங்கிருந்து செய்யக் கூடிய பணிகளை செய்வித்தார்.
அது போலவே தேசப்பற்றுக்கொண்ட நற்ப்பண்புள்ள போராளியையே மனைவியாகத் தேர்ந்தெடுத்தார்.  தன்னுடைய மனைவி போராட்டத்திற்காக முழு நேரமும் பணி செய்ய வேண்டும் என விரும்பினார்.  அவரின் எண்ணம் போலவே அவருடைய மனைவியும் கடமைப் பற்றுள்ள போராளியாகவே திகழ்ந்தார் .  தன்னை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் ஒடுக்கு முறைக்கெதிராக  ஓயாது உழைக்க வேண்டும் என விரும்பினார் .
ஓயாது உழைத்த அந்த வீரனை சிங்களம் தன் துரோகத் தனத்துக்கு பலியாக்கியது. நாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்த சாதனை வீரனின் இழப்பை தாங்க முடியாமல்  தமிழினமே துடித்தது. சாதிக்கத்துடித்த அந்த வீரனை  இழந்து 6 ஆண்டுகள் கடந்துவிட்டது.
அனால் அழியவில்லை அந்த வீரனின் நினைவுகள்……….ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் வாழ்வான் அவன் வரலாறாய்……………
கேணல் சாள்ஸ் அவர்களுடன் வீரச் சாவை தழுவிக் கொண்ட லெப் வீரமாறன், லெப் காவலன் அவர்களையும், இன் நாளில்இநினைவு கூர்வதுடன், இவர்கள் தாகம் தீரும் வரை ஓயாது எம் பயணம்………………………..
ஆக்கம்:- சி.கலைவிழி

No comments