பௌத்தத்துக்கு முன்னுரிமை - கூட்டமைப்பு இணங்கிவிட்டது என்கிறார் பொன்சேகா

பௌத்த மதத்துக்கு தற்போது அரசமைப்பில் வழங்கப்பட்டுள்ள அங்கீகாரம் – முன்னுரிமையை அப்படியே நீடிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்கம் வெளியிட்டுள்ளது என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா எம்.பி. தெரிவித்தார்.

காலிமுகத்திடலில் தற்போது (17) நடைபெற்றுவரும் நீதிக்கான போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

” ஐக்கிய தேசியக்கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் இரகசிய உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டுள்ளது என சிலர் போலிபிரசாரம் முன்னெடுத்துவருகின்றனர். அவ்வாறு எவ்வித உடன்படிக்கையும் செய்துகொள்ளப்படவில்லை. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவே கூட்டமைப்பு எம்முடன் கரம்கோர்த்தது. இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே நாம் அரசியல் நடத்திவருகின்றோம்.

தமிழ்க் கூட்டமைப்பு பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கவில்லை. பௌத்த மதத்துக்கு தற்போது வழங்கப்படும் முன்னுரிமையை அப்படியே நீடிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, ஜனாதிபதியை நான் விமர்சிக்க விரும்பவில்லை. இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட ஒரு விடயத்துக்கு பதிலளிக்கவேண்டும். நாடாளுமன்ற சம்பிரதாயத்தை மதித்தே ஆட்சியை ஒப்படைத்ததாக கூறினார். உண்மை அதுவல்ல, மக்கள் எழுச்சி – பலத்துக்கு அஞ்சியே ஆட்சி ஒப்படைக்கப்பட்டது.” என்றும் சரத்பொன்சேகா கூறினார்.

No comments