ரவிக்கு முக்கிய பொறுப்பு - குழப்பத்தில் ஐ.தே.கவினர் !

ஐக்கிய தேசிய கட்சியின் கபடத்தனம் அம்பலமானதால் கட்சிக்குள் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கு, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்தத் கடிதத்தில், கட்சியின் பிரதித் தலைவராக ரவி கருணாநாயக்கவை நியமிப்பதுடன், நிதியமைச்சர் பதவியும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

இலங்கையில் தற்போது அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதுடன், அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியாமல் பலரும் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வலுக்கட்டாயமாக ஏற்படுத்தப்பட்ட மஹிந்த அரசாங்கத்தில் இணைந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டியுள்ளனர்.

மஹிந்த அரசாங்கத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரவி கருணாநாயக்கவும் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

கட்சி தாவலை தடுப்பதற்காக ரவி கருணாநாயக்கவுக்கு பெருமளவு வரப்பிரசாதங்களை ரணில் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த ரணில் அரசாங்கத்தில் நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சராக கருணாநாயக்க செயற்பட்டிருந்தார்.

எனினும் நிதியமைச்சராக செயற்பட்ட காலத்தில் பாரிய மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, ஜனாதிபதியினால் அவரது பதவி பறிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சமகால அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமிக்க வேண்டும் என பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

அடுத்த பிரதமராக சஜித் தான் வருவார் என ஊகங்கள் வெளியாகி உள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்கவின் ரகசிய கடிதம் கட்சிகுள் பெரும் நெருக்கடி நிலைகளை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments