மூதூரில் மக்கள் போராட்டம்!


இலங்கை இராணுவத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ள தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறும் தமக்காக காணி உரிமைப் பத்திரங்களை வழங்குமாறும் வலியுறுத்தி கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மூதூர் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று இடம்பெற்றுள்ளது. மூதூரிலுள்ள சம்பூர் - கங்குவேலி படுகாடு காணிகளுக்கான ஆவணங்களை வழங்குமாறு வலியுறுத்தி மூதூர் பிரதேச செயலகத்தின் முன்னால் ஜனநாயக மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் பொது மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.  

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது திருகோணமலையில் இலங்கை இராணுவத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள தமிழர்களது காணிகள் அனைத்தையும் உடனடியாக பொதுமக்களிடம் கையளிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மக்களுடைய காணிகளுக்கான ஆவணங்களை வழங்காது இழுத்தடிப்பு செய்யப்படுவதை உடனடியாக நிறுத்தி துரிதமாக காணி ஆவணங்களை வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

வன பரிபாலன திணைக்களம் தமது காணிகளுக்குள் எல்லைக் கல் நாட்டி தமது காணிகளில் விவசாயம் செய்வதற்கு தடையேற்படுத்தி வருவதாகவும் இந்த செயற்பாட்டை உடனடியாக நிறுத்துமாறும் இதன்போது மக்கள் சுட்டிக்காட்டினர்.

காணி உறுதி வழங்குவதற்கான காணிக்கச்சேரி கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்பட்ட போதும் உறுதிகளை வழங்குவதில் திட்டமிட்டு இழுத்தடிப்பு செய்யப்படுவதாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

90 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தற்போதைய அரசாங்கம் தெரிவிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாதென தெரிவித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து காணி விடுப்புக்கோரி பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபடுகின்றமையானது காணிகள் விடுவிக்கப்படவில்லை என்பதனையே காட்டுகின்றது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

தமிழ் மக்களது பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுத்தரப்படும் என தேர்தல் காலத்தில் சூளுரைத்து தமிழ் மக்களது வாக்குகளால் ஆட்சியமைத்த மைத்திரி – ரணில் தலைமையிலான அரசாங்கம் தற்போது அவர்களிடையே ஏற்பட்டுள்ள அதிகார மோகத்தினால் பிளவுண்டு காணப்படுகின்றதெனவும் போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments