ரணிலுக்கு ஆதரவுகோரி இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று முற்பகல் கூடவுள்ளது. இன்றைய அமர்வில், ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கையை வெளிப்படுத்தும் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பார்.

இந்தப் பிரேரணையில், ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, அகில விராஜ் காரியவசம், லக்ஸ்மன் கிரியெல்ல, ராஜித சேனாரத்ன, பழனி திகாம்பரம், மங்கள சமரவீர, றிசாத் பதியுதீன், ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்தப் பிரேரணைக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று ஜேவிபி அறிவித்துள்ளது.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளிக்குமா இல்லையா என்பது குறித்து இன்னமும் முடிவு எதையும் எடுக்கவில்லை.

இன்றைய நாடாளுமன்ற அமர்வை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதனிடையே, இன்றும் ஊடகவியலாளர்கள் தவிர, பார்வையாளர் மாடத்தில் வேறெவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று நாடாளுமன்ற படைக்கல சேவிதர் அறிவித்துள்ளார்.

No comments