மகிந்தவும் 49 முன்னாள் அமைச்சர்களும் நீதிமன்றில் முன்னிலை

மஹிந்த ராஜபக்ஷவின் அரசுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவு இன்றுடன் முடிவடையும் நிலையில், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட 49 முன்னாள் அமைச்சர்களும் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமராக நியமித்து புதிய அரசொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைத்தார். அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. அது அரசமைப்புக்கு முரணானது என்றும் தெரிவித்தது.

நாடாளுமன்றத்தில் மஹிந்த அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் அந்த அரசு தொடர்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 122 பேர் இணைந்து கடந்த மாதம் 23ஆம் திகதி கடந்த மாதம் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தனர். விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் மஹிந்த அரசுக்கு இன்றுவரை இடைக்காலத் தடை விதித்தது.

இன்று மனு மீதான விசாரணைகள் நடைபெறவுள்ளன. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய மஹிந்த ராஜபக்ஷ உட்பட 49 முன்னாள் அமைச்சர்களும் இன்று மன்றில் முன்னிலையாகவுள்ளனர்.

No comments