எவராலும் அசைக்க முடியாத பெரும் கூட்டணியை உருவாக்குவேன்- மகிந்த

பொதுத்தேர்தல் இன்றி பிரதமர் பதவியை வகிப்பது தமது எதிர்பார்ப்பு இல்லை என்பதால், தீர்மானங்களை மேற்கொள்ளும் போது ஜனாதிபதிக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாமலிருக்க பதவியிலிருந்து விலகி புதிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதிக்கு இடமளிப்பதாக மஹிந்த ராஜபக்ஸ நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் தெரிவித்தார்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினருடன் ஒன்றிணைந்து தேர்தலில் 54 வீதமான பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதற்கான அரசியல் சூழல் உருவாகியுள்ளதாக மஹிந்த ராஜபக்ஸ கூறினார்.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் வாக்கு வங்கியுள்ள கட்சிகளுடன் இணைந்து நாட்டிற்கு எதிரான சக்திகளை தடுப்பதற்காக, எவராலும் அசைக்க முடியாத நாடளாவிய அரசியல் கூட்டணியை கட்டியெழுப்பவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஒரு வருடமும் மூன்று மாதங்களும் தாமதமாகியுள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே தமது முதன்மை இலக்கு எனவும் மஹிந்த ராஜபக்ஸ கூறினார்.

ஜனவரி மாதம் 5 ஆம் திகதி நடத்தப்படவிருந்த பொதுத்தேர்தல் நிறைவுபெறும் வரை, தற்காலிக நிர்வாகத்தின் கீழ் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதாக மஹிந்த ராஜபக்ஸ தனது விசேட உரையில் கூறினார்.

இதேவேளை, ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு தாம் மதிப்பளிப்பதாகவும் மஹிந்த ராஜக்ஸ குறிப்பிட்டார்.

No comments