காணாமல் ஆக்கப்பட்டோரே புதைக்கப்பட்டுள்ளனர்?


மன்னார் நகரத்தில் மத்தியிலுள்ள சதொச கட்டட வளாகத்தில் மீட்கப்பட்டு வரும் நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகள் மூலம், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன கதி நேர்ந்திருக்கும் என்பதை எம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
இவ்வாறு மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.
வருடந்தோறும் தேசிய ரீதியில் நடைபெறும் இயேசு பிராரின் பிறப்பும், நத்தார் கொண்டாட்டமும் மன்னாரில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது,
கடந்த மூன்று வாரங்களாக மிகவும் கொந்தளிப்பாக இருந்த இலங்கை அரசியல் நிலமை தற்பொழுது படிப்படியாக வழமைக்குத் திரும்புவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
இந்த நாட்டில் அரசியல் உறுதித் தன்மை நிலை பெறுவதையும், ஐனநாயக விழுமியங்கள் மதிக்கப்படுவதையும் உறுதி செய்யுமாறு ஐனாதிபதியை நாம் வினயமாக வேண்டி நிற்கின்றோம்.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டும் இன்னும் அவர்கள் விடுதலை ஆகாமலே சிறைகளில் வாடிக்கொண்டு இருக்கின்றனர். அவர்களின் விடுதலை நாளை நோக்கி அவர்களின் உறவினர்கள் ஏக்கத்தோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினைகள் இன்னும் முடிவிற்று தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தம் அன்புக்குரியவர்களை இழந்து நிற்கும் உறவுகளின் போராட்டம் தொடர் கதையாகவே உள்ளது.
அரச படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுப்பிப்பதன் தொடர்பான
வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமலே உள்ளன.
மன்னார் மாவட்டத்தில் கத்தோலிக்க மக்கள் செறிந்து வாழும் முள்ளிக்குளம் கிராமம் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. அக் கிராம மக்கள் நூற்றாண்டு காலமாக வாழ்ந்து வந்த தங்கள் பாரம்பரிய தாயகப் பிரதேசத்தை
விட்டு தற்காலிக இடங்களில் மிகுந்த ஏக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
எனவே ஐனாதிபதி, அரசியல் கைதிகளின் பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டோரின் விவகாரம், காணி விடுவிப்பு போன்ற தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மக்களின் சார்பாக அன்போடு வேண்டுகோள் விடுக்கின்றேன்.
அத்துடன் மடுத்திருப்பதியை புனித பூமியாக பிரகடனம் செய்யும் முயற்சிக்கும், மடுத்திருப்பதியில் இந்திய வீட்டுத்திட்டத்தை கொண்டுவரும் முயற்சிக்கும் நாங்கள் நன்றி கூறுகின்றோம்.- என்றார்.

No comments