அமைச்சுப் பதவிக்காய் ஐதேகவின் கதவைத் தட்டும் அங்கஜன்


ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விருப்பம் வெளியிட்டுள்ளனர் என்றும், இதுதொடர்பாக உயர்மட்டப் பேச்சுக்கள் நடத்தப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்க இன்று பிரதமராகப் பதவியேற்கவுள்ள நிலையில், புதிய அமைச்சரவை நாளை அல்லது நாளை மறுநாளுக்குள் பதவியேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

எனினும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொள்வது குறித்தே இதுவரையில் ஐதேக தரப்பில் பச்சைக்கொடி காண்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

துமிந்த திசநாயக்க, அங்கஜன் இராமநாதன், பைசர் முஸ்தபா, விஜித் விஜிதமுனி சொய்சா, மகிந்த சமரசிங்க, லசந்த அழகியவன்ன, லக்ஸ்மன் செனிவிரத்ன, வீரகுமார திசநாயக்க, ஆகிய ஒன்பது பேரையும் அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்த மைத்திரிபால சிறிசேன, ஐதேகவுடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை முறைப்படி உடன்பாடு செய்து கொள்ள அனுமதிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை குழுவாக இணைத்துக் கொள்ளாமல் தனிநபர்களாகவே அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

No comments