நாயுடன் படுத்தால் உண்ணிதான் மிஞ்சும் சிங்கள தேசம் கற்றுத் தரும் அரசியல் - பனங்காட்டான்

வாரக் கணக்காகியும் ரணிலை அலரி மாளிகையிலிருந்து வெளியேற்ற முடியவில்லை. சில அமைச்சர்கள் ஒவ்வொரு வாரமும் அங்குமிங்குமாக மந்திப் பாய்ச்சல் நடத்திக் கொண்டிருக்கின்றனர். மகிந்த மீது மூன்று தடவைகள் நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றியும் அவரைப் பதவியிலிருந்து இறக்க முடியவில்லை. எல்லாவற்றுக்குமான ஆயுதமாக இப்போது மிளகாய்த்தூள் உருவமெடுத்துள்ளது.

சிங்கள தேச அரசியலின் செல்நெறி எத்திசை நோக்கியது?

முன்னொருவேளை தேசியத் தலைவர் தனது மாவீரர் நாள் உரையொன்றில் குறிப்பிட்டது போன்று, இருட்டுக்குள் கறுப்புப் பூனையைத் தேடும் கதை போன்றதே இன்றைய சிங்கள தேசத்தின் அரசியல் செல்நெறி.

யார் நண்பன், யார் எதிரி, யார் துரோகி என்று அடையாளம் காணமுடியாத நிலையில் கட்சிகள் விழுந்தும் எழும்பியும், வளைந்தும் நெளிந்தும் செல்வதால் இலக்கு என்ற ஒன்றை அவை தவறவிட்டுள்ளன.

அன்றாட வாழ்வுக்கு தினமும் ஏதாவதொரு தொழில் புரிந்து வயிற்றுப் பசியைப் போக்குபவர்களை, ‘அன்றாடம் காய்ச்சிகள்’ என்று சொல்வது வழக்கம். அதே நிலையிற்தான் சிங்கள தேச அரசியல் நகர்வு காணப்படுகின்றது.


கடந்த மாதம் 26ஆம் திகதிக்குப் பின்னரான 26 நாட்களாக இலங்கையின் அரசியலும் அன்றாடம் காய்ச்சிகள் போல் வாழ்ந்துகொண்டிருக்கின்றது.

இந்த நிலைமையை மாற்றியமைக்கக் கூடிய மீட்பர் ஒருவரை சிங்கள தேசம் கண்டுபிடிக்குமா என்பது கேள்விக்குரியது.

தேர்தலில் வெற்றி பெற்ற கூட்டுக்குழுவில் ஒருவரான மைத்திரிபால ஜனாதிபதியானார். மற்றொருவரான ரணில் பிரதமராக நியமனமானார்.

இதுதான் ஜனநாயகம் என்று அன்று சொன்னவர்கள், இன்று அதனை மறந்து பணநாயகத்துக்கு மாறிவிட்டனர்.

ரணிலைப் பிரதமர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கிய மைத்திரி, அன்றொரு நாள் தமக்கு அப்பம் கொடுத்த மகிந்தவை நன்றியோடு பிரதமராக்கினார்.

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா?

குரக்கன் சால்வைக் குடும்பம் தங்களின் அலிபாபாக்களையும் சேர்த்துக்கொண்டு ஆட்சிக்கட்டில் ஏறியது.

பதவி பறிக்கப்பட்ட ரணில் பிளவர் வீதியிலுள்ள தமது சொந்த இல்லத்துக்குச் செல்லாது, பிரதமரின் அதிகாரபூர்வ வாழ்விடமான அலரி மாளிகைக்குள் சென்று குடியேறினார். இதனை எழுதும்வரை அவர் அதற்குள்தான் வசிக்கிறார்.

அலரி மாளிகை ஐக்கிய தேசியக் கட்சித் தொண்டர்களாலும் குண்டர்களாலும் நிரம்பி வழிகின்றது. இது போதாதென்று, சுழற்சி முறையில் பிக்குகளும் உள்ளே தவமிருக்கின்றனர்.

இவைகளை உடைத்துக்கொண்டு இராணுவம் உள்ளே சென்றால் மட்டுமே ரணிலை அப்புறப்படுத்த முடியும். இதனாற்தான் போலும் நாட்டில் விரைவில் இரத்தக்களரி ஏற்படுமென ரணில் முன்னெச்சரிக்கை விடுத்து வருகிறார்.

ஒரு ஜனாதிபதி, இரண்டு பிரதமர்கள், இரண்டு எதிர்க்கட்சிகள், இரண்டு அரசாங்க அணி என்று வேடிக்கையான நம்ப முடியாத எட்டாவது அதிசயம் இலங்கையில் இப்போது.

சர்வதேசமும் அதன் இராசதந்திரிகளும் அவ்வப்போது ஆறுதல் தரும் அறிக்கைகளை விடுத்து வந்தாலும், இறைமையுள்ள ஒரு நாட்டுக்குள் எவரும் அத்துமீறிப் புக முடியாதென்ற அறிவித்தல் அரச தரப்பிலிருந்து வந்துகொண்டிருக்கின்றது.

ரணிலின் பிரதமர் பதவிக்கு முண்டு கொடுத்துக்கொண்டிருக்கும் சம்பந்தனின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, கொழும்பிலுள்ள இராசதந்திரிகளிடம் தஞ்சம் புகுந்துள்ளது.

“யாமிருக்கப் பயமேன்” என்று அபயக் கரம் காட்டும் சர்வதேசத்தை ஈழத் தமிழர்கள் நன்கறிவர்.

நேர்வேயின் எரிக் சொல்ஹெய்ம் வழங்காத பாதுகாப்பையா இப்போதைய இராசதந்திரிகள் தமிழருக்கு வழங்கப் போகிறார்கள்.?

மகிந்தவைப் பிரதமராக்கியிருப்பதைத் தொடர விடாது தடுப்பது வேறு, ரணிலை மீண்டும் பிரதமராகக் கொண்டுவருவது வேறு என்று வித்தியாசம் தெரியாது அதற்குள் கால் புதைத்த கூட்டமைப்பு, இப்போது சுருக்கு வடத்துள் சிக்கியுள்ளது.

எப்படியாவது இப்போதைய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சஜித் பிரேமதாஸவை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக்கிவிட வேண்டுமென்று மைத்திரி துடித்துக்கொண்டிருக்கின்றார்.

அப்படிச் செய்துவிட்டால் ஐக்கிய தேசியக் கட்சியை இரண்டாகப் பிளவுபடுத்தி விடலாம் என்ற பிரித்தாளும் தந்திரம் இது. இன்றைய சூழலில் இது நிறைவேறினாலும் ஆச்சரியப்பட வேண்டிவராது.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து மகிந்த அணிக்கு மந்திரிப் பதவியுடன் கடந்த மாதம் தாவிச் சென்று, பின்னர் மீண்டும் ரணில் தரப்புக்கு ஓடிச் சென்ற வசந்த சேனநாயக்கவும், ஏ.எச்.எம்.பௌசியும் இப்போது மீண்டும் மகிந்த அணிக்குச் சென்றுள்ளார்கள்.

மகிந்தவைப் பதவியிறக்க ஆதரிக்கும் ஜே.வி.பி., ரணிலைப் பிரதமராக்க ஆதரவு வழங்காதென்பது உறுதியாகி விட்டது.

இதே விடயத்தில்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பிளவுபட்டுள்ளது.
தமிழர் தேசிய அபிலாசைகள், காணாமற் போனோர் விவகாரம், தமிழர் காணிகள் மீட்பு போன்றவைகளுக்கு ரணிலிடம் உத்தரவாதம் பெற வேண்டுமென்று தமிழ் மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கை நியாயமானது.

இதனைச் சம்பந்தன் கேட்கப்போவதில்லை. கேட்டாலும் ரணில் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. இரண்டில் எதுவானாலும், அது மகிந்தவின் எதிர்கால அரசியலுக்கு சாதகமாகிவிடலாம் என்ற அச்சமே இதற்குக் காரணம்.

மூன்று தடவை மகிந்த மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேறியும் அதனை மைத்திரி ஏற்கவில்லை. இரண்டு தடவைகள் இது நிறைவேற்றப்பட்டதை நாடாளுமன்ற அதிகார அறிக்கையான ஹன்சார்ட் பதிவிட்டபோதிலும் அதனையும் மைத்திரி கவனத்தில் எடுக்கவில்லை.

இப்போது மைத்திரிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வர கையொப்பம் சேகரிக்கப்படுகிறது.

மறுபுறத்தில், சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர மகிந்த அணி முயற்சி எடுத்துள்ளது.

கரு ஜெயசூரியவின் மகளின் கணவரான நவின் திசநாயக்க என்ற நாடாளுமன்ற உறுப்பினர், காலஞ்சென்ற அமைச்சரான காமினி திசநாயக்கவின் புதல்வர். நவின் திசநாயக்கவை அடுத்த பிரதமராக்கவே சபாநாயகர் தன்னிச்சைப்படி செயற்படுகிறார் என்ற குற்றச்சாட்டை மகிந்த அணி பரப்பி வருகின்றது.

இதுவும்கூட ஐக்கிய தேசியக் கட்சியைப் பிளவுபடுத்தும் மற்றொரு சதி.
இதற்கிடையில் இலங்கையிலுள்ள கனடியத் தூதுவர் சம்பந்தப்பட்ட தகவலொன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜே.வி.பி., தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி என்பவை சர்வதேச சமூகத்தைச் சந்திப்பதைத் தவிர்த்து தேர்தலுக்கான மக்களின் எதிர்பார்ப்பை மதிப்பது நல்லது என்று நாமல் ராஜபக்ச தமது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

கனடியத் தூதுவர் இதற்குப் பதிலாக, உங்கள் பொதுஜன பெரமுன கட்சியினர் யாரைச் சந்திக்கின்றனர் என்பதை அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள் என்று தமது டுவிட்டரில் எழுதியிருந்தார்.

சுவாரசியமாகத் தோன்றும் இந்தக் கருத்தாடல், மறைபொருளாக ஏதோ ஒன்றைச் சொல்வதை அவதானிக்கலாம்.

நிதியமைச்சர் என்ற வகையில் மகிந்த ராஜபக்ச அடுத்த சில நாட்களில் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

வாக்குப் பலத்தால் இதனை முறியடிக்க ஐக்கிய தேசியக் கட்சி வகுத்துள்ள வியூகம் வெற்றி பெறுமானால், நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும். இதனை மைத்திரி செய்வாரா?

அக்டோபர் 26இல் நாடாளுமன்றத்தை டிசம்பர் 16 வரை ஜனாதிபதி இடைநிறுத்தினார்.

இதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததால் நாடாளுமன்றம் தொடர்ந்து கூடி வருகின்றது.

டிசம்பர் 7இல் உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்குப் பாதகமாக அமையலாமென அஞ்சப்படுகின்றது.

இதனால், தமது நாடாளுமன்ற ஒத்திவைப்பு வர்த்தமானியை டிசம்பர் 7ஆம் திகதியளவில் மைத்திரி ரத்து செய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.

இப்படிப் பார்க்கின், கடந்த மாதம் 26ஆம் திகதியன்றும் அதற்குப் பின்னரும் மைத்திரி எடுத்த சகல நடவடிக்கைகளும் அரசமைப்புக்கு முரணாகவும், சட்டங்களை மீறியதாகவும் அமைந்திருப்பதைக் காணலாம்.

ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர மற்ற எல்லா அதிகாரங்களும் தமக்கு உண்டு என்று 1978இல் ஜனாதிபதி ஆட்சியை அறிமுகம் செய்தபோது ஜே.ஆர்.ஜெயவர்த்தன சொன்ன காலம் இப்போதில்லை.

இப்போதைய காலம் மிளகாய்த்தூள் அரசியலாகி விட்டது. நாயுடன் படுத்தால் உண்ணிதான் மிஞ்சும் என்பதே இன்றைய சிங்கள தேச அரசியல் கற்றுக்கொடுக்கும் பாடம்.

இதில் மைத்திரி, மகிந்த, ரணில் எல்லோரும் ஒன்றே. இதனைக் கூட்டமைப்பு காலாந்தாழ்த்தாது புரிந்துகொள்வது நல்லது.

No comments