Header Shelvazug

http://shelvazug.com/

என்ர புள்ள சாகேக்க என்ன நினைச்சிருப்பான்!

மழை மெதுவாக தூறிக்கொண்டிருந்தது..
மல்லாவி நோக்கிய பேருந்து விரைந்து கொண்டிருந்தது. எனது இருக்கைக்கு அருகில் ஒரு வயதான அம்மா இருந்தார். எதையோ பறிகொடுத்தது போல ஆழ்ந்த யோசனையில் அமர்ந்திருந்தார்.
என்னுடன் பேசவில்லை, ஆனால் அடிக்கடி என்னை ஏக்கத்தோடு பார்ப்பது புரிந்தது,..
வன்னிவிளாங்குளம் வந்தபோது திடீரென வெளியே எட்டிப்பார்த்தார். முகத்தில் சோகம் இளையோடி இருந்தது. நீண்ட பெருமூச்சுடன் என்னைப்பார்த்தார். கண்களின் ஓரம் வழிந்த கண்ணீரை துடைத்தவாறு 'என்ர புள்ள' இங்கதான் இருக்கிறான்,. அதுதான் பாத்தனானப்பு... என்று கூற எனக்கும் என்னையறியாமலே கண்கள் கலங்கியது,..

தம்பி எனக்கு 4 பிள்ளையப்பு. ஒரே ஓரு பொடியனடா, இப்ப இருந்தா அவனுக்கு உன்ர வயசு இருக்கும்..
நான் எதுவும் பேசவில்லை,.
அம்மா தொடர்ந்தார்,..
அவனுக்கு இயக்கம் என்டா காணும். சும்மா வால் பிடிச்சுக்கொண்டு திரிஞ்சான்.
2005 ஆம் ஆண்டு ஒரேயடியா போட்டான். அதுக்கு பிறகு நான் அவன தேடாத பேசுகள் இல்ல அவன அவங்கள் காட்டவே இல்லை.
2007 ஆம் ஆண்டு வீட்ட வந்தான். 10 நாள் லீவில வந்தவனாம்,, நல்லாக்கதைச்சான். பெரிய ஆம்பிளையா வளர்ந்து நல்ல வாட்டமா தான் இருந்தவனப்பு..
சிறிது நேரம் மௌனமானார் அம்மா.. கண்களில் கண்ணீர் ஓடியது..
பிறகு சொன்னார்.
தம்பி அவன் அந்த பத்து நாளும் போகாத வீடில்லை பாக்காத ஆக்களில்லை எல்லாரோடையும் நல்லமாதிரி அவன். குணத்தாற்ற பெட்டைல அவனுக்கு ஒரு விருப்பம். போய் அவளையும் பாத்து கதைச்சவனாம். இயக்கத்தை விட்டு விலத்தி வந்து உன்னைத்தான் கட்டுவன் என்டு அவளிட்ட சொன்னவனாம்..
பேந்து நாங்களும் அவனுக்கு பிடிச்ச சாப்பாடு எல்லாம் செய்து குடுத்தம்.. பத்தாம் நாள் வெளிக்கிட்டான். வெளிக்கிடேக்க அம்மா உன்ர மடில ஒருக்கா படுக்க ஆசையா இருக்கும்மா என்டு கேட்டான். வாவன் ஐயா படன் எண்டு சொன்னன். என்ர மடில தலைவைச்சுப் படுத்துக்கொண்டு அம்மா ணேய் ஒரு வாய் சோறு தீத்தி விடணை உன்ர கையால சாப்பிட்டு எத்தினை நாள், ஆசையா இருக்கணை எண்டு கேட்டான். எனக்கு அழுகை வந்திட்டு,. சோறு தீத்தி விட்டனான். பிள்ளை சாப்பிடேக்க சொன்னான்... அப்பா இல்லாம கஸ்டப்பட்டு எங்களை வளத்த நீங்கள் அழக்கூடாதம்மா. நான் உயிரோட இருக்கிற வரைக்கும் உன்னை அழ விடமாட்டன்..
தங்கச்சியாக்கள வடிவா படிப்பியண. அக்காவ வெளிநாட்டுக்கு பாத்து அனுப்பணை. நான் நாட்டுக்கான பிள்ளை என்னால காசு உழைச்சு தரமுடியாதம்மா என்டு கண் கலங்கியபடி சொன்னான்..
அழாதையப்பு எண்டு அவன்ர கண்ணீரை துடைச்சுப்போட்டு சொன்னன் நீ உன்ர கடமைய செய்யப்பு எண்டு.."
எல்லாருக்கும் போட்டுவாறன் என்டு போகும்வரை கை காட்டிப்போட்டு போனவன் தான்...

அதுக்கு பிறகு வரவே இல்லை...
அம்மா அழுதார்..
கரும்புலியா போய் கடல்ல வெடிச்சவனாம்..
என்ர புள்ள சாகேக்க என்ன நினைச்சிருப்பான்...
எல்லாம் கனவாப்போச்சு தம்பி.

எனக்கு எதுவுமே பேச வரவில்லை..
அக்கா வெளிநாடு போட்டாவா என்றேன்.
இல்ல தம்பி அவளை அங்க விட்டுட்டு எப்பிடி நாங்க இஞ்ச இருக்கிறது. பிள்ளையள் மூண்டு பேரும் ஏ எல் முடிச்சுட்டாளவ. நான் கூலி வேலைக்கு போறனான். மூத்தவள் கடைல வேலை செய்யுறாள். இரண்டாவது பிள்ளை கலியாணம் கட்டி பக்கத்தில தான் இருக்கிறாள். மூண்டாவது பிள்ளை கம்பசில படிக்கிறாள்..
இப்பிடி எங்கட சீவியம் இப்பிடியே போகுது..
இப்ப மூத்தவள யாருட்டயாச்சும் பிடிச்சு குடுக்கலாம் எண்டா சீதணம் கனக்க கேக்கிறாங்கள். அவளுக்கு கால்ல ஒரு காயம் இருக்கு.. அது முள்ளிவாய்க்கால்ல. செல் பீஸ் அவளின்ர கால்ல பட்டது. நடக்கேக்க காயத்தால கால் வளைஞ்ச மாதிரி தெரியும். அதால அவளுக்கு சீதணம் கனக்க குடுக்கத்தானே வேணும்.. எங்களிட்ட அந்தளவுக்கு வசதி இல்லை தம்பி இனி கடவுள் விட்ட வழிதான் தம்பி,

என்ர புள்ள இருந்தா நாங்க இப்பிடி கஸ்டப்பட விட்டிருக்க மாட்டான்.. இஞ்ச இப்பத்தைய சனங்கள் எல்லாத்தையும் மறந்து திரியுதுகள். ஒரே குடியும் கும்மாளமும் ரவுடியள் மாதிரி இப்பத்தய இளசுகள்,..
எல்லாம் எங்க போய் முடியுமோ தெரியாது என்னடா.
நீயாவது நல்ல புள்ளையா இரப்பு...
அந்த அம்மா சொல்லும் போது நெஞ்சு கனத்தது.
எங்கட பிள்ளையள் என்னத்துக்கு செத்துப்போனவங்கள் என்டு யோசிக்கிறதுக்கு கூட இப்ப இஞ்ச ஒரு மனிசரில்லை. எல்லாம் ஒண்டையொண்டு பிடிச்சு தின்னுற மாதிரி திமிர் பிடிச்செல்லே இப்ப அலையுதுகள்.. போனும் மோட்டச்சைக்கிளும் ரீவீ யும் மட்டும் தான் வாழ்க்கை எண்டு நினைக்குதுகள். பழக்க வழக்கங்கள் எல்லாம் சரி இல்லை இப்ப...
ம்ம்.. காலம் எல்லாத்துக்கும் பதில் சொல்லும் தம்பி எண்டு சொன்ன அம்மா நீண்ட ஒரு பெருமூச்சு விட்டார்,

2007 மாவீரர் நாளுக்கு என்ர புள்ளைட்ட நான் கடைசியாப்போய் வடிவா அழுதுபோட்டு விளக்கெல்லாம் கொழுத்திப்போட்டு வந்தனான்.
அதுக்குப்பிறகு எல்லாமே மாறிப்போச்சு என்னப்பு...,

ஓம் அம்மா என்றேன்.

'மல்லாவி இறங்கிற ஆக்கள் முன்னுக்கு வாங்கோ..!
நடத்துனர் சொன்னபோது தான் மல்லாவிக்கு பஸ் வந்தது தெரிந்தது.
அம்மாவிடம் என்னுடைய போட்டோ ஒன்றை கொடுத்து வீட்டு முகவரியையும் கொடுத்தேன்.
உங்கட மூத்தவளுக்கு என்னை பிடிச்சிருந்தா எங்கட வீட்ட வந்து பாருங்கோ எண்டு அம்மாட்ட சொல்லிப்போட்டு பஸ்ஸிலிருந்து இறங்கி நடந்தேன்.
ஏதோ ஒரு திருப்தி என் மனதில் இழையோடியது.

No comments