வெட்டிப்பேச்சையும் முண்டு கொடுப்பதையும் விடுத்து மக்களுக்கு ஏதாவது செய்யுங்கள்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெறும் வெத்துப் பேச்சுகளையும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு முண்டுகொடுக்கும் பின்கதவு முயற்சிகளையும் விட்டுவிட்டு எம் மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து பிரதியமைச்சர் பதவி பெற்றுக்கொண்ட வியாழேந்திரன் சாடியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிரதியமைச்சர் வியாழேந்திரன் மீண்டும் இணைய முற்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து இன்றைய தினம் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது என்ன செய்தேன் என்பது எனக்கு வாக்களித்த என் உறவுகளுக்கு நன்றாகத் தெரியும். அந்த மக்களின் தேவை என்ன என்பதையும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் நான் நன்கு அறிந்து தான் செய்கின்றேன். 

எனக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு சேர்ந்து மீண்டும் வாக்குக் கேட்க விருப்பமும் இல்லை. அதற்கான எண்ணமும் இல்லை. காரணம் கூட்டமைப்போடு இருந்து மக்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்ற முடியாத குற்ற உணர்வு எனக்கு இருக்கின்றது. கூட்டமைப்பைச் சொல்லி மக்கள் முன்சென்று வாக்குக் கேட்க மனச்சாட்சி எனக்கு இடம்கொடுக்கவில்லை.

இந்த நிலையில் நான் எவ்வாறு கூட்டமைப்போடு இணைய விரும்புவேன். ஊடகங்கள் சில நான் கூட்டமைப்போடு மீண்டும் இணைய முற்படுவதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகளை அமைச்சரூடாக சம்பந்தன் ஐயாவுடன் முன்னெடுத்ததாகவும் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இது முற்றிலும் மகா பொய்யான செய்தியாகும். சம்பந்தன் ஐயாவுடன் பேச வேண்டிய அவசியமோ கூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியமோ எனக்கு இல்லை. ஊடக தர்மத்திற்கு உட்பட்டு நடந்துகொள்ளும் ஊடகவியலாளர்கள் இருபக்க நியாயத்தை அறிந்து செய்திகளை வெளியிட வேண்டும் எனப் பணிவாகக் கேட்டுக் கொள்கின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments