நிதிநெருக்கடி: வடமாகாணசபையும் முடங்குகின்றதா?


கொழும்பில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் காரணமாக வடமாகாணசபையின் செயற்பாடுகள் முடக்க நிலைக்கு சென்றடையலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் திறைசேரி எந்தவொரு கொடுப்பனவுகளையும் விடுவிக்காது இருந்துவருகின்ற நிலையில் வடமாகாண சபையின் நிர்வாகத்தை கொண்டு செல்லமுடியாது திண்டாடிவருவதாக சொல்லப்படுகின்றது.

இதனிடையே நாடாளுமன்றத்தில் புதிய தரப்பினர் பெரும்பான்மையை உறுதிப்படுத்தும் வரை ஏற்கனவே இருந்த அரசாங்கத்தையே தான் ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் அறிவித்துள்ள நிலையில், அது தொடர்பில் பொதுநிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சராக பதவி வகித்த ரஞ்சித் மத்தும பண்டார சகல அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவன பிரதானிகளிற்கு விசேட அறிவித்தலொன்றை விடுத்துள்ளார்.

அவரது கையொப்பத்துடன் நேற்று முன்தினம் மாலை, சகல அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் என குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ஒக்ரோபர் 26ம் திகதி முதல் இதுவரை அமைச்சர்கள் அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டமை, புதிய பிரதமர் நியமனம் மற்றும் அமைச்சரவை நியமிக்கப்பட்டமை என்பன அரசியலமைப்பிற்கு முரணானது என நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நாடாளுமன்ற சபாநாயகர், புதிய தரப்பினர் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை முன்பிருந்த நிலைமையையே தான் ஏற்றுக்கொள்வதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் புதிய தரப்பினரால் அரச ஊழியர்களுக்கு வெளியிடப்படும் உத்தரவுகள் சட்டத்திற்கு விரோதமானதும், செல்லுபடியற்றதுமாகும். இவ்வாறான நிலைமையில் குறித்த தரப்பினருக்கு ஒத்துழைப்பை வழங்குதல் அல்லது விடுக்கும் உத்தரவுகளை பின்பற்றுவத தொடர்பாக இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.

செல்லுபடியற்ற மற்றும் சட்டவிரோத உத்தரவுகளை செயற்படுத்துவது தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் அதன்போது செலவாகும் நிதி மற்றும் அரசாங்கத்திற்கு ஏற்படும் நஷ்டம் இந்த உத்தரவுகளை பின்பற்றுவோரிடமிருந்து அறவிடப்படுவதற்கு நடவடிக்கையெடுப்படும் என்பதை அறிவித்துக் கொள்கிறோம் என அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே வடமாகாணத்தில் மத்திய அரசின் நிதியில் மாவட்டச் செயலகங்கள் ஊடாக மேற்கொள்ளும் திட்டங்களிற்காக மொத்தமாக 8 ஆயிரத்து 628 மில்லியன் ஒதுக்கப்பட்ட போதிலும் நேற்றுவரையில் 6 ஆயிரத்து 683 மில்லியன் ரூபா பணமே மாவட்டச் செயலகங்களிற்கு விடுவிக்கப்பட்டதாக மாவட்டச் செயலகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

வடக்கின் 5 மாவட்டத்திற்கும் ஒதுக்கிய குறித்த தொகையில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 2 ஆயிரத்து 420 மில்லியன் ரூபா ஒதுக்கிய நிலையில் 2 ஆயிரத்து 320 மில்லியன் ரூபாவும் , முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஆயிரத்து 882.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் ஆயிரத்து 128.5 மில்லியன் ரூபாவும் , வவுனியா மாவட்டத்திற்கு ஆயிரத்து 691 மில்லியன் ரூபா அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆயிரத்து 65 மில்லியனும் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று மன்னார் மாவட்டத்திற்கு ஆயிரத்து 407.5 மில்லியன் அனுமதிக்கப்பட்ட நிலையில் இதுவரையில் ஆயிரத்து 190 மில்லியன் ரூபாவும் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கிளிநொச்சி மாவட்டந்திற்காக ஆயிரத்து 187 மில்லியட் ரூபா பணம் அனுமதிக்கப்பட்ட நிலையில் 980 மில்லியன் ரூபா பணம் விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்தவகையில் வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட 5 மாவட்டங்களிற்கும் ஆயிரத்து 945 மில்லியன் ரூபா பணம் இந்த ஆண்டிற்கான நிதி இதுவரை கிடைக்கவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. நடப்பாண்டு நிறைவடைவதற்கு இன்னமும் 53 நாட்களே உள்ள நிலையில் குறித்த நிதிகள் இதுவரை கிடைக்காதுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

No comments