இன்றைய நாடாளுமன்றம்: நிராகரித்த மைத்திரி!

பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது அரசுக்கு எதிராக நாடாளுமன்றில் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கரு ஜெயசூர்ய அனுப்பிவைத்த கடிதத்தை ஜனாதிபதி நிராகரித்தார் என்று அரச ஊடகமான ரூபவாகினி செய்திவெளியிட்டது.
அரச ஊடகமான ரூபவாகினி தற்போது ஜனாதிபதியின் ஆளுகைககுள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற அமர்வு இன்று கூட்டப்பட்டது சட்டத்துக்கு முரணானது. அந்தச் சபையில் எடுக்கப்பட்ட தீர்மானம் செல்லுபடியற்றது என்று அரசு முடிவுக்கு வந்துள்ளது என்றும் ரூபாவாகினிச் செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கும் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஆவணம் சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளிக்கப்பட்டது.
ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் இரத்நாயக்க, 122 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெப்பங்களை சபாநாயகரிடம் சமர்ப்பித்தார். இந்த ஆவணத்தில், ஜேவிபி உறுப்பினர்கள் ஆறு பேர், ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 102 பேர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 14 பேர் ஒப்பமிட்டுள்ளனர்.
கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட ஈபிஆர்எல்எவ் உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும், அண்மையில் மகிந்த அரசில் இணைந்து கொண்ட வியாழேந்திரனும், மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான இந்தப் பிரேரணையில் கையெழுத்திடவில்லை.
நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும், அதற்கு ஆதரவளித்த 122 உறுப்பினர்களின் கையொப்பம் என்பன, மேலதிக நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சபாநாயகரால் இன்று நண்பகல் அனுப்பி வைக்கப்பட்டன.

No comments