தேர்தல் கூட்டணி குறித்து தீவிரமாக ஆராய்கிறது தமிழரசு


பாராளுமன்றத் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் புதிய கட்சிகள் அல்லது அமைப்புக்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் ஆராயப்பட உள்ளதாக கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, வெற்றியைப் பெறுக் கொள்வது, வேறு தரப்புக்களை இணைத்துக் கொள்வது தொடர்பாக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, புளொட், தமிழரசு ஆகிய கட்சிகளும் ஜனநாயகப் போராளிகள் அமைப்பினரும் இன்னும் சில தினங்களில் கூடி கலந்துரையாடி ஓரிரு நாட்களில் அது தொடர்பான இறுதி முடிவெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் நலன் பேணும் அமைப்பின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உணவுப் பொருட்களை சேகரிக்கும் பணியை மாவை சேனாதிராஜா பருத்தித்துறையில் நேற்று (12) ஆரம்பித்து வைத்தார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மாவை சேனாதிராஜாவிடம் பொதுத் தேர்தலில் கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவு மற்றும் கூட்டணி குறித்து ஊடகவியியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, எதிர்பாராத வகையில் ஜனாதிபதி பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பை வழங்கியிருக்கின்றார். ஆனால் அந்த அறிவிப்பு என்பது அரசியலமைப்பை மீறிய, அரசியலமைப்பிற்கு எதிரானது என்ற நிலை இருக்கின்றது. அவ்வாறு அரசியலமைப்பை மீறி உரிய காலத்திற்கு முன்னர் அறிவித்தல் கொடுத்தது தவறு என்ற அடிப்படையிலும் உச்ச நீதிமன்றத்திலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல கட்சிகள் பொது அமைப்புக்கள் வழக்கைத் தாக்கல் செய்திருக்கின்றனர்.

ஆயினும் அவ்வாறு ஒரு தேர்தல் நடைபெறுமாக இருந்தால் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எங்களுடைய பாராளுமன்றக் குழு இரண்டொரு தினங்களில் அதிகமாக அதைப் பற்றி ஆராய்ந்து அடுத்த நடவடிக்கைக்கு செல்லக் கூடிய தீர்மானங்களை எடுப்பார்கள்.

அதனை விட மிக முக்கியமாக சட்டபூர்வமாக இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய வீட்டுச் சின்னத்தில் கூட்டமைப்பாக தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்திருக்கின்றோம். அந்த அடிப்படையில் நாளை கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் அதாவது ரெலோ மற்றும் புளொட் இயக்கங்கள் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள். தலைவர்கள் நாங்கள் எல்லோரும் கூடி இந்தத் தேர்தலில் நாங்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும். எவ்வாறு வெற்றியைப் பெற வேண்டும். என்பது தொடர்பிலும் அதில் மேலும் அமைப்புக்களை இணைத்துக் கொள்ளலாமா அதற்கான வாய்ப்புக்கள் இருந்தால் அவ்வாறு செய்ய வேண்டும் என்ற விடயங்களையும் நாங்கள் பேசித் தீர்மானிக்க இருக்கின்றோம்.

அதனைத் தொடர்ந்து வேட்பு மனுவைத் தாக்கல் செய்வதற்கு முன்னர் அவ்வாறான நிலைமைகளில் மனம் திறந்த ஏற்றுக் கொண்டு தேர்தல்களிலே நாங்கள் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. அதற்கமைய அத் தேர்தலில் கூட்டமைப்பை மக்கள் மீண்டும் பலமாக ஒன்றுபட்டு ஆதரிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கின்றோம். இந் நிலைமையில் அந்த தேர்தல் வேலைகளையும் தாங்கள் ஆரம்பிக்க இருக்கின்றதாகவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

No comments