சுமந்திரனின் ஆட்சேபனை நிராகரிப்பு?


கூட்டமைப்பின் சார்பில் தெரிவுசெய்யப்பட்ட வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் சதீசின் நகரசபை உறுப்புரிமையை நீக்க தமிழரசுக்கட்சி எடுத்த நடவடிக்கைக்கான தடையை நீதிமன்றம் நீடித்துள்ளது.தமிழரசின் நடவடிக்கைக்கு எதிராக சதீசினால் தமிழரசுக்கட்சிக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அத்தீர்மானத்திற்கு எதிராக தடைக்கட்டளை ஒன்று பெறப்பட்டிருந்தது. குறித்த தடைக்கட்டளையை நீக்கி வழக்கையும் தள்ளுபடி செய்ய கோரி ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனால் பூர்வாங்க ஆட்சேபனை எழுப்பப்பட்டு சமர்ப்பணம் செய்யப்பட்டிருந்தது.

இதனிடையே குறித்த சமர்ப்பணம் சட்ட வலுவற்றதென்று சதீசின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி வி.மணிவண்ணனால் ஆட்சேபிக்கப்பட்டு குறித்த ஆட்சேபனையை நிராகரிக்க கோரி அவராலும் ஒரு சமர்ப்பணம் செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில் சட்டத்தரணி சுமந்திரனின் சமர்ப்பணத்தை நீதிமன்று நிராகரித்து தீர்ப்பளித்துள்ளதுடன் சதீஸ் தொடர்பில் நடவடிக்கையெடுக்க விடுக்கப்பட்டுள்ள  தடையை மேலும் நீடித்துள்ளது.

ஏற்கனவே வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர் பிரகாஸின் வழக்கிலும் இதே போன்ற சமர்ப்பணம் ஒன்றை செய்துவிட்டு குறித்த சமர்ப்பணத்திற்கு பயந்து பிரகாஸ் வழக்கை வாபஸ் வாங்கியிருந்தார். சமர்ப்பணத்திற்கு பயந்தே வழக்கு அப்போது மீளப்பெறப்பட்டிருந்ததாக சட்டத்தரணி சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

ஆயினும் வடமாகாணசபை தேர்தலில் இடம் தரப்படுமென்ற அடிப்படையில் இணக்கமேற்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகின்றது.

No comments