Header Shelvazug

http://shelvazug.com/

பிரிந்து செல்வதென்பது உறுதியாயிற்று வெளியேறுவதா வெளியேற்றப்படுவதா? பனங்காட்டான்

இருதரப்புக்குமிடையில் விவாகரத்து என்பது ஓரளவுக்கு உறுதியாகிவிட்டது. இவ்விடயத்தில் தாங்கள் முந்திவிடக் கூடாது என்பதில் இரு தரப்பும் விழிப்பாக உள்ளன. பிந்தும் அணிக்கே வாக்கு வங்கி அதிகரிக்கும் என்பது அரசியல் செய்பவர்களுக்கு தெரியாததல்ல.

வடக்கிலும் தெற்கிலும் கடந்த சில வாரங்களாக சூடு பிடித்திருந்த அரசியற் களம் தற்போது கொதிநிலைக்கு வந்துள்ளது.

இந்தப் பிரச்சனைகள் கட்சிகள் சார்ந்ததாக அல்லாமல், குறிப்பிட்ட சில பிரமுகர்களுக்கிடையிலானதாக தொடர்வதுவே இதன் முக்கியத்துவம்.

வடக்கின் பிரச்சனை முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்குமிடையிலானது.

தெற்கின் பிரச்சினைகள் பல தரப்புகள் சம்பந்தப்பட்டது. பிரதமர் ரணிலுக்கும் ஜனாதிபதி மைத்திரிக்குமிடையில் காணப்பட்ட ஒவ்வாமை, இப்போது முறுகல் நிலையும் தாண்டி யாரை யார் வீழ்த்துவது என்ற நிலைக்கு வந்துள்ளது.

அதேசமயம், மைத்திரிக்கும் பொலிஸ் மாஅதிபருக்குமிடையில் பாரிய விரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் விமர்சிக்கும் கடைநிலைக்கு வந்துள்ளது.

பொலிஸ் மாஅதிபர் தாமாக முன்வந்து பதவி விலகாவிட்டால் அவரை ஜனாதிபதி பதவிநீக்கம் செய்யும் முடிவை எடுப்பாரென்று அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன ஊடக சந்திப்பில் கூறியுள்ளாரென்றால், நிலைமையின் ஆழநீளத்தை உணர்ந்துகொள்ள முடிகிறது.

மறுபுறத்தில், மைத்திரிக்கும் மகிந்தவுக்குமிடையிலான பிச்சல் பிடுங்கல் கட்சி ரீதியாகவன்றி வேறு நிலைக்குச் சென்றுள்ளது. இருவருமே தேர்தல்களின்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாகவே தெரிவானவர்கள். ஆனால் செயற்பாட்டில் அப்படியில்லை.

சுதந்திரக்கட்சியினர் சிலரால் உருவாக்கப்பட்டு இடதுசாரிகளையும் உள்வாங்கிய பொதுஜன முன்னணியின் தலைமைப் பதவிக்கு மகிந்த தயாராகிறார்.

சமகாலத்தில் மைத்திரியுடன் இணைவதற்கும் ஒற்றைக்காலில் மகிந்த நிற்கிறார். அரசாங்கத்திலிருந்து ரணிலை வெளியேற்றிவிட்டு பிரதமர் பதவியை அபகரிப்பதற்காக மகிந்தவின் தூதுவர்கள் அடிக்கடி மைத்திரியை சந்திக்கின்றனர்.

இப்படியாக இரண்டும் கெட்டான் அரசியல் சூழலில் தமிழருக்கான எந்தத் தீர்வும் கிடைக்கப் போவதில்லை என்பதை தமிழரசுக் கட்சியினரின் மேடைப்பேச்சுகளும் அறிக்கைகளும் சூசமகாகவன்றி வெளிப்படையாகவே தெரிவிக்கின்றன.

நம்பிக்கொண்டு உள்ளே வரவேற்கப்பட்டவருடன் (வடமாகாண முதலமைச்சர்) நம்பிக்கையீனத்தால் எழுந்துள்ள பிரச்சனை ஒருபுறம். நம்பிக்கையுடன் ஆட்சிக்கு கொண்டுவரப்பட்டவர்களால் (மைத்திரி - ரணில் கூட்டரசு) ஏமாற்றப்படுவதால் ஏற்படும் தலைகுனிவு மறுபுறம். இந்த இரண்டு பிரச்சனைகளும் தமிழரசுக் கட்சியியை பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழர்களின் அரசியல் பிரச்சனை தொடர்பாக எடுத்த அக்கறையின் அளவுக்கு வடமாகாண சபையின் செயற்பாடுகளில் எடுக்கவில்லை என்றவாறு, சில தினங்களுக்கு முன்னர் சுமந்திரன் தெரிவித்த கருத்தினை முன்வைத்து, இந்த விவகாரத்தை அணுகுவது பொருத்தமானது.

சுமந்திரனின் இந்தக் கருத்து இரு வேறுபட்ட விடயங்களை ஒரே நேரத்தில் எடுத்தியம்புகிறது.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழர்களின் அரசியல் பிரச்சனைகளை ஆத்மசுத்தியாகவும் நேர்த்தியாகவும் மேற்கொண்டு வருகிறார் என்பதை சுமந்திரன் இப்போதாவது ஏற்றுக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது.

அரசியல் பிரச்சனைத் தீர்வுக்கு அதிகாரப்பகிர்வு அவசியம் என்பதை முதலமைச்சர் வலியுறுத்தி வந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தமிழரின் பூர்வீக மண்ணைப் பாதுகாப்பதில் தம்மாலான பங்களிப்பைச் செய்து வருகிறார்.

இதற்காக மாகாண சபைக்கு காணி அதிகாரம், காவற்துறை அதிகாரம் அவசியம் என்பதை அவர் எப்போதும் எடுத்துக்கூறிவந்துள்ளார்.

அத்துடன், வடமாகாண முதலமைச்சர் நிதியம் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தொடர்ந்து கைவிரித்து வருகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினரல்ல. தமது வேலைத்திட்டங்களையும், தேவைகளையும் மாகாணசபைக் கூட்டங்களிலும், ராஜதந்திரிகள் சந்திப்புகளிலும், ஊடக மாநாடுகளிலும் மட்டுமே அவரால் தெரியப்படுத்த முடியும்.

இதற்காகவே அவர் வாராவாரம் அல்லது அதற்கும் மேலாக கேள்வி - பதில் பாணியில் பல விடயங்களை பொதுமக்கள் கவனத்துக்கு எடுத்து வருகிறார். கிடைக்கும் சந்தர்ப்பங்களைத் தவறவிடாது ஆங்கில, சிங்கள ஊடகங்களுக்கு செவ்விகள் வழியாக பிரச்சனைகளை வெளிப்படுத்தி வருகிறார்.

அரசாங்கம் ஒதுக்கிய நிதியை முழுமையாக வழங்காத நிலையில் முதலமைச்சரால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி அவர் தரப்பால் பலதடவை எழுப்பப்பட்டுள்ளது.

தங்கள் கட்சியின் ஆளுமையிலுள்ள வடமாகாண சபையின் அதிகாரம், நிதித் தேவைகளை தமிழரசுக்கட்சியை உள்ளடக்கிய கூட்டமைப்பினரே, தங்களால் கொண்டுவரப்பட்டு தாங்கள் ஆதரித்துவரும் மைத்திரி - ரணில் அரசுடன் பேசி தீர்க்கவேண்டிய கடப்பாடுடையவர்கள்.

ஆனால், இதனைச் செய்யாதுவிட்டு மாகாணசபை தனது கடமையைச் சரியாக செய்யவில்யென்று சுமந்திரன் கூறுவது அரசியல் உள்நோக்கம் கருதியது.

வடமாகாணசபையை இயங்கா நிலைக்கு கொண்டுசென்றது யார் என்று சுமந்திரன் தம்மைத்தாமே கேட்டால், அதற்கான பதில் அவர் உள்ளிருந்தே வரும்.

இதனை நினைவூட்டுவதற்கு சுமந்திரனை 2017ம் ஆண்டு யூன் மாதம் 14ம் திகதிக்கு அழைத்துச்செல்ல வேண்டும்.

யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அன்றையதினம் என்ன நடைபெற்றது?

முதலமைச்சர் விக்னேஸ்வரளுக்க எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு இந்த யூன் 14ம் திகதியே சுமந்திரனால் கையொப்ப வேட்டை நடத்தப்பட்டது. இது காதோடு காதாக இடம்பெற்றது. இந்தப்பிரேரணை முன்னெடுப்பின் பிதாமகர் சுமந்திரனே.

வடமாகாண சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் 38பேர். இதில் கூட்டமைப்புக்கு 30 உறுப்பினர்கள்.

எதிர்க்கட்சித் தலைவரையும் உள்வாங்கி தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களையும் சேர்த்து 21 பேரின் ஒப்பத்துடன் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆளுநர் றெஜினோல்ட் குரேயிடம் கையளிக்கப்பட்டது.

இந்தப் பிரேரணையை சிரித்தவாறு ஆளுநரிடம் கையளித்தவர் சபையின் அக்கிராசனரான சி.வி.கே.சிவஞானம். 21 பேர் ஒப்பமிட்டதால் அறுதிப் பெரும்பான்மையுடன் பிரேரணை நிறைவேறுமென்று நிச்சயமாக நம்பியதாலும், முதலமைச்சர் விக்னேஸ்வரனின் பதவி நாட்கள் எண்ணப்படுவதாகவும் கருதியே ஒப்பமிட்டவர்கள் படத்திற்கு காட்சி கொடுத்ததையும் ஊடகங்கள் வெளிக்காட்டின.

சபையின் அக்கிராசனர் அப்பதவியின் இலக்கணப்படி எந்தப்பக்கமும் சாயாது நடுநிலை வகிக்க வேண்டியவர். ஆனால், இங்கு அக்கிராசனர் சிவஞானம் தாம் தெரிவுசெய்யப்பட்ட தமிழரசுக் கட்சி நிலை சார்ந்து எடுத்துச் சென்றது தவறென்பது அவருக்கு நன்கு தெரியும்.

பிரேரணையைக் கையளிக்கும் குழுவில் தாம் ஒருவராக சென்றதென்று கூறிய சிவஞானம், யாரோ ஒருவர் தமது கைக்குள் பிரேரணையைத் திணித்து ஆளுநரிடம் கொடுக்குமாறு சொன்னதாகவும், அந்த நபரை தம்மால் அடையாளம்காட்ட முடியாதுள்ளது என்று கூறிய கதை நம்பமுடியாததும் நகைச்சுவையானதும்.

யூன் 15ம் திகதி 15 உறுப்பினர்களின் ஒப்பத்தோடு முதலமைச்சர் விக்னேஸ்வரனை ஆதரிக்கும் ஆவணம் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது. இதனைக் கையளித்தவர் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் ஒன்றான ரெலேவைச்சேர்ந்த சிவாஜிலிங்கம்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் விடயத்தில் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதை இது அம்பலமாக்கிற்று.

யூன் 16ம் திகதி கடையடைப்பும் பாரிய ஆதரவு ஊர்வலமும் திடீரென இடம்பெற்றது. முதலமைச்சர் விக்னேஸ்வளுக்கு மக்களின்; அமோக ஆதரவை வெளிப்படுத்திய இந்த ஆர்ப்பாட்டம், சுமந்திரனின் நடவடிக்கைகளைக் கண்டிப்பதாக மாற்றம் பெற்றது.

அடுத்துவந்த நாட்களில் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் வடமாகாண ஆளுநருடம் தொடர்புகொண்டு, சுமந்திரன் குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் வைவிடுவதாக அறிவித்ததோடு இந்த விடயம் தற்காலிகமாக முற்றுப்பெற்றது.
குருவும் மாணவனும் மோதுவதாகக் கூறிக்கொண்டு முதலமைச்சர் விக்னேஸ்வரனும் சுமந்திரனும் தங்களது காய்களை நகர்த்த ஆரம்பித்தனர்.

சம்பந்தனுக்குத் தெரியாது சுமந்திரன் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்னெடுத்தாரா? அல்லது விக்னேஸ்வரனுக்கு முதல் எச்சரிக்கையாக இருக்கட்டுமென சம்பந்தனின் ஆசியுடன் சுமந்திரன் இதனை மேற்கொண்டாரா?

அப்படியானால், இதனைக் கைவிடும் முடிவை சம்பந்தன் எடுக்கக் காரணமென்ன!

இராமாயணத்தில் இராமனுக்கு முடிசூட்டும்போது அவனது உயிர்த்தம்பி இலட்சுமணன் சிரித்தத்கு பல காரணங்கள் கூறப்பட்டது. அதுபோன்றே சம்பந்தனின் முடிவுக்கும் பல காரணங்கள் கூறப்பட்டன.

இதற்கு முடிவுரை கூறுவதுபோல முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தவாரம் விளக்கம் கொடுத்துள்ளார். “பொதுமக்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக நடவடிக்கையெடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால், சம்பந்தன் இந்த முடிவை எடுத்தார்” என்ற பதில் 15 மாதங்களின் பின்னர் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடமிருந்து வந்துள்ளது.

இப்போது நிலைமை வேறாக மாறிவிட்டது. முதலமைச்சர் சம்பந்தனும் ஒருவரையொருவர் சந்திக்கும் வாய்ப்பு குறைந்துள்ளது. இவ்வேளையில் புதியதொரு குண்டைத்தூக்கி இருதரப்பும் வீசியுள்ளன.

வடமாகாணசபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்? விக்னேஸ்வரனுக்கு நிச்சயமாக இல்லையென்று சுமந்திரன் அடித்துச்சொல்லி வருகிறார்.

இ;ப்போது கூட்டமைப்பின் தலைவர் யார் என்ற கோள்வியோடு புதிய முன்னணியின் கீழ் தாம் போட்டியிடப் போவதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் அறிவித்துவிட்டார்.

விவாகரத்து என்பது ஓரளவுக்கு உறுதியாகிவிட்டது. இவ்விடயத்தில் தாங்கள் முந்திவிடக் கூடாது என்பதில் இரு தரப்பும் விழிப்பாக உள்ளன.

பிந்தும் அணிக்கே வாக்கு வங்கி அதிகரிக்கும் என்பது அரசியல் செய்பவர்களுக்கு தெரியாததல்ல!

No comments