கதிரை முக்கியம்:செல்வம் அடைக்கலநாதன்!


நாங்கள் ஒற்றுமையாக இருப்பதன் மூலமே தென்னிலங்கை கட்சிகளிற்கு சவாலாக இருக்க முடியும்.இல்லையெனின் எங்களுடைய நடைமுறைகளை பார்த்தால் பிரித்தாளும் தந்திரங்களை கையாளும் தென்னிலங்கை தன்னுடைய செயற்பாட்டினை வடக்கிலே துரிதமாக மேற்கொள்ளுமென செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக தனது நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் பதவி பறிபோய்விடுமென்ற அச்சம் செல்வம் அடைக்கலநாதனை ஆட்டிப்படைத்துவருகின்றது.

வடமாகாண முதலமைச்சர் புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட போதே செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.மேலும் இது தொடர்பாக தெரிவிக்கையில், மக்களை பிரிக்கின்ற சந்தர்ப்பத்தை உருவாக்க கூடாது என்பது எமது கட்சியின் கருத்து. ஒற்றுமை தொடர்பாக முயற்சிகளை நாம் எடுத்துக்கொண்டு இருக்கின்றோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனுடனும், முதலமைச்சருடனும் இது தொடர்பாக கதைத்திருக்கிறோம். குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னும் இரண்டு மூன்று கட்சிகளாக பிரிகின்ற போது ஒரு பெரிய ஆபத்தை நாங்கள் சந்திக்க வேண்டும்.

போர் காலத்தில் கூட யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் கால் பதித்திருந்தது. தற்போது உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பல இடங்களை ஐக்கிய தேசியக்கட்சியும், சிறீலங்கா சுதந்திரக்கட்சியுமே கைப்பற்றின.

தற்போது ஐக்கிய தேசிய கட்சி சார்பாக ரிசாட் பதியுதீன் அமைச்சராக இருக்கின்றார், சுதந்திர கட்சி சார்பாக அங்கஜன் மற்றும் மஸ்தான் ஆகியோர் பிரதி அமைச்சராக வடமாகாணத்தை பிரதிநிதிப்படுத்துகின்றனர்.

இந்நிலையில் எமது மக்கள் பிரிந்து வாக்களித்தல் மற்றும் எமது கட்சிகள் பிரிந்து இருக்கின்ற போது மக்கள் ஒரு முடிவை எடுக்கின்ற நிலைமைவரும். மக்கள் தங்களிற்கு ஆயிரம் தேவைகள் இருக்கின்றது.

எனவே இத்தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இவர்களால்தான் முடியும் என்கின்ற சிந்தனைக்கு மாறுகின்ற வாய்ப்பு கூட இருக்கின்றது.

கொள்கையோடு இருக்கின்ற மக்கள் கூட வாக்களிக்க போகாத நிலைமை காணப்படுகின்றது. நாங்களும் கொள்கையை பேசிவிட்டு இருக்கின்றோம், இதனால் ஐக்கிய தேசியக்கட்சியும், சிறீலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து வடமாகாணசபையை கைப்பற்றுவதற்கான அபாயம் உள்ளது.

சரி பிழை எப்போதும் இருக்கும் எனவே அதனை பேசி தீர்க்க வேண்டும்.

ஒருவரை ஒருவர் தாக்கி பேசியும் கொள்கையை நாங்கள்தான் வைத்திருக்கின்றோம் என்று கூறி மக்களுடைய வாக்குகளை பெறுவதும் குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் என்பன ஆரம்பத்தில் அரசுக்கு எதிராக பேசி அடி வாங்கி உதை வாங்கி, படுகொலை செய்யப்பட்ட வரலாறுகளும் உண்டு.

அதற்காக நாங்கள் கொள்கையை விட்டுட்டு போனோம் என்று இல்லை.

முதலமைச்சர் புதிய கட்சி தொடங்கப்போகின்றார் என்று இதுவரைக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

அதனை அறிவிக்காத வரை நான் அதற்கு கருத்து சொல்ல முடியாது.ஆனால் நாங்கள் ஒற்றுமையாக இருப்பதன் மூலமே தென்னிலங்கை கட்சிகளிற்கு சவாலாக இருக்க முடியும்.இல்லை எனின் எங்களுடைய நடைமுறைகளை பார்த்தால் பிரித்தாளும் தந்திரங்களை கையாளும் தென்னிலங்கை தன்னுடைய செயற்பாட்டினை வடக்கிலே துரிதமாக மேற்கொள்ளும்.

மேலும் கிழக்கிலே இதற்கான சந்தர்ப்பம் கூடுதலாகவே உள்ளது. அங்கே முதலமைச்சர் யார் என்ற பிரச்சனைகள் பல உள்ளன. எனவே தமிழ் சமூகம் மற்றும் தமிழ் கட்சிகள் பிரிந்து நிற்கின்ற நிலைமை ஏற்படுமேயானால். எமது கொள்கை, இலட்சியம் என்பன வீணாகி போகின்ற நிலையேற்படும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

No comments