மோடியைச் சந்திக்கிறார் ரணில்


சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த வார பிற்பகுதியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்புப் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக ‘ ஹிந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும், 19ஆம் , 20ஆம் நாள்களில் புதுடெல்லியில் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இதன்போது அவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டவர்களுடன் உயர்மட்டச் சந்திப்புகளை நடத்தவுள்ளார்.

இந்தப் பயணம் இரண்டு தரப்புகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவில் இந்தியாவின் உதவியுடனான திட்டங்களை முன்னெடுப்பதில் காணப்படும் தாமதம் குறித்து, புதுடெல்லி கவலை கொண்டுள்ளது.

இந்தியாவையும், சீனாவையும் சமநிலைப்படுத்தும் விடயத்தில், கொழும்பு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது.

இந்தியத் தரப்பில், மத்தல விமான நிலையம், பலாலி விமான நிலையம், திருகோணமலை எண்ணெய் தாங்கிகள், கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் முனையம், கரவலப்பிட்டிய எரிவாயு மின் நிலையம் உள்ளிட்டவை முன்னுரிமைக்குரிய திட்டங்களாக உள்ளன.

எனினும், இருதரப்பு கலந்துரையாடல்கள், மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு, மற்றும் வணிக ஒத்துழைப்பு போன்ற கூட்டு உடன்பாடுகள் செய்து கொள்ளப்பட்ட போதும், இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை.

சிலவற்றில் அரசியல் காரணங்களாலும், ஏனைய அதிகாரப் பிரச்சினைகளாலும், இந்த திட்டங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, தமது பெயரை வெளியிட விரும்பாத கொழும்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்தல விமான நிலையம், திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் போன்ற சில திட்டங்களில் இந்தியாவின் மூலோபாய நலன்கள் உள்ளன.

எனினும் மத்தல விமான நிலையம் தொடர்பாக கடந்த சில மாதங்களாக, புதுடெல்லியும் கொழும்பும் முரண்பட்ட தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

இந்த நிலையில் புதுடெல்லியில் நடக்கப் போகும் கலந்துரையாடல்கள், இந்தத் திட்டங்களை விரைவுபடுத்த உதவும் என்று நம்புவதாக இருதரப்பு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கடந்த மாதம் புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசி, ஒரு மாதத்துக்குப் பின்னர், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியப் பிரதமரைச் சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments