நாடாளுமன்றினை கூட்டுவது தொடர்பில் குடுமிப்பிடி!

தேர்தலை தொடர்ந்து ஒத்திவைப்பவர்கள் நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்தி வைப்பது தொடர்பில் பேசமுடியாதென இலங்கையின் புதிய பிரதமர் மஹிந்த தெரிவித்துள்ளார்.அத்துடன் எதிர்வரும் 16ஆம் திகதி வரை நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஒத்தி வைத்துள்ளமைத் தொடர்பில் சில தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளமைத் தொடர்பில் குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களே ஜனநாயகத்தின் வலிமையான செயற்பாடான தேர்தலை தொடர்ந்து ஒத்திவைப்பதாகத் தெரிவித்தார்.

அத்துடன் நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பது புதிய விடயமல்லவெனவும் சகல ஜனாதிபதியும் சந்தர்ப்பத்துக்கு அமைய நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்கமுடியுமெனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை  உடனடியாகக் கூட்டி, ஸ்திரத்தன்மை உருவாக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய, அவ்வாறு இல்லாவிடின் ஜனநாயக உரிமையைப் பாதுகாப்பதற்காக, மாற்றுவழியைத் தேடி மக்கள் செல்வதைத் தடுக்கமுடியாது என்றும் தெரிவித்துள்ளார்.  

இதனிடையே பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்ததுடன், நாடாளுமன்றத்தை,  நவம்பர் மாதம் 16ஆம் திகதிக்கு, கடந்த 27ஆம் திகதியன்று ஒத்திவைத்தார்.  

இந்நிலையில், நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு, சர்வதேச நாடுகள், சர்வதேச அமைப்புகள், ஜனாதிபதியிடம் வலியுறுத்தின. அதுதொடர்பில், சபாநாயகர் கரு ஜயசூரியவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஏற்கெனவே கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.  

அதன்பின்னர், கட்சித்தலைவர்களின் கூட்டம், நாடாளுமன்றத்தில் நேற்று (30) நடைபெற்றது. அதன்போது, தங்களுடைய உரிமைகள் மற்றும் வரப்பிரசாதங்களைப் பாதுகாக்குமாறு, அதற்காக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு, மக்கள் பிரதிநிதிகள் 125க்கும் மேற்பட்டோர் கையொப்பமிட்டு, கடிதமொன்றை சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.   

அதனையடுத்து, சபாநாயகர் கருஜயசூரிய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று (30) அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  

ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சி, ஜே.வி.பி மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளே, “நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிலைநாட்டுவதற்காக உடனடியாக, நாடாளுமன்றத்தைக் கூட்டவும்” என்று கோரியுள்ளன.   


அதன்பின்னர், ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடு, பிரச்சினைக்குள் செல்வதற்கு இடமளிக்காது, ஜனநாயகத்தின் பேரில், நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூடவும் என மேலே குறிப்பிட்ட கட்சிகள் கோரியுள்ளன. அவற்றுக்கு செவிசாய்ப்பது என்னுடைய பொறுப்பாகும். அதனை நிறைவேற்றவேண்டுமாயின் நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டி, பெரும்பான்மையை கொண்டிருக்கும் கட்சிக்கு அதிகாரித்தைக் கொடுப்பது மட்டுமேயாகும். அவ்வாறு செய்யாவிடின், ஜனநாயக உரிமை கடத்தப்பட்டதாகும்.  

18 நாட்களுக்கு நாடாளுமன்றத்தை செயலற்றதாக்கியமை, ஜனநாயகம் மற்றும் நல்லாட்சிக்கான வரத்தை பெற்றுக்கொண்ட உங்களால் இடம்பெற்றதை நம்பமுடியவில்லை. அதேபோல, அது சர்வதேசத்தின் முன்னிலையில் நீங்கள் பெற்றிருக்கும் கௌரவத்துக்குப் பங்கத்தை ஏற்படுத்தும்.   

நாட்டுக்குள் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைகளால், தற்போதைக்கு இரண்டு உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன. பல இடங்களில் மக்கள் அன்றாட வாழ்க்கை சீர்குலைந்துள்ளது. ஊடக நிறுவனங்களுக்குள் பலவந்தமாக நுழைந்து, அதன் நிர்வாகம் கடத்தப்பட்டுள்ளது. தொழில்புரியும் இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது. நாங்கள் வரம்பெற்ற, நல்லாட்சி கலாசாரம் இதுவல்ல. உங்களால், பிரதமரும் அமைச்சரவையும் தற்போதைக்கு நியமிக்கப்பட்டுள்ளது.  


ஆகையால், இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்காது நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டி, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம். அவ்வாறு இல்லாவிடின், ஜனநாயக உரிமையைப் பாதுகாப்பதற்காக மாற்றுவழியைத் தேடி மக்கள் செல்வதைத் தடுக்கமுடியாது.   


மக்களின் நலன்புரிக்காக, நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு இடமளிக்காது, ஜனநாயக நாமத்தின் பெயரில் நாடாளுமன்றத்தைக் கூட்டி, நீதியை நிலைநாட்டுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்குமாறு உங்களிடம் மீண்டும் கோரிக்கை விடுகின்றேன் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

No comments